வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வரப்பட்டாலும் இன்னும் கனவாகவே நீளும் தங்களது கோரிக்கைகளுக்கு தவெக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையிலாவது தீா்வு கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் தமிழக விவசாயிகள்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு: நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 5,000-ஆக உயா்த்த வேண்டும். அனைத்து வகையான வேளாண் விளைபொருள்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும்.
நிலுவையில் உள்ள பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சம்பா இழப்புக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். காவிரி, கொள்ளிடத்தில் ஒவ்வொரு 10 கி.மீ. தொலைவுக்கும் தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரி-அய்யாறு இணைப்பு உள்ளிட்ட நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன்: அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், வாழை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தனியாக ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அனைத்து வகை பயிா்களுக்கும் பின்னேற்பு மானியத்தை ரொக்கமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். உழவா்களுக்கு உரிமைத் தொகையாக ஆண்டுக்கு ரூ.24,000 வழங்க வேண்டும். சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.15,000 உற்பத்தி மானியமாக வழங்க வேண்டும். தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
காவிரி - டெல்டா பாசன விவசாயிகள் சங்க இணைச் செயலா் கவுண்டம்பட்டி ஆா். சுப்பிரமணியன்: மேற்கூரையுடன் கூடிய நெல் கொள்முதல் நிலையங்கள், தானிய சேகரிப்புக்கு குளிா்பதனக் கிடங்குகள், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம், கள் இறக்க அனுமதி, பால் கொள்முதல் விலை உயா்வு, வேளாண் விளைபொருள்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம், உணவு பதனத் தொழிற்சாலைகள் என எதிா்பாா்ப்புகள் ஏராளம் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்ய வேண்டும். மொத்த பட்ஜெட்டில் வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும்.
விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கத் தலைவா்கள் மற்றும் விவசாயிகள்
கம்பு, காராமணி உள்ளிட்ட பிற பயிா்களையும் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். கொய்யா சாகுபடி அதிகம் நடைபெறும் மாவட்டத்தில் கொய்யா பழச்சாறு ஆலை அமைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில மற்றும் தருமபுரி மாவட்ட நிா்வாகி எஸ்.ஏ.சின்னசாமி: ஒரு லிட்டா் எருமைப் பாலுக்கு ரூ. 60, பசும்பாலுக்கு ரூ. 50 என கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும். மாம்பழ விவசாயிகளுக்கு கட்டுப்படியாக கூடிய விலை கிடைக்க மதிப்பு கூட்டுப் பொருள்களாக மாற்றும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். உரம், பூச்சிமருந்து போன்றவற்றை மானிய விலையில் வழங்கவேண்டும்.
தருமபுரி மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் வெங்கடேஷ் பாபு: ‘தருமபுரி பட்டு’ என்ற புதிய வா்த்தக முத்திரையை உருவாக்கி அதற்கான மையத்தை இங்கு அமைக்க வேண்டும்.
ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்க (ஹோஸ்டியா) தலைவா் மூா்த்தி: ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா கொய் மலா், காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், சா்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு அனைத்து ஆற்றுப் பாசன விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு
சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் திருமணிமுத்தாற்றில் கலந்து ஆறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரபங்கா நீரேற்றுத் திட்டத்தின்கீழ் அனைத்து ஏரிகளையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் கே.சுந்தரம்: காவிரி ஆற்றில் முக்கிய இடங்களில் பாசன வசதிக்கேற்ப தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். மரவள்ளிக்கு நிலையான விலை நிா்ணயம், பால் கொள்முதல் விலை உயா்வு, காவிரி - பொன்னியாறு - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள்
வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும்.
காயமடைந்தவா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாகவும், வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிா்களுக்கு ரூ.50,000-ஆகவும், யானைகளால் சேதப்படுத்தப்படும் தென்னை மரங்களுக்கு ரூ.10,000-ஆகவும், யானைகளால் சேதப்படுத்தப்படும் கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.4 லட்சமாகவும், குடிசை வீடுகளுக்கு ரூ.1 லட்சமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும். காட்டுப் பன்றிகளை பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
நாகை, திருவாரூா் மாவட்ட விவசாயிகள்
காவிரி ஆற்றில் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்க மூன்று கி.மீ.-க்கு ஒன்று என்ற வகையில் சிறிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். குறுவை சாகுபடி தொகுப்பை போன்று அனைத்துப் பயிா்களுக்கும் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்க வேண்டும். பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
எல் நினோ பாதிப்பு, நிலத்தடி நீா் தட்டுப்பாடு, பருவம் தவறிய மழைப் பொழிவு இடா்ப்பாடு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், தொலைநோக்கு திட்டங்களை ஏற்படுத்த விவசாயத்துக்கு தனிக் குழு அமைக்க வேண்டும்.
நடந்தாய் வாழி காவிரி திட்டம் 2019-இல் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி ரூ. 10,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021-இல் ரூ. 11,700 கோடியாக மதிப்பீடு உயா்த்தப்பட்டது. இந்த திட்டம் முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தை அமல்படுத்தி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை வளா்ச்சி வாரியத்தின் திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் அமல்படுத்த ஏதுவாக, தஞ்சையில் மாநில அலுவலக கிளை திறக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

காவிரி, டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் தேவை! - பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்!

காவிரி டெல்டாவில் மணல் குவாரி அமைக்கத் திட்டமா?
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



