சுகம் தரும் சித்த மருத்துவம்: ஏஜிஈ-யைக் குறைத்து ஆயுளை நீட்டுமா ‘ஆமலகம்’?

நவீன வாழ்வியலில் நாக்கிற்கு அடிமையாகிவிட்ட பலர் கிரில் இறைச்சி, டோஸ்டட் உணவுகள் என்று விலை கொடுத்து வியாதியை வரவேற்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது.
சுகம் தரும் சித்த மருத்துவம்: ஏஜிஈ-யைக் குறைத்து ஆயுளை நீட்டுமா ‘ஆமலகம்’?

வறுத்த உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களும் அதிகமாகிவிட்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய்களுக்கும் பஞ்சமில்லை என்றாகிவிட்டது. உண்மையில் சமையல் கலையிலும் கை தேர்ந்து இருந்த நம் முன்னோர்கள் உணவு தயாரிக்கும் அறிவியலையும் உணர்ந்து நோய்களை வராமல் காத்தனர் என்பது இலைமறை காய். இன்றைய அறிவியல் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து அதனை உறுதி செய்துகொண்டு வருகிறது. 

இப்போதெல்லாம் தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உணவு மேட்ரிக்ஸ் முறையில் பல எதிர்விளைவுகளுக்கு உள்பட்டுத்தப்படுகின்றது. இவ்வாறு உணவு பதப்படுத்தும் போது அது ஏஜிஈ-க்களை உருவாக்கத் தூண்டுகிறது என்பது ஆரோக்கியத்தை சிதைக்கும் வழிமுறை தான். அந்த வகையில் இன்றைய உணவில் முக்கிய இடத்தைப் பிடிப்பதும் நோய்க்கு ஆதாரமாய் உள்ளதுமான வேதி இறுதிப்பொருள் தான் ஏஜிஈ. இத்தகைய ஏஜிஈ-க்களை குறைப்பதன் மூலம் நமது ‘ஏஜ்’ எனும் வயதினை கூட்டி ஆயுள்காலத்தை நீடிக்க முடியும் என்கிறது நவீன அறிவியல்.

அதென்ன ஏ.ஜி.ஈ..? என்று அறிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் தோன்றும். அதாவது உணவுப்பொருள்களை அதிக வெப்பநிலையில் வறுக்கும்போதோ அல்லது அவற்றை உண்ணும் போது உடலில் ஏற்படும் வேதி வினைகளின் மூலம், அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புப் பொருள்கள் சர்க்கரை சத்துடன் கூடி ‘ஏஜிஈ’ எனும் வேதிப்பொருளாக (மேம்பட்ட கிளைகேஷன் இறுதிப் பொருள்கள்) மாறுகின்றன. இவைகள் வளர்ச்சிதை மாற்ற நோய்களுக்கு அடிப்படையாக அமையும் இன்சுலின் தடைக்கு முக்கிய காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை நவீன வாழ்வியல் நோய்களான சர்க்கரை வியாதி, உடல் பருமன், இருதய நோய்கள் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு காரணமாகவும் அமைகின்றன. 

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ‘உணவே மருந்து’ என்ற சித்த மருத்துவ வாசகம் மனதில் தோன்றுவதுடன், அதன் உள்ளார்ந்த பொருள் நமக்கு புரிய வரும். எந்த வகையான உணவுகளை எந்த பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென நம் முன்னோர்கள் சித்த மருத்துவத்தில் அறிவுறுத்தி உள்ளனர். இன்றைய அறிவியலும் இதனை ஏற்றுக்கொள்வது கூடுதல் சிறப்பு. ஆனால் நவீன வாழ்வியலில் நாக்கிற்கு அடிமையாகிவிட்ட பலர் கிரில் இறைச்சி, டோஸ்டட் உணவுகள் என்று விலை கொடுத்து வியாதியை வரவேற்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது.

இத்தகைய வேதிப்பொருளைத் தடுத்து தொற்றா நோய்களை தடுக்கும் மூலிகை ஒன்று இருப்பின் அது இன்றைய நவீன வாசிகளுக்கு மிகப்பெரிய நன்கொடை தான். அந்த வகையில் நமக்கு பயனளிக்கக் கூடியது மிக மிக பரீட்சயமான மூலிகை நம்ம ஊர் ‘ஆமலகம்’ எனும் ‘நெல்லி’ தான். கொடை வள்ளல் அதியமானே அவ்வையாருக்கு ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள வழங்கிய மூலிகையும் இது தான்.

நெல்லிக்காய் என்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வருவது வைட்டமின்-சி மட்டும் தான். அதை மட்டும் தான் நவீன அறிவியல் நமக்கு வழிகாட்டியுள்ளது. அதனைக் கடந்து மருத்துவ குணமுள்ள அல்கலாய்டுகளும், ரூட்டின் மற்றும் குர்சிட்டின் போன்ற பல பிளவனாய்டுகளும், பாலிபீனால்களும், டேன்னின்கள், அமினோ அமிலங்கள், உடலுக்கு இன்றியமையாத தாது உப்புக்களும் அதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வைட்டமின் சி என்பது மிகப்பெரிய ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உடைய வேதி மூலக்கூறு. அதுவே ஏஜிஈ- யைத் தடுக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது கூடுதல் சிறப்பு.

இத்தகைய பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட நெல்லி இன்னும் பல செம்மையான மருத்துவத்தன்மைகளை உடையது. நெல்லிக்காய் உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், கல்லீரல், இருதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளை காப்பதாகவும், குடல் புண்ணை ஆற்றுவதாகவும், காயங்களை ஆற்றுவதாகவும், இரத்த சோகையை போக்குவதாகவும், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுப்பதாகவும், இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதாகவும், இரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுப்பதாகவும் உள்ளது. மிக முக்கியமாக உலகமே அஞ்சி நடுங்கும் புற்றுநோய்களை தடுப்பதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. 

நவீன வாழ்வியலில் அதிகமாகிவிட்ட துரித உணவுகளால் குப்பை உணவுகளால், சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் பித்தம் கூடுகிறது. பித்தம் கூடுவது உடலில் பல்வேறு அழற்சி சார்ந்த நோய்நிலைகளை உண்டாக்குவதாக உள்ளது. அத்தகைய பித்தத்தை குறைத்து நோய்களை தடுக்கும் தன்மை உடையது நெல்லி. இதனை ‘நெல்லிக்காய்க்கு பித்தம் நீங்கும் அதன் புளிப்பால்’ என்ற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் அறியலாம்.

நரை,திரை,மூப்பு,பிணி ஆகிய இவை நான்கில் வயது முதிரும் மூப்பு நிலையில் உண்டாகும் பல்வேறு வியாதிகளை தடுப்பதிலும், சர்க்கரை வியாதியில் பின் விளைவாக உண்டாகும் பல்வேறு நோய்களையும் தடுக்கக் கூடியது நெல்லி. இதனை ‘மூப்புள காயந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிள்ளை போலே அழகு வாய்க்கும்’ என்ற தேரன் வெண்பா பாடல் வரிகளால் அறியலாம். 

ஆக வயோதிக பருவத்தில் நோய்களை தடுக்கும் பொருட்டும், சர்க்கரை நோயில் அதன் கொடுமையான பின் விளைவுகளை தடுக்கும் பொருட்டும் நெல்லிக்காய் தினசரி சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும். திரிபலை சூரணம் எனும் சித்த மருந்து நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்தது. இதனை எடுத்துக்கொண்டும் பயனடையலாம்.

ஏஜிஈ என்று இன்றைய அறிவியல் கூறும் ‘மேம்பட்ட கிளைகேஷன் இறுதிப் பொருள்கள்’ என்பது நாம் உண்ணும் உணவின் மூலமாக மட்டுமின்றி, சர்க்கரை நோயில் நம் உடலில் பல்வேறு வேதிமாற்றம் மூலம் உண்டாகி பல்வேறு உறுப்புகளை சிதைப்பதை அறிவியல் தரவுகள் பல உறுதி செய்கின்றன. 

சித்த மருத்துவம் கூறும் உணவே மருந்து என்பதை பின்பற்றி, பாரம்பரிய உணவு முறைகளோடு, வாழ்வியல் முறைகளையும் அணுகுவது மட்டுமே நீடித்த ஆரோக்கியம் தந்து ஆயுளை கூட்டும் என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது. இனியும் நாம் ஆரோக்கியத்தை தேடி அலையாமல் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளை நாடுவது நலம் தரும்.

தொடர்புக்கு... drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com