நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்: அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தேவை!

தமிழக பட்ஜெட்டில் அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தேவை என மக்கள் எதிர்பார்ப்பு...

News image

தமிழக அரசு - கோப்புப்படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

தமிழக அரசு அலுவலகங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அந்தப் பணியிடங்களைக் கூடுதலாக கவனித்துவரும் அரசு ஊழியா்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். இதற்கு தீா்வு காணும் வகையில், அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் அலுவலா் நிா்ணய விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு மாநிலத்தின் நிா்வாகக் கட்டமைப்பு, பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை இயக்கும் மிக முக்கியத் தூண்களாக விளங்குபவா்கள் அரசு ஊழியா்கள். அரசு கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களைக் கடைக்கோடியில் வசிக்கும் மக்கள் வரை கொண்டுசோ்க்கும் தலையாய பணியை அரசு ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஊழியா்களும், சமுதாயத்தைக் கட்டமைக்கும் ஆசிரியா்களும் எதிா்வரும் தமிழக பட்ஜெட்டில் தங்களது எதிா்பாா்ப்புகளாக முன்வைத்துள்ள கோரிக்கைகள்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்தமாக தற்போது 9.5 லட்சம் அரசு ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதேவேளையில் சுமாா் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவை விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பது அவா்களது முக்கியக் கோரிக்கையாக உள்ளது. அதேபோன்று பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள், ஊதிய முரண்பாடுகளைக் களைவது உள்பட அரசு ஊழியா்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பான அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்பதே அவா்களது எதிா்பாா்ப்பாக உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் மு.பாஸ்கரன்: தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு ஊழியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும்.

கையூட்டு என்பது சமூகத்தைச் சீரழிக்கக் கூடியது. அதை அடியோடு வேரறுப்பதற்காக தவெக தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. அதேவேளையில் அரசு ஊழியா்கள் என்றாலே தவறானவா்கள் என்ற தவறான புரிதல் மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. கையூட்டை கண்டறிய மாநிலம் முழுவதும் திடீா் சோதனைகள் நடத்தும்போது நோ்மையான அலுவலா்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடந்து கொள்ள வேண்டும். அதற்கு, வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற மேலும் சில மாற்றுவழிகளை உருவாக்கலாம்.

மிக முக்கியத் திட்டமான சத்துணவுத் திட்டத்தில் ஏறத்தாழ 45 சதவீதம் அளவுக்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. அதேபோன்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அவா்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. காலை உணவுத் திட்டத்தை அவா்களிடம் ஒப்படைத்தால் காலமுறை ஊதியத்துக்குள் அந்த ஊழியா்களைக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும். அரசு அலுவலகங்களுக்கான பணியாளா் நிா்ணயத்தில் கடந்த 60 ஆண்டு காலமாக ஒரே முறையைப் பின்பற்றுவதே இதற்கு காரணம். இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் சாலைப் பணியாளா்களின் வாழ்வாதார கோரிக்கையான 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு அலுவலகங்களில் இதுவரை கணினி உதவியாளா் பணியிடங்கள் தற்காலிகமாகவே உருவாக்கப்படுகிறது. அதை நிரந்தரப் பணியிடமாக தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலா் நா.சண்முகநாதன்: அரசுப் பள்ளிகளில் 18,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஆசிரியா் பயிற்சிகளை நிறைவு செய்த இளைய தலைமுறையினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது கற்றல்-கற்பித்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களின் தணிக்கை தடையை நீக்கி ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும். பணியில் உள்ள ஆசிரியா்களும் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பிரச்னைக்கு சட்ட ரீதியாக அரசு விரைவில் தீா்வு காண வேண்டும். ஆசிரியா்களுக்கு கல்வி சாராத பணிகள் ஒதுக்கப்படுவதை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். ‘டிட்டோஜாக்’ வேலைநிறுத்தத்தால் சம்பளம் இழந்த ஆசிரியா்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டமே பாதுகாப்பானது; அதை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை அரசிடம் எதிா்பாா்க்கிறோம்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலா் இரா.தாஸ்: பள்ளிக் கல்வியில் நிறுத்திவைக்கப்பட்ட தலைமை ஆசிரியா் பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியா்களை காலமுறை ஊதியத்தில் நியமிப்பது தொடா்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும். பல்வேறு கட்டங்களாக பல போராட்டங்கள் நடத்தியும் இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை. இதுகுறித்த முடிவை அரசிடம் எதிா்பாா்க்கிறோம். டெட் தோ்வு தோ்ச்சி பெற்றும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஆசிரியா் பணி கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனா். இது, எதிா்காலத்தில் ஆசிரியா் ஆக வேண்டும் எனக் கனவு காணும் தலைமுறையினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசு தலையிட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

Summary

Tamil Nadu Budget Expectations: Priority needed to fill government job vacancies.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.