

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜன. 15) விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கலிட்டு வழிபடும் போது மஞ்சள் குலையும், கிழங்கும் முக்கிய இடம்பிடிக்கிறது. மஞ்சளின் பயன்பாடு அனைத்து விசேஷங்களிலும் மங்கல பொருளாக பயன்படுத்தப்படுவதால் பொங்கல் அன்று மஞ்சள் கொத்துக்கு முக்கிய பங்கு கிடைக்கிறது.
கொத்து மஞ்சளின் அறுவடை மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பொங்கலுக்கு வெல்லம், பச்சரிசி, நெய், ஏலக்காய், உலர் திராட்சை, சுக்கு, முந்திரிப் பருப்பு ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததுதான் கரும்பு. பொங்கலன்று வீட்டில் முன் வாசல் கூரையில் வைக்கப்படும் கூரைப்பூவும் சிறப்பு வாய்ந்தது.
பொங்கல் பொங்கியவுடன், இறக்கி வைத்து மாக்கோலமிட்டு, அதன் மேல் பொங்கல் பானை, அதன் இருபுறமும் கொத்து மஞ்சளை கட்டி இறைவனுக்கு படையல் செய்வது தமிழர்களின் பாரம்பரிய பழக்கம்.
இ்ந்தாண்டு மஞ்சள் கொத்து பயிரிடப்பட்டு அறுவடை செய்யும் விவசாயிகள் விற்பனை அதிகரித்த அதேவேளையில் வரத்து அதிகரி்ப்பால் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அய்யூரைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன் கூறுகையில், ”அறுவடைக்குப் பிறகு தற்போது விற்பனைக்காக கொண்டு செல்கிறோம். நிலத்தைப் பதப்படுத்துவது, பயிரிட்டு மருந்து, உரம் போடுவது உள்ளிட்ட செலவுகள் அதிகம்.
போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது. மஞ்சள் விவசாயிகளை அரசு கண்டுகொள்வதில்லை. பாதிப்பு காலங்களில் அரசு மானியம் கொடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஒரு டாட்டா ஏஸ் வண்டியில் ஒரு லோடு ரூ. 20 ஆயிரத்திற்கு வியாபாரிகள் வாங்கினர். இந்தாண்டு ரூ. 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.
நடவு, களை எடுத்தல், பயிர் பராமரிப்பு, அறுவடை என தொடர்ந்து மஞ்சள் விவசாயத்தில் பணிகள் இருந்துகொண்டே இருப்பதால், இதனைச் சார்ந்து வாழும் விவசாய தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்” என்றார்.
அலங்காநல்லூரை அடுத்த அய்யூரைச் சேர்ந்த ரியாஸ்கான் கூறுகையில், ”கடந்த ஆண்டை விட இந்தாண்டு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. விளைச்சலும் மிகக் குறைவு. ஆடி-18க்கு நடவு செய்து, மார்கழியில் அறுவடை செய்கிறோம். பல இடங்களில் பயிர் கருகிவிட்டது. காரணம் தெரியவில்லை.
இங்கிருந்து மும்பை தாராவியில் உள்ள தமிழர்களிடம் நாட்டு மஞ்சளுக்கு அதிக தேவை உள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும்கூட ஏற்றுமதி செய்கிறார்கள்.
இங்குள்ள விவசாயிகளுக்கிடையே போதுமான ஒற்றுமை இல்லை. அதனால் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளுக்கு சங்கங்கள் இல்லை.
எரம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், ”மஞ்சள் விவசாயத்தில் ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. நான் 70 சென்டில் மஞ்சள் பயிரிட்டுள்ளேன். 80 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது.
ஆனால் 75 ஆயிரம் ரூபாய்க்குதான் விற்பனை செய்துள்ளேன். என்னுடைய உழைப்பு முழுவதும் விரயம் ஆகிவிட்டது. விவசாயிகளுக்கு லாபம் என்பது மிகக் குறைவு. வரத்து குறைவாக இருந்தால் விலை அதிகம் கிடைக்கும். வரத்து அதிகமாக இருக்கும்பொழுது விலை குறைந்து, போட்ட காசை கூட எடுக்க முடியாது” என வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'எங்களிடம் வாங்கிச் செல்லும் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். சில நேரங்களில் நஷ்டமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. பராமரிப்பு, வேலை ஆள்களின் கூலி என கணக்கிட்டால் மிச்சம் ஒன்றும் இல்லை' என்கிறார்.
”பணியில் ஈடுபடும் பெண்களுக்கு 600 ரூபாயும் ஆண்களுக்கு 1000 ரூபாயும் நாள் கூலியாக வழங்கப்படுகிறது. மஞ்சள் விவசாயத்தைச் சார்ந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் கூலிகள் வாழ்ந்து வருகின்றனர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.