பற்றி எரியும் பிரான்ஸ்! ஏன்? என்ன நடக்கிறது?

பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 ஆவது நாளாக கலவரம் நீடித்து வருகிறது. 
பற்றி எரியும் பிரான்ஸ்! ஏன்? என்ன நடக்கிறது?

பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 ஆவது நாளாக கலவரம் நீடித்து வருகிறது. 

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நான்டேர் (Nanterre) பகுதியில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் ஜூன் 27 (செவ்வாய்க்கிழமை) அன்று காரில் சென்றுள்ளார். அப்போது போக்குவரத்து சிக்னலில் நின்றபோது காரை நிறுத்துமாறு போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். ஆனால், நஹேல் அதற்கு கட்டுப்படாமல் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் போலீசார் மீதே காரை ஏற்றியதாகவும் இதனால் தற்காப்புக்காக நஹேலை போலீசார் சுட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், இளைஞரை போலீசார் துப்பாக்கியால் மிரட்டுவது போலவும் கார் நகர்ந்ததால் பின்னர் போலீசார் நஹேலை சுட்டதும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதுகுறித்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

போராட்டம் - வன்முறை 

இந்த 17 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. நாட்டின் பெரிய நகரமான மார்செய் தற்போது கலவரபூமியாக காட்சியளிக்கிறது. 

போராட்டக்காரர்கள் பொது இடங்களில் உள்ள காா்களுக்குத் தீ வைத்தல், அரசு கட்டடங்கள் மீது தாக்குதல், சூறையாடுதல் என கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை(ஜூன் 28) தொடங்கிய போராட்டம் 4 ஆவது நாளாகத் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் சிறுவர்களும் பலர் கலந்துகொண்டுள்ளனர். 

சில பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மார்செய் நகரின் ஒரு துப்பாக்கிக்கடையில் புகுந்து போராட்டக்காரர்கள் துப்பாக்கியை திருடிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அரசுத் தரப்பில் வன்முறையைக் கட்டுப்படுத்த பதற்றமான பகுதிகளில் 40,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனா். தலைநகா் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டம் தொடா்பாக இதுவரை 1,000 போ் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களில் சுமாா் 200 போலீஸாா் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

'இந்த நிகழ்வு மன்னிக்க முடியாதுதான், எனினும் நாட்டின் அமைதிக்காக மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும், சிறுவர்கள் யாரையும் பெற்றோர்கள் போராட்டத்திற்கு அனுப்ப வேண்டாம்' என்று அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார். மேலும் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதற்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறினாா். 

இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். எனினும் போராட்டங்கள், வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. 

யார் இந்த நஹேல்? 

நான்டேர் பகுதியில் தனது தாய் மௌனியாவுடன் வசித்து வந்த நஹேல், பொருள்களை டெலிவரி செய்யும் வேலை செய்துவந்தார். மேலும் நான்டேர் ரக்பி கிளஃப்பில் (Pirates of Nanterre rugby club) கால்பந்து விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு கல்லூரியில் எலெக்ட்ரிஷீயன் பயிற்சிக்காகச் சேர்ந்திருக்கிறார். ஆனால் சரியாக வகுப்புகளுக்குச் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. அவர் மீது எந்த காவல்துறை வழக்குகளும் இல்லை. எனினும் அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அல்ஜீரியாவை பூர்விகமாகக் கொண்டவர். 

காரணம்? 

நஹேல் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதுதான் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள், கறுப்பினத்தவர்கள் மீது போலீசார் அதிகம் தாக்குதல் நடத்துவதாக அங்கு ஒரு பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. அதாவது அங்கு இனப் பாகுபாடு சமீபமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என்கின்றனர். 

பிரான்ஸ் நாட்டைப் பொருத்தவரை காவல்துறைக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரம் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் 2017ல் அனுமதி வழங்கியது அந்நாட்டு அரசு. 

அதுமுதலே அங்கு காவல்துறையால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

2020 ஆம் ஆண்டு 2 பேர், 2021 ஆம் ஆண்டு 3 பேர், கடந்த ஆண்டு அதிகபட்சமாக 13 பேர் இதுபோன்று சிக்னல்களில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் நஹேல் 3 ஆவது நபர். 2017 முதல் நடக்கும் இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பினத்தவர் அல்லது அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். 

அதுமட்டுமின்றி அரசின் பல்வேறு சட்டதிருத்தங்களால் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீது அதிருப்தியில் இருந்த மக்களும் தற்போது போராட்டக் களத்தில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com