மத்தியப் பிரதேசத்திலும் கரைகிறது பாரதிய ஜனதா? கர்நாடகத்தின் வழியில்...

கர்நாடகத்தைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தொடர்ச்சியாக தலைவர்கள் வெளியேறி காங்கிரஸில்  இணைகின்றனர்... ஏன்?
மத்தியப் பிரதேசத்திலும் கரைகிறது பாரதிய ஜனதா? கர்நாடகத்தின் வழியில்...

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற கர்நாடக மாநிலத்தைப் போலவே தற்போது மத்தியப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தொடர்ச்சியாகத் தொண்டர்களுடன்  தலைவர்கள் வெளியேறி காங்கிரஸில்  இணைகின்றனர்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரும் சிவபுரி மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவருமான  ராகேஷ் குமார் குப்தா,  திங்கள்கிழமை பெரியளவில் கார்களின் அணிவகுப்புடன் 2000-க்கும் அதிகமான தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்தார்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் காங்கிரஸில் சேர்ந்தார். இவர், 2020-ல் ஜோதிராதித்ய  சிந்தியாவுடன் சேர்ந்து காங்கிரஸிலிருந்து வெளியேறியபோதுதான் முதல்வர்  பதவியை கமல்நாத் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

போபால் நகரில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இணைப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் முன் கைகளைக் கட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்டார் குப்தா.

நான் மீண்டும் சொந்த வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். என்னுடைய பெயர், மரியாதை மற்றும் தலைமைப் பண்பு எல்லாவற்றையும் காங்கிரஸ்தான் தந்தது. 40 ஆண்டுகாலம் நான் காங்கிரஸில் பணியாற்றியிருக்கிறேன். மக்களுக்காக உழைத்திருக்கிறேன். நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து சாகும் வரையிலும் என்னுடைய தந்தையும் காங்கிரஸ்தான். காங்கிரஸ் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் தவறிழைத்துவிட்டேன். கைகளைக் கட்டிக்கொண்டு இங்கே வந்திருக்கிறேன். தயவுசெய்து மன்னியுங்கள் என்றார் ராகேஷ் குமார் குப்தா.

என்னுடைய ஆன்மா காங்கிரஸில்தான் இருந்தது, உடல்தான் பா.ஜ.க.வில் இருந்தது. பாரதிய ஜனதா சொல்வதற்கும் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கமல்நாத் அரசு மிகக் குறுகிய காலத்தில் நிறைய செய்தது. இந்த (கமல்நாத்) அரசு கவிழ்க்கப்பட்டதால்தான் விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய முடியாமல் போய்விட்டது. என் மனம், உடல். சிந்தனை எல்லாமே காங்கிரஸ்தான். சாகும்போதும் நான் காங்கிரஸ்காரனாகவே சாக வேண்டும் என்றார் குப்தா.

ராகேஷ் குமார் குப்தாவின் வருகை மூலம் சிவபுரி வணிக சமுதாயத்தின் ஆதரவைத் திரட்ட முடியும் என காங்கிரஸ் கருதுகிறது. பாரதிய ஜனதாவில் உரிய மரியாதை தரப்படாமல் குப்தா ஓரங்கட்டப்பட்டதாகவும் துணைத் தலைவர் பதவியளித்தாலும் எந்தப் பங்களிப்பும் தரப்படவில்லை, பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பதில்லை என்றும் குப்தாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நிறைய தலைவர்கள் காங்கிரஸுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர்.

தங்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில்லாமல் இவர்கள் செல்வதாகத் தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சி, அங்கே போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என நினைக்கிறார்கள். அதெல்லாம் மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் கட்சித் தலைவர் வி.டி. சர்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக கட்னி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ துருவ் பிரதாப் சிங் கட்சியிலிருந்து விலகினார்.

கடந்த மே மாதத்தில் முன்னாள் அமைச்சர் தீபக் ஜோஷி கட்சியிலிருந்து விலகினார். முன்னாள் முதல்வரும் கட்சியின் நிறுவன உறுப்பினருமான  மறைந்த தன்னுடைய தந்தை கைலாஷ் ஜோஷிக்கு சிவராஜ் சிங் சௌஹான் நினைவுச் சின்னம் அமைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் தீபக் ஜோஷி. 

இதேபோல, ஜூன் மாதத்தில் மற்றொரு பாரதிய ஜனதா தலைவரான வைஜ்நாத் சிங் யாதவும் சிந்தியாவுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு, 700 கார்கள் அணிவகுக்க காங்கிரஸில் இணைந்தார். பாஜகவிலிருந்து யாதவேந்திர சிங் யாதவ் என்பவரும் மார்ச் மாதத்தில் காங்கிரஸில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com