இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி!

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததால் காலியான மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் தவெக வென்றுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் அரசியல் களத்தில் பல்வேறு செய்திகளை உணர்த்துகின்றன.

Stalin - EPS - Vijay - Seeman.

ஸ்டாலின் - இபிஎஸ் - விஜய் - சீமான்.

Published On :

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததால் காலியான மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் தவெக வென்றுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் அரசியல் களத்தில் பல்வேறு செய்திகளை உணர்த்துகின்றன.

2026 பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டியில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக, இடைத்தேர்தலில் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக கடந்த முறை மதுராந்தகத்தில் 3-ஆவது இடத்தில் இருந்த நிலையில், இப்போது 2-ஆவது இடத்துக்கு முன்னேறியதுடன், தாராபுரத்தில் 2-ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

2026 பேரவை பொதுத் தேர்தலுடன் இடைத்தேர்தலை ஒப்பிட்டால் மதுராந்தகத்தில் தவெக 31.32 சதவீதத்தில் இருந்து 40.24 சதவீதத்துக்கு, அதாவது 9.92 சதவீதம் கூடுதலாகப் பெற்றுள்ளது. திமுக 30.18 சதவீதத்தில் இருந்து 29.02 சதவீதமாக அதாவது 1.16 சதவீதம் குறைந்துள்ளது. அதிமுக 34.95 சதவீதத்தில் இருந்து 25.82 சதவீதம் அதாவது 9.13 சதவீதம் சரிந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி 2.50 சதவீதத்தில் இருந்து 1.28 சதவீதம் அதாவது 1.22 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட், இப்போது தனியாக 1.28 சதவீதம் பெற்றுள்ளது.

அதேபோல, தாராபுரத்தில் தவெகவுக்கு 23.23 சதவீதத்தில் இருந்து 37.02 சதவீதமாக அதாவது 13.79 சதவீத வாக்குகள் உயர்த்துள்ளன. திமுகவுக்கு 32.20 சதவீதத்தில் இருந்து 31.78 சதவீதம் அதாவது 0.42 சதவீதம் குறைந்துள்ளது. அதிமுகவுக்கு 40.56 சதவீதத்தில் இருந்து 25.08 சதவீதமாக, அதாவது 15.48 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.

நாதக 3.01 சதவீதத்தில் இருந்து 2.92 சதவீதமாக அதாவது 0.09 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், இப்போது தனித்து 0.64 சதவீதம் பெற்றுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் இரு தொகுதிகளிலும் அதிமுக இழந்த பெரும் பகுதி வாக்குகள் தவெகவுக்கு பரிமாற்றம் ஆகியுள்ளன. திமுக பெரிதாக வாக்குகளை இழக்கவில்லை.

மதுராந்தகத்தில் பாமக கூட்டணியை இழந்ததாலும், தவெக-பாமக கூட்டணி உருவாகி, செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் என்ற தகவல் வலுத்ததாலும் வன்னியர் வாக்குகள் அப்படியே தவெகவுக்கு மடைமாற்றமாகியுள்ளது.

2016- இல் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை முன்நிறுத்தியபோது பாமக, மதுராந்தகத்தில் 9.12 சதவீத வாக்குகளைப் பெற்றது. இடைத்தேர்தலில் தவெக 9.92 சதவீத வாக்குகளை அதிகரித்துள்ளது. அதிமுக 9.13 சதவீதத்தை இழந்துள்ளது. திமுக வாக்கு வங்கி கிட்டத்தட்ட அப்படியே இருக்கும் நிலையில் பாமக வாக்குகள் அப்படியே தவெகவுக்கு பரிமாற்றம் ஆகியிருப்பது தெரிகிறது.

பாமக, வன்னியர் வாக்குகளை இழந்தாலும், பாரம்பரிய பிற சமூக வாக்குகளை அதிமுக இத்தொகுதியில் இழக்கவில்லை. அதிமுக-பாமக- கூட்டணி இருந்திருந்தால் தவெக-அதிமுக-திமுக இடையே மும்முனைப் போட்டி கூர்மையாகியிருக்கும்.

தாராபுரத்தில் அதிமுக இழந்த வாக்குகளை அப்படியே தவெக பெற்றுள்ளது. திமுக வாக்குகளை இழக்கவில்லை. நாதகவும் வாக்குகளை இழக்கவில்லை. இங்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள் வாக்குகளை அதிமுக இழக்கவில்லை. ஆனால், அதிமுகவுக்கு விழுந்த பாரம்பரிய அருந்ததியர் மற்றும் பிற சமூக வாக்குகளை அதிமுக, தவெகவிடம் இழந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, கொங்கு வேளாளர்கள், அருந்ததியர்கள் அடர்த்தியாக வாழும் குண்டடம் ஒன்றியத்தில் (முதல் 7 சுற்றுகள்) 2026 பேரவைத் தேர்தலில் 28,829 வாக்குகள் பெற்ற அதிமுக, தற்போது 15,244 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதாவது 13,585 வாக்குகளை இழந்துள்ளது. தவெக 11,671 வாக்குகளில் இருந்து 18,690 வாக்குகளை உயர்த்தியுள்ளது. திமுக 17,366 வாக்குகளில் இருந்து 15,988 வாக்குகளைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் அதிமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களித்த அருந்ததியர் மற்றும் பிற சமூக வாக்குகள் தவெகவுக்கு இடமாறியுள்ளன.

அதேபோல, கொங்கு வேளாளர்கள்,அருந்ததியர்கள் அடர்த்தியாக வாழும் மூலனூர் ஒன்றியத்திலும் இதேபோன்ற நகர்வுதான் உள்ளது. மேலும், தாராபுரம் நகரில் அதிமுகவுக்கு வாக்களித்த அருந்ததியர்கள் மற்றும் பிற சமூக வாக்குகள் தவெகவுக்கு சென்றுள்ளன. அதேநேரத்தில், தாராபுரம் நகரத்தில் திமுகவுக்கு விழுந்த பாரம்பரிய இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகளில் தவெகவால் சேதாரத்தை ஏற்படுத்த முடியவில்லை.

தாராபுரத்தில் வாக்குகளை தக்கவைத்த நாதக, மதுராந்தகத்தில் ஒரு சதவீத வாக்குகளை தவெகவிடம் இழந்துள்ளது. திமுகவிடம் இருந்து மதுராந்தத்தில் 1 சதவீத வாக்குகளை மார்க்சிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் அரை சதவீத வாக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பிரித்துள்ளன.

இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பாரம்பரிய கொங்கு மண்டலத்தில் அதிமுக பலம் குறைந்துள்ளது. பாமகவால் வடதமிழகத்தில் அதிமுக பலம் இழந்துள்ளது. அதிமுக வாக்குகள்மூலம் இரு மண்டலங்களிலும் தவெக பலமாகியுள்ளது. காங்கிரஸ்-விசிக வெளியேறிய நிலையிலும் கொங்கு மண்டலம் மற்றும் வடதமிழகத்தில் திமுக தனது பலத்தை இழக்கவில்லை.

தனித்து நின்ற நாதக, கொங்கு மண்டலத்தில் பழைய பலத்தை இழக்கவில்லை. ஆனால், வடதமிழகத்தில் தலித் வாக்குகளை தவெகவிடம் இழந்துள்ளது.

இடதுசாரிகள் தங்களது வாக்குகளை அப்படியே தக்கவைத்துள்ளன.

மு.க.ஸ்டாலின் பேச்சால் ட்விஸ்ட்

தாராபுரத்தில் தவெக 6.7 சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியுள்ளது. அங்கு தேவேந்திர குல வேளாளர்கள் சுமார் 12 சதவீதம் பேர் உள்ளனர். தவெக, திமுக, அதிமுக ஆகிய 3 பிரதான கட்சி வேட்பாளர்களும் தேவேந்திர குல வேளாளர்கள்தான். தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த உருவகேலி விமர்சனம், அந்தச் சமூக வாக்காளர்கள் குறிப்பாக பெண் வாக்காளர்களிடம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

தாராபுரத்தில் அந்தச் சமூக மக்கள் திமுகவை பாரம்பரியமாக ஆதரித்து வருகின்றனர். 2021 தேர்தலில் திமுக 1,000 வாக்குகளில் வெற்றிபெற அந்தச் சமூக வாக்குகள்தான் காரணம். ஒருவேளை மு.க.ஸ்டாலின் தனது விமர்சனத்தைத் தவிர்த்திருந்தால், இங்கு 2021 பேரவைத் தேர்தல் முடிவு வந்திருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.