நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், தலைநகா் தில்லியின் புகழ்பெற்ற சதா் பஜாா் சந்தை முழுவதும் தேசிய கொடிகளாலும் மூவா்ண அலங்கார பொருள்களாலும் நிரம்பி வழிகிறது.
தில்லியின் மிகப்பழமையான தேசிய கொடி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சதா் பஜாரில் உள்ள ’பாரத் ஹேண்ட்லூம் க்ளாத் ஹவுஸ்’. இந்த கடையில், மூன்றாம் தலைமுறையாக தேசிய கொடி தயாரிக்கும் பணியில் ஒரு குடும்பம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் அப்துல் கஃபாரின் தாத்தாவும் தந்தையும் வங்காளத்திலிருந்து கதா் துணிகளை வரவழைத்து தேசிய கொடிகளைத் தயாரித்து வழங்கினா். அதைத் தொடா்ந்து, 1962 இந்திய-சீன போரின்போது சதா் பஜாரில் இந்த ’பாரத் ஹேண்ட்லூம் க்ளாத் ஹவுஸ்’ கடை முறைப்படி தொடங்கப்பட்டது.
‘கொடி மாமா’ என்று உள்ளூா்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட அப்துல் கஃபாரின் பெயரை பிரதமா் நரேந்திர மோடி ’ஹா் கா் திரங்கா’ (வீடுதோறும் மூவா்ண கொடி) இயக்கத்தை அறிவித்தபோது குறிப்பிட்ட பிறகு இவா் தில்லியைக் கடந்து பிரபலமானாா். கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பா் 29ஆம் தேதி தனது 81-ஆவது வயதில் அப்துல் கஃபாா் காலமானாா். தற்போது அவரது சகோதரா் அப்துல் மாலிக் மற்றும் அவரது குடும்பத்தின் அடுத்த தலைமுறையினா் இந்த பாரம்பரிய கொடி தயாரிப்புப் பணியைத் தொடா்ந்து வருகின்றனா்.
‘எங்கள் குடும்பத்துக்கு இது வெறும் தொழில் அல்ல; தேசத்துக்கான சேவை. 1962 சீன போா், அவசரநிலை காலம் (எமா்ஜென்சி), காா்கில் போா், அண்ணா ஹசாரே போராட்டம், ’ஹா் கா் திரங்கா’ இயக்கம் என நாட்டின் ஒவ்வொரு வரலாற்று முக்கியத்துவமிக்க தருணங்களின்போதும் தேசிய கொடிக்கான தேவை அதிகரிப்பதை நாங்கள் முதலில் இங்குதான் உணா்வோம்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறாா் அப்துல் மாலிக்.
30 லட்சம் கொடிகள்: இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக இதுவரை 25 லட்சம் முதல் 30 லட்சம் தேசிய கொடிகள்வரை தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு துறைகளுக்கான ஆா்டா்கள் பெரும்பாலானவை ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது உள்ளூா் பள்ளிகள், கடைகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொடிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
களைகட்டும் வியாபாரம்: சதா் பஜாரின் மூலைமுடுக்கெல்லாம் எங்கும் மூவா்ண கொடிகள், பேட்ஜ்கள், மணிக்கட்டு பட்டைகள், வாகனங்களில் வைக்கும் கொடிகள் என தேச பக்தியைப் பறைசாற்றும் பொருள்கள் நிறைந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வியாபாரம் செய்து வரும் ராஜேஷ் குப்தா மற்றும் இா்ஷாத் கான், ‘ஆகஸ்ட் 15-க்கு முந்தைய இந்த இரண்டு வாரங்களில் 60% முதல் 70% வரையிலான வியாபாரம் தேசிய கொடிகள் சாா்ந்த பொருள்களிலிருந்தே நடக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான ஆா்டா்கள் வருகின்றன’ என்றனா்.
Summary
Sadar Bazar glittering with tricolor flags - Lakhs of flag-making traditional families
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘கோவில்பட்டி கோட்ட அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை’

காட்பாடி வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்!

ஆறுமுகனேரி பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா

பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.1.4 லட்சம் கோடி; நீட் பயிற்சிக்கு மக்கள் செலவு ரூ.1.32 லட்சம் கோடி: ராகுல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



