இனி மின்வாரியமும் அபராதம் செலுத்தும்!

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதம் செய்தால், நாள் ஒன்றுக்கு ரூ.100 என்ற வீதத்தில், இனி மின்வாரியமும் அபராதம் செலுத்த வேண்டியது வரும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம்
மின்வாரியம்


புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதம் செய்தால், நாள் ஒன்றுக்கு ரூ.100 என்ற வீதத்தில், இனி மின்வாரியமும் அபராதம் செலுத்த வேண்டியது வரும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய பகிர்மான விதிமுறையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்டுமானப் பணிகளும் தயார் நிலையில் இருந்து, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதிகபட்சமாக 10 நாள்களில் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் நாள் ஒன்றுக்கு ரூ.100 என்ற வீதத்தில் மின்வாரியம் அபராதம் செலுத்த வேண்டியது வரும் என்றும் விதிமுறை உள்ளது.

புதிதாக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி, ஒருவேளை, மின் இணைப்பு வழங்க தாமதமானால், அதற்கு மின் இணைப்பு விரிவாக்கம் தேவைப்படுதல், முக்கிய மின்மாற்றி அமைக்கப்பட வேண்டியது, புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது போன்றவை காரணங்களாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்கள் இருந்தால் கூட, இந்த விதிமுறையில் கூறப்பட்டிருக்கும் நாள்களைத் தாண்டி காலதாமதகம் ஆகக் கூடாது.

வகுக்கப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து, இன்னும் தங்களுக்கு எவ்வித விவரமும் கிடைக்கப்பெறவில்லை என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு புதிய விதிமுறைகள் குறித்து விவரங்கள் கிடைக்கப்பெற்றதும், அதனை முழுமையாக பின்பற்றுவோம் என்கிறார்கள்.

தற்போது, தாழ் அழுத்த மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு மின் வாரியம், மின் இணைப்பு வழங்க சராசரியாக 30 நாள்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுதவிர்த்து பல்வேறு காரணங்களால், பழைய விதிமுறைகளில் கூறப்பட்டிருக்கும் அதிகபட்ச கால அவகாசமும் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

விண்ணப்பம் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டு, மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தில் அனைத்து வசதிகளும் இருந்துவிட்டால், விண்ணப்பம் கிடைத்த ஒரு நாளிலேயே, கடைநிலை பணியாளர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடும். 

ஒருவேளை, விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது குறித்து நுகர்வோருக்கு மூன்று நாள்களுக்குள் மின் வாரியம் தரப்பில் அறிவுறுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, விண்ணப்பத்தை திருப்பி நுகர்வோருக்கே அனுப்ப, மின் வாரியத்துக்கு ஏழு நாள்கள் வரை அவகாசம் அளித்து, விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து அளிக்க அறிவுறுத்தலாம்.

இதற்கிடையே, மின்வாரியத்தின் தரவுகள்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில், புதிய மின் இணைப்பு வேண்டுவோருக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் 59 நாள்கள் வரை எடுத்துக்கொண்டிருக்கிறது.

அதே மாதத்தில் மட்டும் தமிழக மின் வாரியம் தரப்பில் 17,714 புதிய தாழ் அழுத்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மின் இணைப்புகள் வழங்கும் விவகாரத்தில், மின் மீட்டர்கள் தட்டுப்பாடுதான் மிக முக்கியக் காரணியாக உள்ளது. புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும்போது, தேவையான மீட்டர்களை உடனடியாக பெற்று கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய நிர்வாகம் தரப்பில் அனைத்துப் பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com