சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகள் பல குண்டும் குழியுமாக மாறியிருப்பதால் தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள்கூட சில வாரங்களிலேயே சேதமடைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சாலைப் பணிகளின் தரம், பராமரிப்பு மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 15 மண்டலங்கள், 200 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 35,978 சாலைகள் உள்ளன. அவற்றில் 488 சாலைகள் மட்டுமே பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இயக்கப்படும் முக்கியச் சாலைகளாகும். அவற்றில் 60-க்கும் மேற்பட்டவை மாநில நெடுஞ்சாலைகள் ஆகும்.
பொதுவாக ஒரு சாலை அமைக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை தரமாக பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது பொறியியல் தரநிலை. ஆனால், சென்னையில் பல சாலைகள் அமைக்கப்பட்ட சில வாரங்களிலேயே சேதமடைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சாலையோரப் பள்ளம் காணப்படும் சேத்துப்பட்டு சாலை.
நகரின் முக்கிய சாலைகளும்... நகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை போன்றவைகூட ஆங்காங்கே மேடு, பள்ளங்களாக இருப்பதால் தினந்தோறும் விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
பல்லாயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தும் கோயம்பேடு சந்தை முன்பகுதி சாலை, வடபழனி ஆற்காடு சாலை, தொழில் நிறுவனங்கள் நிறைந்த அம்பத்தூர் பிரதான மற்றும் உள்பகுதி சாலைகள், வில்லிவாக்கம், பாடி சாலை, பல்லாவரம், திருநீர்மலை, திருமுடிவாக்கம் சாலை என சேதமடைந்துள்ள சாலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
சேதமடைந்த சிறு குழிகள், பள்ளங்களில் தடுமாறி விழும் இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் வரும் வாகனங்களால் மோதப்பட்டு விபத்துக்குள்ளாவதும், அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கின்றன. புதை சாக்கடைத் திட்டக் குழாய் சந்திப்பு மூடிகள் சரியாக அமைக்கப்படாமல், மேடாகவோ, பள்ளமாகவோ இருப்பதால், அதில் தடுமாறி விழுவோரும் உண்டு.

பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி காணப்படும் கோயம்பேடு சந்தை சாலை.
அதேபோல, மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை சந்திப்புகளிலும், போக்குவரத்துக்கான சிக்னல் சந்திப்புகளிலும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் சேதமடைந்துள்ள சாலைகள் சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர். சாலையோரங்கள் சீராக இல்லாததாலும், மழைநீர் வடிகால்கள் சீராக அமைக்கப்படாததாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
பராமரிப்புக்கு ஆளில்லை: சாலைகள் பராமரிப்புக்காக வார்டுக்கு தலா 10 பேர் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது அதிகபட்சம் 4 பேர் மட்டும் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. இதனால் சாலைகள் முறையான பராமரிப்பின்றிப் பழுதாகிவிடுவதாக துணைமேயர் மு.மகேஷ்குமார் கூறுகிறார்.
சென்னையில் கடந்த 2024 -ஆம் ஆண்டு, ரூ.282 கோடியில் 2,118 சாலைகளும், 2025- ஆம் ஆண்டில், ரூ.489 கோடியில் 3,897 சாலைகளும் சீரமைக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்தச் சாலைகளும் தற்போது சேதமடைந்துள்ளதாக மாமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இப்பிரச்னை குறித்து திருவெற்றியூர் மண்டலம் 4 -ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் (மார்க்சிஸ்ட்) கூறியதாவது: எனது வார்டில் மட்டும், சேதமடைந்த 36 சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படவில்லை. புதிதாக 5 ஆயிரம் சாலைகள் அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கூறினர். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைக்கப்படும் சாலைகள் தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அமைக்கப்படுவதில்லை. அவற்றைப் பராமரிக்கவும் போதிய சாலைப் பணியாளர்கள் இல்லை. ஆகவே, சாலைகள் விரைந்து சேதமடைகின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.
இணை ஆணையர் பதில்: இப்பிரச்னைகள் குறித்து சென்னை மாநகராட்சி பணிகள் துறை இணை ஆணையர் எஸ்.சரவணனிடம் கேட்டபோது, சாலைகள் சீரமைப்புக்காக, மண்டல வாரியாகத் தற்போது கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம், மின்சார வாரியம் என பல துறைகளுடன் இணைந்து அவற்றின் பணிகளைச் சாலை சீரமைப்புப் பணிகளோடு ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினால், புதிதாக அமைக்கப்படும் சாலைகள் விரைவில் சேதமடைவதைத் தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சேதமடைந்த சாலைகள் உடனடியாகச் சீரமைக்கப்படுவதை உறுதி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். பழுதான சாலைகள் பற்றி புகார் செய்வதற்கான ’நம்ம சாலை' செயலி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், சேதமடைந்த சாலைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் குறைகள் பற்றி புகார் செய்வதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஆணையர் உத்தரவு: மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வாரந்தோறும் நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையை உருவாக்கும் வகையில் சாலைகளைச் சீராகப் பராமரிக்கவும், சிக்னல் சந்திப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கவும் உத்தரவிட்டுள்ளதால், அப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரவுகள் பின்பற்றப்பட்டு, சாலைகள் சீராக அமைக்கப்பட்டு, தங்களது பயணம் இனிதாக அமையும் காலத்தை எதிர்நோக்கி, சென்னைவாசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










