
பொறியியல் கலந்தாய்வு தொடங்கியிருக்கும் நிலையில், கணினி அறிவியல் எனும் மாயவலையில் மாணவர்கள் சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் போட்டிப் போட்டுக்கொண்டு மாணவர்கள் கணினி அறிவியலில் சேர்வது அதிகரித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ- உருவாகியிருக்கும் நிலையில், அது உருவாக்கியிருக்கும் ஒரு பிம்பத்தை மாணவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு கண்ணை மூடிக்கொண்டு கணினி அறிவியலில் சேர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க 2.53 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அதாவது, பொறியியல் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் நல்ல கல்வி மையங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றும், கணினி அறிவியல்தான் வேண்டும் என நினைக்க வேண்டாம் என்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு, கணினி அறிவியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 96,981 ஆக இருந்தது, இந்த ஆண்டு 1,19,229 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 10 முதல் 15 சதவீத மாணவர் சேர்க்கையை அதிகரித்துவிட்டது. இதன் மூலம் கிட்டத்தட்ட 22 ஆயிரம் இடங்கள் அதிகரித்துள்ளன. எனவே, போதுமான சேர்க்கை இடங்கள் இருப்பதால், மாணவர்கள், கணினி அறிவியலில்தான் சேர வேண்டும் என்பதற்காக, மோசமான உள்கட்டமைப்பு கொண்ட கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் வலியுறுத்தியிருக்கிறார்.
2024 - 25ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2,53,954 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களில் 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டாா்.
தொடர்ந்து, பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி செப். 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22-ஆம் தேதியும் பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 25-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29-ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.
கல்வி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறுகையில், எலிப் பந்தயம் போன்று, மாணவர்கள் அனைவரும் கணினி அறிவியலில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கிறார். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற அடிப்படையான பொறியில் படிப்புகள் பற்றி மாணவர்களிடையே தவறான எண்ணம் பரப்பப்பட்டுள்ளது. அவை வழக்கொழிந்து போய்விடவில்லை. மாணவர்கள், இதுபோன்ற அடிப்படை பொறியியல் பாடங்களில் படித்து அதனுடன் செயற்கை நுண்ணறிவு அல்லது கணினி அறிவியல் கற்றுக்கொண்டால் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் அமையும் என்றும், எந்த வொரு நிறுவனத்தின் முதல் தேர்வாக அவர்களே இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 2,21,526 பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தன. இந்த அண்டு 2,40,091 இடங்கள் உள்ளன. விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 1,79,938 தான். எனவே மற்ற இடங்களில் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக அடிப்படையில் நிரப்பிக்கொள்ளும்.
எனவே, மாணவர்கள் நல்ல கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து, அதில் அடிப்படை பொறியியல் கல்வியை தேர்வு செய்து படிக்கலாம், வெறும் கணினி அறிவியல் படிப்பில்தான் சேர வேண்டும் என்று கருதி, உள்கட்டமைப்பு சரியில்லாத கல்லூரிகளை தேர்வு செய்து எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.