ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம்! 30 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய மு.க. முத்து!

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகன் மு.க. முத்து, 30 ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியொன்றைப் பற்றி...
மறைந்த மு.க. முத்துவின் பிறந்தநாளையொட்டி, 2011 ஆம் ஆண்டு அப்போது தமிழக துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். (பழைய படம்)
மறைந்த மு.க. முத்துவின் பிறந்தநாளையொட்டி, 2011 ஆம் ஆண்டு அப்போது தமிழக துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். (பழைய படம்)கருவூலத்திலிருந்து...
Published on
Updated on
2 min read

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருப்பதாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தொலைநோக்குடன் குறிப்பிட்டவர், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகனான மறைந்த மு.க. முத்து!

1996 செப்டம்பர் மாதத்தில் வார இதழொன்றுக்காக அளித்த நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்தார் முத்து.

மு.க. முத்துவுடனான இந்த நேர்காணலின் சில பகுதிகளை நினைவுகூர்கிறார் மூத்த பத்திரிகையாளரான 'கல்கி' ப்ரியன்.

”ரொம்ப நாள்களாக உங்களைப் பற்றி செய்தி ஏதுமில்லை. திடீரென்று ஸ்டாலினுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் அடிபட்டனவே!”

“ உங்களுக்கு அந்தச் செய்தி எப்படி ஆச்சரியத்தைக் கொடுத்ததோ அதுபோன்ற நிலைதான் எனக்கும், பல மாதங்களாக நான் ஜெயலலிதா அவர்களைச் சந்திக்கவேயில்லை. அ.தி.மு.க.விலும், தீவிர ஈடுபாட்டுடன் இல்லை. அந்த நிலையில் இந்தச் செய்தி எப்படிக் கிளம்பியது என்பது புதிர். ஒருவேளை என் அப்பாவை (கலைஞர்) சங்கடப்படுத்துவதற்காக யாராவது இந்தச் செய்தியை விதைத்திருக்க வேண்டும்.”

”அப்பாவைச் சங்கடப்படுத்துவது என்றால்...”

“எனக்கும் என் அப்பாவுக்கும் உறவு சரியாக இல்லை என்பது தெரிந்த விஷயம். நான் மீண்டும் அப்பாவுக்கு நெருக்கமாக ஆகக் கூடாது என்பதற்காக “சிலர்” இந்தச் செய்தியைக் கிளப்பி விட்டிருக்கலாம் அல்லவா?”

“இப்போது நீங்கள் அ.தி.மு.க.வில் இருக்கிறீர்களா?”

”இத்தனை வயதாகியும் வாழ்க்கையில் இன்னமும் செட்டில் ஆகவில்லையே என்ற ஆதங்கத்தின் காரணமாக, பல அவசர முடிவுகளை எடுத்துவிட்டு, அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அந்த அடிப்படையில், 1989-ல் அப்பா ஆட்சிக்கு வந்தபோது கிரானைட் வியாபாரம் செய்யலாம் என்று அப்பாவை அணுகினேன். ஆனால், எனக்கு உதவி செய்தால் ஏதாவது சர்ச்சை வருமே என்ற காரணத்தால் அப்பா எந்த உதவியும் செய்யவில்லை. அந்தக் கோபத்தில் இருந்த என்னை, இப்போது பிரிந்து வாழும் என் மனைவி (சிதம்பரம் ஜெயராமன் மகள்), லீலாவதி (எம்.ஜி.ஆருக்கு கிட்னி கொடுத்தவர்) மற்றும் எஸ்.டி.எஸ். ஆகியோர் வலியுறுத்தி அ.தி.மு.க.வில் சேர்த்தார்கள்.

1991-ல் அ.தி.மு.க. பதவிக்கு வந்தபோது திரைப்பட வளர்ச்சி நிறுவனத் தலைவர் பதவி கொடுக்க வேண்டி ஜெ.வை அணுகினேன். அவர் கொடுக்கவில்லை. ஆனால், ஐந்து லட்சம் பணம் கொடுத்தார். அதற்காகப் பல மேடைகளில் அப்பாவைத் திட்டினேன். மற்றவர்கள் திட்டும்போது கேட்கக்கூடிய நிலையில் வைக்கப்பட்டேன்.

அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது ‘எப்படிப்பட்ட தவறுகள் செய்து விட்டோமென்று’ எண்ணத் தோன்றுகிறது. அதன் காரணமாக இப்போது குற்ற உணர்வோடு தடுமாறிப் போகிறேன். எம்.ஜி.ஆருக்கு என்னிடம் இருந்தது போன்ற பாச உணர்வெல்லாம் ஜெ.வுக்குக் கிடையாது. என் அப்பாவை அவமானப்படுத்த என்னைப் பயன்படுத்திக் கொண்டார் அவர்.”

”ஸ்டாலின் இப்போது மேயர் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றிப் பலமான சர்ச்சை அடிபட்டுக் கொண்டிருக்கிறதே?”

”ஸ்டாலின் என் சகோதரன் என்பதற்காகச் சொல்லவில்லை. துவக்க காலத்தில் அப்பா, ஸ்டாலினை வளர்க்க விரும்பியிருக்கலாம். ஆனால், மிசாவில் அடிபட்டு, உதைபட்டு அரசியலில், ஒரு கட்டத்துக்கு அப்புறம், தானே வளர்ந்தவன் ஸ்டாலின். இன்னமும், வளருவான். அரசியலில் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எனக்குக்கூட அப்பா நல்ல பாதையைக் காட்ட நினைத்தார். ஆனால், நேரம் சரியில்லை. வாய்ப்புகளை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒருவரை மற்றொருவர் எப்போதும் ‘புஷ்’ செய்து கொண்டிருக்க முடியாது. சொந்தத் திறமை, நேரம் எல்லாம் ஒத்துவர வேண்டும் அந்த வகையில் ஸ்டாலினின் வளர்ச்சி சுயமான முயற்சி என்று சொல்லலாம்.”

சென்னை கோபாலபுரம் நாலாவது தெருவில், முதல்வராக இருந்த மு. கருணாநிதி வசித்த அதே தெருவில், இருந்த வீட்டில் நடந்த, இந்த நேர்காணலின்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக மு.க. முத்து இருந்தார் என்றும் தனிப்பட்ட மற்றும் அரசியல் சார்ந்த மேலும் பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார் என்றும் குறிப்பிடுகிறார் கல்கி ப்ரியன்.

Summary

The late M.K. Muthu, the eldest son of former Chief Minister M. Karunanidhi, had foresaw thirty years ago that Chief Minister M.K. Stalin had a bright future in politics!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com