வக்ஃப் சட்ட திருத்தத்தால் அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

வக்ஃப் சட்ட திருத்தத்தால் அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்து என்று தகவல்
முகேஷ் அம்பானியின் இல்லம்
முகேஷ் அம்பானியின் இல்லம்
Published on
Updated on
1 min read

மும்பையின் பெருமைமிகுக் கட்டடமாகவும், மிக விலை மதிப்புமிக்க வீடாகவும் இருந்து வந்த முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு,தற்போது சட்டச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

தெற்கு மும்பையின் பரேட் சாலையில் ரூ.15,000 கோடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆன்டிலியா என்று அழைக்கப்படும் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக் கட்டடமானது, ஆன்மிகப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்ஃப் வாரியத்துக்கும், முகேஷ் அம்பானி குடும்பத்துக்கும் பல ஆண்டுகாலமாக இருந்து வரும் சொத்து வழக்கு தற்போது தீவிரமடைந்திருக்கிறது.

4.5 லட்சம் சதுர அடி பரப்புள்ள இந்த இடமானது முகேஷ் அம்பானிக்கு ரூ.21 கோடிக்கு 2002ஆம் ஆண்டு விற்கப்பட்டுள்ளது. இங்கு 27 மாடிகளைக் கொண்ட வீடு கட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இடமானது, கரீம் பாய் இப்ராஹிம் என்பவரால் வக்ஃப் வாரியத்துக்கு தானமாக வழங்கப்பட்டது என்றும், ஆதரவற்றவர்களுக்கு இல்லம் கட்டவும், ஆன்மிகப் பள்ளியை எழுப்பி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த நிலம் தானமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில், வக்ஃப் வாரியத்துக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தை, தனியாருக்கு விற்பனை செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே, நில விற்பனையின் சட்டப்பூர்வ அனுமதி குறித்து சந்தேகம் உள்ளது என்றும் இது தொடர்பாக கரீம் பாய் அறக்கட்டளை, வக்ஃப் வாரியம் இணைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகாலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்தான், வக்ஃப் வாரிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டத் திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒருவேளை, உச்ச நீதிமன்றம், நிலுவையில் இருக்கும் வழக்கை தூசு தட்டி விசாரித்து, அம்பானியின் குடும்பம் வசித்து வரும் ஆன்டிலியா வீடு இருக்கும் இடம் அவர்களுக்குச் சொந்தமானது இல்லை என்றும், வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது என்று உத்தரவிட்டால், அவர்கள் அனைவரும் வீட்டை காலிய செய்ய நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இது ஒன்றுதான் இப்படி ஒரு வழக்குதான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றால், அதுதான் இல்லை. இந்தியாவில் இதுபோன்ற எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1950ஆம் ஆண்டு வக்ஃப் வாரியத்துக்கு நாடு முழுவதும் 52,000 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருந்தது. ஆனால், 2025ஆம் ஆண்டு இது கணிசமாக அதிகரித்து 9,40,000 ஏக்கராக உள்ளது.

முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்ந்து வரும் ஆன்டிலியா வீட்டை சிகாகோவைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் வடிவமைத்து, ஆஸ்திரேலிய கட்டுமான நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ளது. இதுநாள்வரை, இது உலகிலேயே தனிநபர் வாழும் மிக விலை மதிப்புமிக்க வீடு என்ற பெருமையைத் தாங்கி நிற்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com