உணவுப் பொருள்களையும் தண்ணீர் கேன்களையும் எடுத்துச் செல்லும் மக்கள்...
உணவுப் பொருள்களையும் தண்ணீர் கேன்களையும் எடுத்துச் செல்லும் மக்கள்...

அமேசானில் உலகின் பெரிய ஆற்றின் கரையில் குடிநீருக்குத் தவிக்கும் மக்கள்!

உலகின் வற்றாத ஆறுகள் செல்லும் அமேசான் வனப் பகுதியிலேயே தற்போது பெரும் வறட்சி நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க நேர்ந்திருக்கிறது.
Published on

உலகின் வற்றாத ஆறுகள் செல்லும் அமேசான் வனப் பகுதியிலேயே தற்போது பெரும் வறட்சி நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க நேர்ந்திருக்கிறது.

அமேசான் பகுதிகளில் அதிகரிக்கும் கடும் வறட்சி காரணமாக துண்டு துண்டுகளான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள்களோ குடிநீரோ விநியோகிக்க முடியாமல் பிரேசில் அரசு அலுவலர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் மக்கள் ஆங்காங்கே வசிக்கின்றனர். இவர்களின் வசிப்பிடங்களுக்கு சாலை வசதிகள் எதுவும் கிடையாது. இவர்களுக்கான உணவுப் பொருள்களும் நீரும் படகுகளின்வழி மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

ஏறத்தாழ 6.33 லட்சம் மக்கள் வசிக்கும் அமேசானாஸ் மாகாணம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த மாகாணத்திலுள்ள 62-ல் 59 நகராட்சிகளில் நெருக்கடி நிலை நிலவுகிறது.

அமேசான் நதியின் இரண்டாவது பெரிய துணை நதியான நெகரோ ஆறு முடிவடையும் – அமேசானுடன் சேருமிடத்திலுள்ள மாகாணத்தின் தலைநகர் மானவ்ஸில் ஆற்றின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குக் கீழிறங்கிவிட்டது.

அமேசான் ஆற்றையொட்டி, பாதிக்கப்பட்ட நகர்களில் மானவ்ஸுக்கு அருகேயுள்ள கரீரோ த வாஸியா நகரும் ஒன்று. அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கான வாகனங்களை நகராட்சி தந்திருக்கிறது. ஆற்றங்கரைகள், சேறும் சகதியும் நிறைந்த வெளிகள் எனப் பல மைல் தொலைவுகளைக் கடந்து, இந்தப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், இது சில நாள்களுக்கு மட்டுமே போதுமானது.

உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீர் விநியோகம்...
உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீர் விநியோகம்...

19,600 பேர் வசிக்கும் கரீரோ த வாஸியா நகராட்சியில் வறட்சி காரணமான ஒவ்வொருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். பெரும்பாலானவர்கள் பயிர்களை இழந்துவிட்டனர். மற்றவர்கள் விளைந்தவற்றைக் கொண்டுசெல்ல முடியாமல் திணறுகின்றனர்.

பெரும்பாலும் மழைக் காடுகளைக் கொண்ட அமேசானில் மே முதல் அக்டோபர் மாதம் வரை  லேசான மழையுடன் வறண்ட வானிலை காணப்படுவது வழக்கம்தான்.

அட்லாண்டிக் கடல் தண்ணீர் வெப்பமடைதல் மற்றும் எல் நினோ, பூமத்திய ரேகையையொட்டிய பசிபிக் பகுதிகளில் மேற்பரப்பு நீர் வறண்டது போன்ற காரணங்களால் இந்த முறை நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நிலைமை கைமீறிப் போய்விடும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com