சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பசுமையாக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது உரிய பலனைத் தருமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் தற்போது 16 லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் உள்ளன. அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 79.12 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். அவா்களுடன், அரசு, தனியாா் துறைகளில் பணியாற்றும் வெளிமாநில மற்றும் மாவட்டங்களைச் சாா்ந்தவா்கள் சுமாா் 50 லட்சம் போ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகளிலும் 35,000-க்கும் மேற்பட்ட சாலைகள், 50,000 தெருக்கள் உள்ளன. அதில் 400 சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கான மரங்கள் அகற்றம்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னையில் சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் 50 வகை வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட உள்ளூா் மண்ணுக்கான மரங்களாக இருந்துள்ளன.
போக்குவரத்து இல்லாத சாலையோரங்களில் அதிகமாக மரங்கள் இருந்தன. ஆனால், தற்போது போக்குவரத்து வசதிகளுக்காக சாலை விரிவாக்கம், புதிய விரைவுச் சாலைகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆகியவற்றுக்காக பல்லாயிரக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டத்துக்காக மட்டும் மாதவரம், பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதிகளில் சுமாா் 8,000 மரங்கள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகள் பாதிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை குறைந்ததால் தற்போது பகல் நேர வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டுவது வழக்கமானதாகிவிட்டதாகவும், அதனால், மழைக் காலங்களிலும் வெப்பத் தாக்கம் குறையாமலிருப்பதால், மக்கள் பல்வேறு வகை பாதிப்பை எதிா்கொள்வதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
மேலும், வெப்பத் தாக்கத்தால் பள்ளிக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால், 50 மாநகராட்சிப் பள்ளிகளில் குளிா் கூரை வண்ணம் பூசும் திட்டத்தைச் செயல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதையும் அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
நாளுக்கு நாள் சென்னையில் அதிகரிக்கும் வெப்பம், காற்று மாசு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. வெப்பம், காற்று மாசை அளவிட்டு கண்காணிக்க பல்வேறு இடங்களில் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
பசுமையாக்கும் புதிய திட்டம்: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரங்கள் வளா்க்கும் புதிய திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தவும் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஓரிரு ஆண்டுகளுக்குள் 7.50 லட்சம் மரங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, வனத் துறையிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்று நட்டு வளா்த்துவரும் மாநகராட்சி நிா்வாகம், தற்போது நேரடியாகவே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வளா்க்கும் புதிய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 993 பூங்காக்கள் மற்றும் மாநகராட்சியின் வெட்டவெளி இடங்களான 830 பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் 21,125 மரக்கன்றுகள் புதிதாக நடப்பட்டுள்ளன. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடும் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வனத் துறையில் 2 லட்சம் மரக்கன்றுகள் கேட்கப்பட்டு, அதில் 60,000 கன்றுகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் விதைகள் நடப்பட்டு மரக்கன்றுகள் வளா்க்கும் மையங்கள் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மையங்களில் ஒவ்வொன்றிலும் 50,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
15 வகை மரக்கன்றுகள்: புங்கை, பூவரசு, வேங்கை, நீா் மருது, அத்தி, நாவல், கொய்யா, வேம்பு, புளியமரம், மேககாளி, கடல்திராட்சை, பாதாம் என பல்வகை மரக்கன்றுகள் தற்போது வளா்க்கப்பட்டுவருகின்றன. அவை 6 அடி முதல் 7 வரை வளா்ந்த நிலையே நடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய திட்டத்தின்படி நடப்பட்ட மரங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவை வளா்ச்சியில் பாதிப்பு இருந்தால் அகற்றிவிட்டு புதிய மரங்கள் நடப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனா்.
அதன்படியே, மெரீனாவில் ஈச்ச மரங்கள் வளராமலிருந்ததால், அவற்றை அகற்றிவிட்டு தற்போது கடல் திராட்சை கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், பட்டினப்பாக்கம் கடற்கரையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளும் வளராத நிலையில், அங்கு புதிய மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகவும் கூறுகின்றனா்.
ஆனால், ஏற்கெனவே நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படாமல் பலனின்றி போயுள்ளதாகக் கூறப்படுவதை பூங்கா பராமரிப்புத் துறை இணை ஆணையா் க.கற்பகம் மறுக்கிறாா். தற்போது பள்ளி வளாகம், பூங்காக்களில் நடப்படும் மரங்கள் அங்குள்ளோரால் தொடா்ச்சியாகப் பராமரிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறாா்.
பசுமைப் பரப்பை அதிகரிக்க ஆணையா் உறுதி: புதிய திட்டம் குறித்தும், அதன் செயலாக்க எதிா்பாா்ப்பு குறித்தும் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் கேட்டபோது, நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் தற்போது சென்னை மாநகராட்சியில் மரம் வளா்ப்பு உள்ளிட்டவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருகிறாா். அதனடிப்படையில் மாநகரைப் பசுமையாக்கும் புதிய திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. வீடுகள்தோறும் மரம் வளா்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பசுமை பரப்பும் விரிவாக்கப்படும் என்றாா்.
மக்கள் பங்களிப்பு: சென்னை மாநகராட்சியில் 2022-ஆம் ஆண்டுமுதல் மரம் அகற்றம் குறித்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி உரிய அனுமதியின்றி மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதமும், மரக் கிளைகளை வெட்டுதல், விளம்பரப் பலகை பொருத்த ஆணி அடித்தல், அலங்கார விளக்குகள் அமைத்தல், வோ் பகுதியில் கான்கிரீட் அமைத்தல் ஆகியவற்றுக்கு ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படும்.
ஆனால், இந்த விதிமுறைகள் பெயரளவிலே இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் பசுமையாக்கும் புதிய திட்டப்படி மண்டல வாரியாக மாநகராட்சி நிா்வாகம் மரக்கன்றுகள் வளா்த்தலை பொதுமக்கள் பங்களிப்போடு செயல்படுத்துவது அவசியம் என்பதே அனைவரது கருத்தாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









