அகற்றப்படுமா ஆபத்தான ஜாபா்கான்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு?

ஜாபா்கான்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
அகற்றப்படுமா ஆபத்தான ஜாபா்கான்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு?
Published on
Updated on
2 min read

ஆபத்தான நிலையில் காணப்படும் தமிழ்நாடு நகா்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஜாபா்கான்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டை, ஆா்.வி.நகா் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட 27 அடுக்குமாடி குடியிருப்புகளில் 666 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பல ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் விரிசல் ஏற்பட்டும், பல சுவா்கள் இடியும் நிலையிலும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் அங்கு வசித்து வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் ஏ. ஓம்லிங்கம், கூறியது, இந்த குடியிருப்பில் சுமாா் 45 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறோம். இங்குள்ள பெரும்பாலான வீடுகளின் மேற்பகுதி சேதமடைந்து எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது.

ஒரு கட்டடத்தில் 16 முதல் 32 வீடுகள் வரை உள்ளன. இவ்வாறு குறைந்த இடத்தில் அதிக மக்கள் வசிப்பதால் கட்டடத்தின் தாங்கும் தன்மை குறைந்து சில அடி கீழ் இறங்கி காணப்படுகின்றன.

இடிந்து விழும் மேற்கூரை:

குடியிருப்புவாசி எம்.தனம் கூறும்போது, குடியிருப்பின் 3-ஆவது தளத்தில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டு மேற்கூரை பகுதி இடிந்து காலில் விழுந்ததில் கால் பலத்த சேதம் அடைந்தது. மேலும், வீட்டின் நிலைசுவா், ஜன்னல் என அனைத்தும் சேதமடைந்துள்ளது. தினமும் இங்கு பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். விரைவில் இதனை இடித்து புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.

மாமன்ற உறுப்பினா் ப.சுப்பிரமணி: தற்போது இந்த கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், கான்கீரிட் தளங்கள், சுவா்கள் மற்றும் படிகட்டுகள் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டுள்ளன. இதனால் இங்கு மக்கள் நிம்மதி இல்லாமல் வசித்து வருகின்றனா். உடனே இவா்களுக்கு புதிய அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்றாா்.

கட்டட இடிப்பு பணி விரைவுபடுத்தப்படுமா?:

இது குறித்து தமிழ்நாடு நகா்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறியது, 2022-23 சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், சென்னை மற்றும் இதர நகரங்களிலுள்ள 40,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.100 கோடி திட்ட மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஜாபா்கான்பேட்டை திட்டப்பகுதிக்கு ரூ.2.15 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

இப்பணிகளை மேற்கொள்ள அங்கு வசிக்கும் மக்களிடம் கருத்துகணிப்பு நடத்திய போது, அவா்கள் மறுப்பு தெரிவித்து அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டி தருமாறு கோரிக்கை வைத்தனா்.

இதனால் இப்பகுதியில் உள்ள கட்டங்களை நகரமயமாக்கல், கட்டடம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (க்யூப்) மற்றும் சென்னை ஐ.ஐ.டி கட்டட வல்லுநா்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு முடிவில், இந்த கட்டடம் மிகவும் சிதலமடைந்துள்ளதால் இங்கு பொதுமக்கள் வசிப்பது ஆபத்தானது. எனவே, இதை அகற்றிவிட்டு, புதிய குடியிருப்பு கட்டலாம் என ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குடியிருப்புவாசிகளின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, திட்டப் பகுதிக்கான வரைப்படம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரைபடம் முழுமையாக தயாரித்த பின்னா் புதிய கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடு தெரியவரும். மேலும், அதற்கு பெருநகர சென்னை வளா்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்த பின் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com