தலைநகர் தில்லி யார் பக்கம்? - வெற்றி தொடருமா? கூட்டணி வெல்லுமா?

தொடர்ந்து இரு முறை 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றிய தில்லியின் தற்போதைய தேர்தல் நிலவரம் பற்றி...
தலைநகர் தில்லி
தலைநகர் தில்லி

தில்லியில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தனியே போட்டியிட, மிக எளிதாக கடந்த இரு மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மோதிக்கொண்டிருந்த இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதால் இந்த முறை மாநிலத்தின் 7 தொகுதிகளையும் ஒருசேர மூன்றாவது முறையாகத் தொடர்ந்து கைப்பற்றும் பாரதிய ஜனதாவின் முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும்?

மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக இருந்து மாநிலமான இங்கே நிர்வாகரீதியாக மத்திய அரசிடமும் மாநில அரசிடமுமாக அதிகாரங்கள் பிரிந்து கிடக்க, இதனாலேயே அவ்வப்போது குழப்பங்களும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கும் மோதல்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தியா கூட்டணியில் தில்லியிலுள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் 3 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. எதிர்த்து அனைத்துத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தொகுதிகளில் ஆறாம் கட்டமாகத் தேர்தல் நாளான வரும் 25 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மணீஷ் சிசோடியா போன்றோர் சிறைக்குள் இருக்கும் நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாள்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத வகையில், ஊழல் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த கேஜரிவால் கைது செய்யப்பட்டார்.

தலைநகர் தில்லி
மகாராஷ்டிர கார் விபத்தில் சிறுவனை வயதுவந்தவராகக் கருத முடியுமா? முன் உதாரண வழக்குகள்!!

ஆம் ஆத்மியைப் பலவீனப்படுத்தும் எனக் கருதப்பட்ட இந்த நடவடிக்கையைத் தங்களுக்குச் சாதகமாக அரவிந்த் கேஜரிவாலும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மாற்றிக் கொண்டுவிட்டனர். முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதை உறுதியாகத் தவிர்த்துவிட்ட அரவிந்த கேஜரிவால், சிறைக்குள் இருந்தவாறே அரசியல் செய்தார். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு காரணமாக ஜாமினில் வெளிவந்த கேஜரிவால் முழு வீச்சில் முன்னெப்போதுமில்லாத வகையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மகாராஷ்டிரம் போன்ற பிற மாநிலங்களுக்கும் பிரசாரத்துக்குச் சென்றுவருகிறார்.

அரவிந்த கேஜரிவால் மீது ஊழல் குற்றம்சாட்டிச் சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவருக்கு இருக்கும் நற்பெயரைக் குலைத்துவிட முடியும் என பாரதிய ஜனதா கட்சி கருதியது. மாறாக, சிறையிலிருந்து வெளியே வந்த கேஜரிவாலும் இந்தியா கூட்டணியினரும், இது முற்றிலும் அரசியல் சதி, ஆம் ஆத்மியை அழிக்கப் பார்க்கிறார்கள், சிறையிலடைக்கும் முயற்சிக்கு வாக்குகள் மூலம் பதிலளியுங்கள் என்று பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.

அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

சிறையிலிருந்து வெளியே வந்ததும் நேரடியாகப் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாகத் தாக்கிய கேஜரிவால், 75 வயதுக்கு மேல் மோடி பிரதமராக இருக்க முடியாது, அமித் ஷாவைப் பிரதமராக்கத் திட்டமிடுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டி, பாரதிய ஜனதாவுக்குள் இருக்கிற 75 வயதில் ஓய்வு என்ற உள்கட்சி விஷயத்தை அரசியல் பரபரப்பாக்கினார்.

ஆம் ஆத்மியுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படும் என்று காங்கிரஸில் பலரும் கடைசி வரை நம்பவில்லை. ஏனெனில், தில்லியைப் பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறித்தது ஆம் ஆத்மிதான். கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸை ஒன்றுமில்லாமல் ஆக்கிய ஆம் ஆத்மியுடன் கூட்டணி உடன்பாடு கண்டதைப் பலரும் ஏற்கவில்லை.

தலைநகர் தில்லி
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

இந்தக் குழப்பத்துக்கு இடையேதான், அதிருப்தியுற்ற தில்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி, கட்சி மேலிடத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் சென்று சேர்ந்துவிட்டார்.

இதனிடையே, வாக்குப் பதிவு நாள் நெருங்க, நெருங்கவும், பொதுவான அரசியல் மாற்றங்கள் காரணமாகவும் வேறு வழியில்லாமலும் காங்கிரஸாரும் ஆம் ஆத்மி தொண்டர்களும் இணக்கமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தில்லி தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொகுதி உடன்பாடு காரணமாக முதல் முறையாகத் தாம் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாகவும் கேஜரிவாலோ காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாகவும் குறிப்பிட்டதுடன், காங்கிரஸ் – ஆம் ஆத்மி தொண்டர்களும் ஆதரவாளர்களும்கூட இவ்வாறே வேற்றுமைகளை மறந்து வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஏழு தொகுதிகளிலும் ஏற்கெனவே இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தபோதிலும் இந்தத் தேர்தலில் அவர்கள் அனைவரையும் மீண்டும் வேட்பாளர்களாக பாரதிய ஜனதா நிறுத்தவில்லை. வடகிழக்கு தில்லியின் எம்.பி.யான மனோஜ் திவாரிக்கு மட்டும்தான் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள்  (பத்து ஆண்டுகளாக எம்.பி.க்களாக இருந்தவர்கள்!) அனைவரும் மாற்றப்பட்டு, வேறு  வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில்தான் காங்கிரஸ் சார்பில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரான கன்னையா குமார் போட்டியிடுகிறார்.

தலைநகர் தில்லி
வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற  பாரதிய ஜனதா கட்சி, 46.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அனைத்து இடங்களிலுமே ஆம் ஆத்மிதான் இரண்டாமிடத்தைப் பெற்றது, வாக்கு சதவிகிதம் – 33.1%. வெறும் 15.2 சதவிகித வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.

எனினும், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 22.6 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-ல் 5 இடங்களில் இரண்டாமிடத்தையும் பிடித்தது காங்கிரஸ். 18.2 சதவிகித வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது ஆம் ஆத்மி.  ஆனால், இந்தத் தேர்தலில் முதலிடத்தில் இருந்த பாரதிய ஜனதா கட்சி பெற்ற வாக்குகள் 56.9 சதவிகிதம்!.

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 53.5 சதவிகித வாக்குகளைப் பெற்று, 70-ல் 62 தொகுதிகளையும் வென்று தில்லி மாநிலத்தில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி!

இந்த மக்களவைத் தேர்தலில் கடந்த மக்களவைத் தேர்தல்களின் வாக்கு நிலவரத்தைக் கவனத்தில் கொள்வதா? அல்லது பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குகளின் போக்கைக் கவனத்தில் கொள்வதா? மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற குழப்பம் - எதையும் உறுதியாகக் கூற முடியாத வகையில் - எல்லா நிலைகளிலும் நிலவுகிறது.

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து தங்களுக்கே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள், எப்படியும் இந்தத் தேர்தலிலும் அவ்வாறே வாக்களிப்பார்கள், தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் வேண்டுமானால் குறையலாம், உறுதியாக வெற்றி பெற்றுவிட முடியும் என்றே பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது.

கடந்த இரு மக்களவைத் தேர்தல்களின்போதும் இருந்த சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு. தில்லி மக்களோ மக்களவைக்கு ஒரு மாதிரியும் சட்டப்பேரவைக்கு ஒரு மாதிரியுமாக நிலைமையை உணர்ந்து வாக்களித்தவர்கள். எனவே, இப்போதும் தற்போதைய அரசியல் சூழலை நன்றாக அவதானித்தே வாக்களிப்பார்கள், எனவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சியினர் நம்புகின்றனர்.

நாட்டின் தலைநகர் தில்லியில் வசிக்கும் வாக்காளர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்? வாக்குப் பதிவு நாளையும் தேர்தல் முடிவையும் எதிர்பார்த்திருக்கிறார்கள் மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com