பாரதிய ஜனதா பூமி உ.பி.யில் மக்களுடன்! சமாஜவாதி – காங்கிரஸ் பாணி!

பா.ஜ.க. செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் மக்களுடன் இணைந்து செயல்படும் சமாஜவாதி - காங்கிரஸ் பாணி பற்றி...
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேசத்தில்..

ரே பரேலி: அமேதி தொகுதிக்குச் செல்லும் வழியில் தங்கள் கிராமத்துக்கு வரும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை வரவேற்பதற்காக ரே பரேலி தொகுதியிலுள்ள திகியா கிராமத்தில் கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைத்துக் காத்திருக்கிறார் சமாஜவாதி கட்சித் தலைவரான ஒய்.பி. யாதவ். தொண்டர்கள் படு உற்சாகமாகக் காணப்படுகின்றனர்.

இந்த முறை சமாஜவாதி – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. தலைமையிலிருந்து விடுக்கப்பட்ட அறைகூவல் கடைசித் தொண்டன் வரை சென்றடைந்திருக்கிறது. இரு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து இணக்கமாகச் செயல்படுகிறார்கள். ராகுல் காந்திக்கும் எங்கள் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் இருக்கும் தோழமை இந்தக் கூட்டணிக்குப் பல அதிசயங்களைச் செய்யும் என்கிறார் 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவரான யாதவ்.

உத்தரப்பிரதேசத்தில்..
தலைநகர் தில்லி யார் பக்கம்? - வெற்றி தொடருமா? கூட்டணி வெல்லுமா?

‘2017-ல் அமைத்த கூட்டணி பரிசோதனை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை இரு கட்சித் தலைவர்களுமே உணர்ந்திருக்கின்றனர். 2017 தேர்தலில்  நாங்கள் நினைத்தவாறு கூட்டணி செயல்படவில்லை. இப்போது எங்கள் இருவருடைய இலக்குமே பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான், இன்றைய அவசர, அவசியத் தேவை இது’ என்கிறார் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் தினேஷ் சிங்.

‘கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும், இப்போது எல்லாம் சரியாகி நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது’  என்கிறார் சிங். ‘தொடக்கத்தில் தொகுதிப் பங்கீட்டில் சில சிக்கல்கள் இருந்தன. பின்னர், சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டன. தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் இணைந்து பல பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டங்களுக்குப் பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது’ என்றார் அவர்.

உத்தரப்பிரதேசத்தில்..
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

‘காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பொதுக் கூட்டங்களிலும் பிரசாரங்களிலும் சமாஜவாதி கட்சிக் கொடிகளும் தொண்டர்களும் திரள்கின்றனர். ராகுலும் பிரியங்கா காந்தியும் எப்போதுமே தங்கள் மேடைப் பேச்சுகளில் சமாஜவாதி தலைவர்களைக் குறிப்பிட்டுப் பேசுகின்றனர். இந்த இணக்கம் மிக நன்றாகவே தெரிகிறது. அடிமட்டத் தொண்டர்கள் வரையும் இது பரவியிருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார் மற்றொரு காங்கிரஸ் தலைவர்.

2017 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதியும் காங்கிரஸும் கூட்டணி வைத்துக்கொண்டன. ஆனால், பெருந்தோல்வியைக் கண்டன. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. 311 தொகுதிகளில் போட்டியிட்டபோதிலும் வெறும் 47 தொகுதிகளில்தான் சமாஜவாதி கட்சியால் வெல்ல முடிந்தது. தான் போட்டியிட்ட 114 தொகுதிகளில் 7 தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 39.67% வாக்குகளும் சமாஜவாதி கட்சி 21.82% வாக்குகளும் காங்கிரஸ் 6.25% வாக்குகளும் பெற்றன.

2019 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ கட்சியுடனும் ராஷ்டிரிய லோகதளத்துடனும் கூட்டணி வைத்திருந்தபோதிலும் சமாஜவாதி கட்சியானது  ஆளும் பாரதிய ஜனதாவிடம் பலத்த அடி வாங்கியது. போட்டியிட்ட 37 தொகுதிகளில் 5 இடங்களில் சமாஜவாதியும், போட்டியிட்ட 38 இடங்களில் 10 தொகுதிகளில் பகுஜன் சமாஜும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் வென்றது ஒரே ஒரு தொகுதியில்தான் – சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலி.

உத்தரப்பிரதேசத்தில்..
ஹனி-டிராப் வலையில் சிக்கவைக்கப்பட்டாரா வங்கதேச எம்.பி. அன்வருல்?

‘இந்த முறை தொண்டர்கள் மிகவும் இணக்கமாகச் செயல்படுகிறார்கள். பத்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சி அரசு எதுவும் செய்யவில்லை என்பதை உணர்ந்த மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது’ என்றார் இந்த காங்கிரஸ் தலைவர்.

‘இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் அம்சங்கள், சிறப்பாக மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு செல்வது, நல்ல ஒருங்கிணைப்பு, மக்களுடனான உறவு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு’ என்கிறார் சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிதி யாதவ். ‘மக்களுடன் நெருங்கிக் கலந்துறவாடுவதன் மூலம் பரந்த தளத்தைப் பெற்றிருக்கும் இந்தக் கூட்டணி பெரும் பலனைப் பெறும்’ என்றும் அவர் கூறுகிறார்.

2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்காலத்தை மனதில்கொண்டு மக்கள் மத்தியில் வலுவான தளத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்காகப் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின வகுப்பினர், சிறுபான்மையினர் அனைவரையும் உள்ளடக்கிய வானவில் கூட்டமைப்பொன்றை சமாஜவாதி கட்சி உருவாக்கியது. இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் அங்கமாகப் போட்டியிடும் சமாஜவாதி கட்சி, தான் போட்டியிடும் 62 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

‘சாதிவாரிக் கணக்கெடுப்பு, சமூக- பொருளாதார நீதி ஆகியவற்றைத் தொடர்ந்து எங்கள் கட்சி எழுப்பி வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஏமாந்துவிட்ட தலித் சமுதாயமும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறது. அவர்களால் பகுஜன சமாஜில் தொலைநோக்குள்ள தலைவர் எவரையும் பார்க்க முடியவில்லை’ என்று குறிப்பிடும் யாதவ், பகுஜன் சமாஜின் வாக்குவங்கியின் பெரும்பகுதியும்  சமாஜவாதி கட்சிக்கு ஆதரவாக மாறிவிட்டது என்கிறார்.

யாதவர்கள் – முஸ்லிம்களுடைய கட்சி என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் தனது உத்தியை மாற்றிக்கொண்டு, இந்தத் தேர்தலில் கட்சியின் சார்பில் 5 இடங்களில் மட்டுமே போட்டியிட யாதவர்களுக்கும் 4 இடங்களில் மட்டுமே போட்டியிட முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு தந்துள்ளது சமாஜவாதி கட்சி.

சமாஜவாதி கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்களுக்கு ஆதரவான கட்சிதான். பாரதிய ஜனதா கட்சிதான் எங்களை யாதவர் – முஸ்லிம்கள் கட்சி என்பதைப் போல சித்திரித்துவந்துள்ளனர். இந்த முறை சீரான முறையில் போட்டியிட வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், இந்த முறை பாரதிய ஜனதா கட்சிக்கு சமாஜவாதி – காங்கிரஸ் கூட்டணி பலத்த போட்டியைத் தரும் என்கிறார்.

நன்கு திட்டமிடப்பட்ட வலுவான கட்சி, ஆட்சி அதிகார அமைப்பு மற்றும் ஆதரவுகள் மீது பாரதிய ஜனதா கட்சி மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளோ வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை, அக்னிவீர் போன்றவற்றின் மூலம் பா.ஜ.க. அரசை நெருக்குகின்றன. மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் தலித் மக்களிடம் நன்றாகவே எதிரொலிக்கிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் கட்டமைப்பு வலுவாக இல்லாவிட்டாலும்கூட  அவர்களுடன் இணைந்து செயல்படுவதாக சமாஜவாதி கட்சித் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். வலுவாக இருக்கிறோமா, பலவீனமாக இருக்கிறோமா என்பதல்ல முக்கியம், பொதுவான இலக்கிற்காக இணைந்து செயல்படுகிறோம் என்பதே என்கிறார் யாதவ்.

ஆறாம் கட்டத் தேர்தலில், மே 25-ல், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், அலாகாபாத் உள்பட 14 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பெரும்பகுதி பூர்வாஞ்சலில் வரும் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் காங்கிரஸ் தொண்டர் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com