தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

‘தை முதல் நாளே தமிழருக்குப் புத்தாண்டு’ என்பதைப் பற்றி...
தைத் திருநாளில்...
தைத் திருநாளில்...express photo service
Updated on
4 min read

தமிழகத்தின் அரசியல் வரலாற்றையே அடியோடு மாற்றி அமைத்துவிட்ட பெருவலிமை பொதிந்திருக்கும் 1965 மொழிப்போர் குறித்த நினைவுகளை, கடந்த வாரத்தில் வெளியாகியுள்ள ஒரு திரைப்படம் இன்றைய தலைமுறையினர்க்கு ‘மீள்காட்சி’யாக மிக எளிதில் அறிமுகமாக்கியுள்ளது. வாழும் மொழிப்போர் தலைமுறையின் நீங்கா நினைவுக் கனல்களையும், உணர்வுகளையும் ஊதி உயிர்ப்பித்திருக்கிறது அத்திரைப்படம்.

மாநிலமெங்கும் நிறைந்த தமிழுணர்வு கிளர்ந்து நிற்கும் இத்தருணத்தில், நூறாண்டுகள் முன்னரே (1921) ‘தை முதல் நாளே தமிழருக்குப் புத்தாண்டு’ என்று பழுத்த தமிழறிஞர்கள் பலர் ஒருமித்து  முடிவு செய்த அறிவிப்பும் அதனை ஏற்று அரசால் செய்யப்பட்ட ஏற்பாடும், தமிழக சட்டப்பேரவையின் இரண்டு காட்சிகளால் (2008 & 2011) எவ்வாறு நிலைமாறி நிற்கிறது என்பதையும் நினைவிற்கு கொண்டுவருவது பொருத்தமானதாக இருக்கும். என்று கருதியதால், இக்கட்டுரை உருவானது.

காட்சி.1: தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜீத்சிங் பர்னாலா சட்டப் பேரவையில் 23.1.01.2008 இல் ஆற்றிய உரையில், (பத்தி 58). “1921 ஆம் ஆண்டில், மாபெரும்அறிஞரும், 'தனித்தமிழ் இயக்கம்' நிறுவனருமான திரு.மறைமலைஅடிகளர்தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அறிஞர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சந்தித்து, தமிழர்களுக்கு ஒரு தனி நாட்காட்டி தேவை என்றும், திருவள்ளுவர் பெயரில் ஒரு புதிய நாட்காட்டியைப் பின்பற்றலாம் என்றும் முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31 என்றும் அவர்கள் தீர்மானித்தனர். இந்த முடிவை மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 37 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுக் கொண்டு, 1971 ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 ஆம் ஆண்டு முதல் அரசிதழிலும் பின்பற்ற ஆணையிடப்பட்டது.

தைமாதத்தின் முதல்நாள் தமிழ் ஆண்டின் முதல்நாள் என்பதில் ஏறத்தாழ அனைத்துத் தமிழ் அறிஞர்களிடமும் நிலவும் ஒருமித்த கருத்தைக் கருத்தில் கொண்டு, தை முதல் நாளைப் புத்தாண்டு நாளாக அறிவிக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.” என அறிவிப்புச் செய்தார். மேலும், அவர் தனது உரையில்”பொங்கலைத் தமிழர்களின் திருவிழாவாகக் கொண்டாடும் தமிழகமக்கள், இனி இதைத் தமிழ்ப்புத்தாண்டு நாளாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உடனடியாக தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர், தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு தமிழ்ப்‌ புத்தாண்டு (விளம்புகை) சட்டமுன்வடிவு, 2008-29-1-2008-இல் அறிமுகம் செய்தார். உணர்வுப்பூர்வமான தனது அறிமுக உரையில் “மிக முக்கியமான. சட்‌ட முன்வடிவை, வரலாற்றுப்‌ புகழ்மிக்க சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதாகப்” பெருமிதத்தோடு குறிப்பிட்டு, அச்சமயத்தில் அப்போதைய எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது குறித்துத்தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

சட்டப்பேரவையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் திரு. என்‌. நன்மாறன்‌, இந்தியகம்யூனிஸ்ட்திரு. வை. சிவபுண்ணியம், காங்கிரஸ், டாக்டர்‌ இ.எஸ்‌.எஸ்‌. இராமன், பா.ம.க.: திரு. கி. ஆறுமுகம், மதிமுகதிரு. மு.கண்ணப்பன், வி.சிக. திரு து. ரவிக்குமார்‌: திரு. கு.செல்வம் ஆகியோர், (அப்போது) “கடந்த 87 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தமிழறிஞர்களும்‌, ஆன்றோர்‌ பெருமக்களும்‌ வலியுறுத்தி வந்த தமிழ்ப்‌ புத்தாண்டு தினத்திற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை உருவாக்கித்தர இந்தச்‌ சட்டமுன்வடிவு வழிவகை செய்கிறது.” என்றும் “இந்தச்‌ சட்டமுன்வடிவை வரவேற்று இதைக்‌ கொண்டுவந்திருக்கின்ற தமிழக முதல்வர்‌, முத்தமிழறிஞர்‌, டாக்டர்‌ கலைஞர்‌ அவர்களுக்குப்‌ பாராட்டும்‌” தெரிவித்தனர்.

சட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் பிப்ரவரி 8, 2008இல் வழங்கப்பட்டதன்பின் சட்டம் (எண்2/2008) அரசிதழில் (தமிழ்நாடு அரசு. சிறப்பு அரசிதழ். பகுதி 4. பிரிவு 2. வெளியீடு எண் 38. பக்கம் 4.) பிப்ரவரி 11, 2008இல் அறிவிப்பாகி உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

ஏழு குறுகிய சட்டப்பிரிவுகளே (Sectios உள்ள இந்த 2008 சட்டத்தின் பிரிவு (3)“ தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்திலோ அல்லது பழக்க வழக்கத்திலோ எவ்வாறாயினும்,--

(1) 'தை' மாதத்தின் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என்று இதன்மூலம் பிரகடனம் செய்யப்படுகிறது.

(2) தமிழ் ஆண்டு,'தை' மாதத்தின் முதல்நாளில் தொடங்கி 'மார்கழி' மாதத்தின் கடைசி நாளுடன் முடிவடைகிறது.

பிரிவு(4) - பின்பற்ற வேண்டிய தமிழ் ஆண்டு

1) அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பிரிவு 3ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ் ஆண்டைப் பின்பற்றி வரவேண்டும்.

(2) அனைத்துஅரசு ஆணைகள், தமிழ்நாடு அரசு அரசிதழ், மாவட்ட அரசிதழ்கள் மற்றும் பிற அரசுவெளியீடுகளில், தமிழ் ஆண்டு ஆங்கில நாட்காட்டி ஆண்டுடன் பிரிவு(3) இன்படி குறிப்பிடப்பட வேண்டும் என்ற செயல்பாட்டு வழிகளை வகுத்திருந்தது.

காட்சி2 : மூன்றாண்டுகள் கழிந்தன. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி வண்ணம் மாறியது. இரண்டே உட்பிரிவுகளோடு, 23, ஆகஸ்ட் 2011இல் தமிழ்நாடு தமிழ்ப்‌ புத்தாண்டு (விளம்புகை) நீக்கச்‌சட்ட முன்வடிவு, 2011, அப்போதைய இந்து சமய மற்றும்‌ அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.சண்முகநாதன் முன்மொழிந்தார். சட்டமுன்வடிவின் அறிமுகநிலையிலேயே இந்திய கம்யூனிஸ்ட், திரு குணசேகரன், மார்க்சிஸ்ட் திரு சவுந்தரராசன் இருவரும் மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பிப்பிறகு நிதானமாகப் பரிசீலிக்கலாம் என்று ஆலோசனை கூறி எதிர்த்தனர்.

திரு.சு, குணசேகரன்‌ “இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்‌ சார்பில்‌ இந்தச்‌ சட்டத்தை நிலைக்‌குழுவிற்கு அனுப்பி இன்னும்‌ சற்று ஆய்வுகளை மேற்கொண்டு செயல்படுத்தினால்‌ சிறப்பாக இருக்குமென்று கருதுகிறோம்‌. எனவே, இந்தச்‌சட்டத்தை அறிமுகநிலையில்‌ எதிர்த்து, நிலைக்‌குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்றுகேட்டுக்கொள்கிறேன்‌” என்று வேண்டியதையும், மார்க்சிஸ்ட் திரு அ.சவுந்தரராசன்,‌ “பிரச்சினை பண்பாடு தொடர்பான பிரச்சினை. ஏற்கெனவே சட்டமன்றத்தில்‌ இதுகுறித்துப்‌ பேசி, ஒருதீர்மானத்தையும்‌ அவர்கள்‌ நிறைவேற்றியிருக்கிறார்கள்‌. இதை நீங்கள்‌ சற்று ஆய்வு செய்து” முடிவெடுக்கலாம் என ஆலோசனை வழங்கியதையும் அப்போதைய ஆட்சித் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

முன்பு, முந்தைய அரசால் 2008இல் ஆளுநர் உரையிலேயே விரிவான காரணங்கள் குறிப்பிட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீக்கறவு செய்யக் காரணமாக (Statement of Purpose and Objectives):

“தமிழ்நாடுதமிழ்புத்தாண்டு (விளம்புகை) சட்டம், 2008 (தமிழ்நாடுசட்டம் 2, 2008) தமிழ்மாதம் "தை" முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு நாளாகக்கொண்டாடப்படும் என்றுஅறிவிக்கிறது. 2008 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டம் 2, சித்திரை மாதத்தின் முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடும் வழக்கத்திற்கு எதிரானது என்று பொதுமக்கள், தொல்லியல் அறிஞர்கள், வானியல் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பு அறிஞர்கள் பல்வேறு ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், மேற்படி சட்டத்தை ரத்துசெய்து, தமிழ்மாதம் சித்திரை முதலாம் நாளைதமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் பழங்கால வழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மேற்படிசட்டப்படி, "தை" மாதத்தின் முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டு தினமாகப் பின்பற்றுவதில் பொதுமக்கள் மத்தியில் நடைமுறைசிக்கல்களை, எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சட்டத்தை ரத்துசெய்து, "சித்திரை" மாதத்தின் முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடும் பழங்கால வழக்கத்தை மீண்டும் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது. மேற்கண்டமுடிவை செயல்படுத்த இந்த மசோதா முயல்கிறது” என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

1. “இச்சட்டம், தமிழ்நாடுதமிழ்புத்தாண்டு (விளம்புகை) ரத்துசட்டம், 2011 என்று அழைக்கப்படும். (2) அது உடனடியாக நடைமுறைக்குவரும்.

2. தமிழ்நாடு தமிழ்புத்தாண்டு (பிரகடனம்) சட்டம், 2008 இதன்மூலம் ரத்து செய்யப்படுகிறது.”

என்ற இரண்டே உட்பிரிவுகளை மட்டுங் கொண்ட இந்தச் சட்டம் (இதை விடச் “சுருக்” சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையால் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.) ஆளுநர் ஒப்புதலை. 3 செப்டம்பர் 2011இல் பெற்ற இரண்டேநாட்களில்தமிழ்நாடு அரசிதழ்,செப்டம்பர் 5, 2011 (சிறப்பு. எண் 300.. பகுதி 4. பிரிவு 2. பக்கம் 83) இல் அறிவிப்புச்செய்யப்பட்டது.

தமிழுணர்வு வெள்ளம் பெருகிநிற்கும் இன்றைக்கு 105 ஆண்டுகளுக்குமுன்பு(1921-வது ஆண்டு)மறைமலை அடிகளார்‌ தலைமையில்‌, பேராசிரியர்‌ நமச்சிவாயனார்‌ முன்னிலையில்‌ நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரிக் கருத்தரங்கில்‌, அக்காலத்தில் கட்சிகள் சார்பிலாத,தமிழுணர்வே தலைக்கொண்டிருந்த மூத்த தமிழறிஞர்கள்தமிழ்த்‌ தென்றல்‌ திரு.வி.க., தமிழ்க்‌ காவலர்‌ திரு. கா. சுப்பிரமணியம்‌, சைவப்‌ பெரியார்‌ சச்சிதானந்தம்‌, நாவலர்‌ வேங்கடசாமி நாட்டார்‌, நாவலர்‌ சோமசுந்தர பாரதியார்‌ உள்ளிட்ட ஐநூறுக்கும்‌ மேற்பட்ட தமிழ்‌ அறிஞர்கள்‌ கலந்துகொண்டு, தை முதல்‌ நாளே, தமிழ்‌ ஆண்டின்‌ தொடக்க நாள்‌ என்று முடிவு செய்தார்கள் என்பது வரலாறு.

தொடர்ந்துஅம்முடிவுக்கு மேலும் வலுச்சேர்க்கும் கருத்தில்,1935ஆம்ஆண்டில்‌, தமிழர்‌ மாநாட்டினைத்‌ திருச்சியில்‌, தந்தை பெரியார்‌ முன்னின்று நடத்தினார்‌. பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார்‌ தலைமை தாங்கினார்‌. அந்த மாநாட்டில்‌, மறைமலை அடிகளார்‌, திரு. வி.க., தமிழவேள்‌ பி.டி. ராஜன்‌, உமா மகேஸ்வரனார்‌, பேராசிரியர்‌ கா.சுப்பிரமணிய பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்‌, ஆற்காடு ராமசாமி

முதலியார்‌, பாவேந்தர்‌ பாரதிதாசன்‌, பட்டுக்கோட்டை அழகிரிசாமி போன்ற தமிழ்‌ அறிஞர்கள்‌ பங்கேற்றுக் கருத்துப் பொழிந்தனர்.

அந்த தமிழர் மாநாட்டில்‌,18-1-1935ல்‌,தமிழர்‌ திருவிழாவான பொங்கல்‌ திருநாளை, ஒரு சமய சார்பற்ற தமிழர்‌ விழா எனவும்‌, தை முதல்‌ நாளே, தமிழ்ப்‌ புத்தாண்டின்‌ தொடக்க நாள்‌ என்றும்‌ தீர்மானத்தைத்‌ தமிழவேள்‌ பி.டி. ராஜன்‌ அவர்கள்‌ முன்மொழிய, திரு.வி.க. அவர்கள்‌ வழிமொழிய, ஒருமனதாக அத்‌தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

அதே நிகழ்வில்,நிறுவப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, “திருவள்ளுவர்‌ காலம்‌, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, 31 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தொடங்கிவிட்டது” என்ற அறிவிப்போடு, தமிழ்ப்‌ புத்தாண்டுத் தொடக்கம்‌ தை முதல்‌ நாள்‌ என்றும் உறுதி செய்யப்பட்டது.

மேற்கண்டவற்றின் தொடர்ச்சியாகத்தான்‌ 1971-ல்‌ தமிழக முதல்வராக இருந்த டாக்டர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ ஆட்சியில்‌ தமிழக அரசின்‌ நாட்குறிப்பிலும்‌ 1972 முதல்‌ தமிழ்நாடு அரசிதழிலும்‌ திருவள்ளுவராண்டு எனத்‌ தமிழ்‌ ஆண்டு குறிப்பிடப்பட்டு வருவது தொடங்கியது.

ஆனால் 2011இல், முகந்தெரியாதவர்களிடமிருந்து “இந்தச்‌ சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென்று அரசுக்குக்‌ கோரிக்கைகள்‌ வந்துள்ளன.” என்றும் “ மக்கள்‌ நம்பிக்கையை ௪ட்டம்மூலம்‌ மாற்றுவது சரியல்ல. எனவே, தமிழக மக்களின்‌ உணர்வுகளுக்கும்‌, கருத்துகளுக்கும்‌ மதிப்பளிக்கும்‌ வகையில்‌, யாருக்கும்‌ பயனளிக்காத, காலங்காலமாகப்‌ போற்றிப்‌ பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின்‌ உணர்வுகளைப்‌ புண்படுத்துகின்ற இந்தச்‌ சட்டத்தினை இரத்து செய்வதுதான்‌பொருத்தமாகஇருக்குமென்ற”தனது கருத்தினைச் சட்டப்பேரவையில்  பதிவு செய்து,2008 சட்டத்தை நீக்கறவு செய்தார் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும்‌ மேலாக நாடறிந்த தமிழறிஞர்களும்‌, ஆராய்சியாளர்களும், போற்ற உரிய ஆன்றோர்‌ பெருமக்களும்‌ வலியுறுத்தி வந்த தமிழ்ப்‌ புத்தாண்டு தினத்திற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை உருவாக்கித்தர 2008 சட்டம்‌ வழிவகை செய்தது.

ஆனால், மாநிலமெங்கும் நன்கு அறியப்பட்ட, நடுநிலையான, கட்சி சார்புகளற்ற பல்வேறு தமிழறிஞர்களின் ஒருமித்த கருத்தும், தொடர் வேண்டுகோள்களும்,சட்டப்பேரவையிலும், “நிதானமாக இவ்விசயத்தைப் பரிசீலிக்க” முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும் மிக எளிதாக 2011இல் ஆட்சியாளர்களால் அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டன என்பது பெரும் வருத்தமே. 2021இல் ஆட்சிக்கு வந்த ‘திராவிடமாடல்’ இவ்விசயத்தை ஏனோ கண்டுகொள்ளவில்லை என்பதும்கூடுதல் வருத்தம்தான்.

தைத் திருநாளில்...
நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் எளிதாக நடைமுறைப்படுத்த ஏதுவானதா?
Summary

The announcement, unanimously decided upon by many accomplished Tamil scholars, that the first day of the month of Thai is the Tamil New Year, and the arrangements made by the government accepting this decision.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com