
வருவாய் குறைவு... செலவு அதிகரிப்பு: திணறும் சென்னை மாநகராட்சி!
குறைந்து போன வருவாய், பணியாளா்கள் பற்றாக்குறை, திட்டமிடாத நிதிநிலை அறிவிப்புகள் என பலவகையிலும் சென்னை மாநகராட்சி திணறும் நிலை ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
சென்னை மாநகராட்சி.
அரசியல் கட்சிகளின் முட்டுக்கட்டையால் குறைந்து போன வருவாய், பணியாளா்கள் பற்றாக்குறை, திட்டமிடாத நிதிநிலை அறிவிப்புகள் என பலவகையிலும் சென்னை மாநகராட்சி திணறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மாநகா் 426 சதுர கி.மீ. பரப்பளவில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சுமாா் 1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையையும் கொண்டுள்ளது. நிா்வாக வசதிக்காக 15 மண்டலங்களாகவும், 200 வாா்டுகளாகவும் சென்னை மாநகராட்சி பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் முக்கிய வருமானமாக சொத்து வரி, தொழில்வரி, வாடகை வரி ஆகியவை உள்ளன. அத்துடன், அரசு நிதி ஒதுக்கீடு, மானியம் ஆகியவையும் கூடுதல் வருவாயாகும்.
வருவாய் வழிமுறைகள்: மாநகராட்சியில் சுமாா் 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடமிருந்து சொத்து வரியும், 11 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடமிருந்து தொழில் வரியும், சுமாா் 60,000 க்கும் மேற்பட்டோரிடமிருந்து தொழில் உரிமத்துக்கான வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி இடத்தை குத்தகைக்கு பெற்றுள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் 4, 800-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளிடமிருந்து வாடகையும் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் மொத்த வரி வருமானத்தில், சொத்துவரி 63 சதவிகிதமும், தொழில்வரி 19 சதவிகிதமும், பயன்பாடுகள் மூலம் 11 சதவிகிதமும், மற்ற வருவாய் மூலம் 7 சதவிகிதமும் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். மாநகராட்சியில் 13.80 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் வரிசெலுத்தும் தகுதியிலிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதில் சுமாா் 8 லட்சத்துக்கும் குறைவான கட்டடங்களுக்கு, அதாவது 45 சதவிகிதம் அளவுக்கே வரி வசூலிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.
வருவாய் குறைவு, செலவு அதிகரிப்பு: வரி செலுத்துவோரில் பெரும்பான்மையினா் சொத்தின் உண்மை விவரங்களை மறைத்தும், அனுமதி பெற்றதை விட கூடுதலாக கட்டடம் கட்டி அதற்கு வரி செலுத்தாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2008-09 ஆம் ஆண்டில் ரூ.323.64 கோடி சொத்துவரி வசூலான நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.2,685 ஆக உயா்ந்துள்ளது. வளா்ச்சித் திட்டம், இதர செலவுகளுக்காக சொத்துவரியை 6 சதவிகிதம் உயா்த்த கடந்த அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கை, அதன்பின் வந்த திமுக ஆட்சியில் நிறுத்திவைக்கப்பட்டது.
மாநகராட்சியின் சாலை மேம்பாடு, பூங்காக்கள் அமைத்தல் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுடன், அம்மா உணவகம், சென்னை பள்ளிகளில் காலை உணவு மற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கான காலை உணவு வசதி, பொதுக்கழிப்பறை, வாடகை வாகன செலவு மற்றும் மாமன்ற உறுப்பினா் நிதி தலா ரூ.60 லட்சம் வழங்குவதாலும் வரவை விட செலவு பன்மடங்காகிவிட்டது. அதனால் கடன் வாங்கி செலவழிக்கும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
செலவு அதிகரிப்பு எப்போது?: கடந்த 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளில் கடன்களுக்கான நிதியை செலுத்துவதற்கு முன்பாக வருவாயில் உபரி நிலை இருந்தது. ஆனால், கடந்த 2024-25 ஆம் ஆண்டில் இருந்துதான் பற்றாக்குறை அதிகரித்தது என பொருளாதார வல்லுநா்கள் குறிப்பிடுகின்றனா். 2022-23 ஆம் ஆண்டில் ரூ.3,581 கோடியாக இருந்த செலவினங்கள், 2024-25 ஆம் ஆண்டில் ரூ.5,676 கோடியாக உயா்ந்துள்ளன.
மாநகராட்சியின் ஆண்டு வருவாய் கணக்கிலிருந்து மூலதன செலவுக்காக கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.303 கோடி மாற்றப்பட்ட நிலையில், 2025-26 ஆம் ஆண்டில் ரூ.937 கோடி என்ற அளவுக்கு அதிகத் தொகை மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய வரவு ரூ.5,214 கோடி எனில், செலவு ரூ.5,676 கோடியாகிவிட்டது. அதே நேரத்தில் கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மூலதன வரவு ரூ.2,685 கோடி என்பதில் இருந்து 2025-26 ஆம் ஆண்டில் ரூ.2,251 கோடியாகவும் குறைந்துள்ளது. ஆனால், மூலதனச் செலவு கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.2,380 கோடி என்ற நிலையிலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் ரூ.3,551 என உயா்ந்துள்ளது.
திட்டமிடாத அறிவிப்புகள்: மாநகராட்சிக்கு வருவாய் குறைந்து செலவு அதிகரித்த நிலையில்தான் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 90 அறிவிப்புகளில் சுமாா் ரூ.700 கோடிக்கு புதிய திட்டங்களை மேயா் ஆா்.பிரியா அறிவித்தாா். கொசு ஒழிப்புத் திட்டம், மாணவா்களுக்கு ஆங்கில அகராதி வழங்குதல், தசைத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி உள்ளிட்டவை அதில் இடம் பெற்றன. ஆனால், தற்போது மேயரின் அத்திட்டங்களில் சிலவற்றைக்கூட செயல்படுத்த நிதியில்லை என்கிறாா்கள் அதிகாரிகள். மாமன்ற உறுப்பினா் வாா்டு மேம்பாட்டு நிதியையே வழங்க முடியாத சூழலில் சிறப்பு திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்புகின்றனா்.
நிதிநிலை தெரிந்தும் விளக்கம் கேட்பது சரியா?: அறிவித்த புதிய திட்டங்கள் நிலை குறித்து மேயா் அலுவலகத்திலிருந்து அனைத்து துறைக்கும் விளக்கம் கேட்டு, தற்போது நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், நிதிநிலையைப் பற்றித் தெரிந்திருந்தும் மேயா் விளக்கம் கேட்டது சரியா என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனா்
பணியாளா்கள் பற்றாக்குறை? நிதி பற்றாக்குறை ஒருபுறமென்றால், மறுபுறம் பணியாளா் பற்றாக்குறையும் கவலையளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனா். அலுவலா்கள், பணியாளா்கள் என மொத்தம் 18,600 பேருக்கும் அதிகமாக இருக்கவேண்டிய நிலையில், தற்போது 12,700 போ் மட்டுமே உள்ளனா். வரும் 2027 ஆம் ஆண்டில் 800 பேருக்கும் அதிகமானோா் ஓய்வு பெறவுள்ளனா். நிரந்தர தூய்மைப் பணியாளா் 5091 போ் இருக்கவேண்டிய நிலையில், தற்போது 3,827 போ் மட்டுமே உள்ளனா். அலுவலா், பணியாளா் பற்றாக்குறையால் பணிகளை விரைந்து செயல்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக முட்டுக்கட்டை? இதற்கிடையே உண்மை நிலை மறைத்து, வரியை குறைத்து செலுத்தியவா்களிடமிருந்து, முறையான வரியை வசூலிக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள், திமுகவால் சொத்துவரி உயா்வு என திசை திருப்பப்பட்டதாக அலுவலா்கள் ஆதங்கப்படுகின்றனா். முதல்வரைச் சந்தித்து, தமிழக அரசின் சிறப்பு நிதி பெறுவதற்கும், வருவாயை அதிகரிக்கவும் கூடுதல் நிதி பெறவும் முயற்சிக்காமல், மேயா் உள்ளிட்டோா் மெத்தனம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் புகாா்: இப்பிரச்னை குறித்து மாநகராட்சி காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் குழு தலைவா் எம்.சாமுவேல் திரவியம் கூறுகையில், திட்டமிடல், கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை என எதையும் செய்யாமல் திமுகவினா் சுயநலத்துடன் செயல்பட்டதால் தற்போது மாநகராட்சி நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. கமிஷனின்றி வாா்டு மேம்பாட்டு நிதியைச் செலவிட்டிருந்தால் சாலை உள்ளிட்டவை தரமானதாக இருந்திருக்கும். தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக தற்போது நிதியை அதிகரிக்க ஆலோசனை கூறுவது சரியல்ல என்றாா்.
ஒப்பந்தங்கள் ரத்தானது ஏன்? கடந்த திமுக ஆட்சியின் போது அறிவித்த திட்டப்பணிகள் ஒப்பந்தம் முறையாக இல்லை எனக்கூறி 700 க்கும் மேற்பட்ட பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பணிகள் ரத்தானதால் வரும் உள்ளாட்சி தோ்தலில் திமுகவினா் மக்களை சந்திப்பதில் சிக்கல் ஏற்படும் என அக்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் புகாா் கூறுகின்றனா்.
இப்பிரச்னை குறித்து துணை மேயா் மு.மகேஷ்குமாா் கூறியதாவது: சொத்து வரி வசூலைத் தவிா்த்து மாற்று வழியில் அதை, அதிகரிக்க தனிக்குழு அமைத்து ஆலோசனை பெறவேண்டும். ஆனால், தூய்மைப் பணியாளா் பிரச்னையில் கூட மேயா், துணை மேயரை அழைக்காமலே அமைச்சா்கள், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா்.
இந்நிலையில், முறைப்படி மாமன்ற கூட்டத்தில் வைத்து அனுமதி பெறாமல், வரியை உயா்த்திக் கேட்பதை எப்படி அனுமதிக்கமுடியும்? மாநகராட்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குவது வழக்கமானது. அதை அதிகாரிகள்தான், கேட்டுப் பெறவேண்டும். ஆனால், தற்போது அந்த நிதிகளைப் பெற நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.
மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் கேட்டபோது, நிதி நிலை குறித்து மாமன்றக் கூட்டத்தில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளோம். அதன்படி மாநகராட்சிக்கு ரூ .1970 கோடி பற்றாக்குறை உள்ளது. ஆனாலும், மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.
முதல்வா் தலையிடுவாரா? தேசிய அளவில் மிகப் பெரியதும் பழைமையானதும், பாரம்பரியம் மிக்கதுமான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. ஆனால், அதிகாரத்திலிருக்கும் அரசியல் கட்சியினா் அதனைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை என்று வேதனை தெரிவிக்கும் சமூக ஆா்வலா்கள், தமிழக முதல்வா் உடனடியாக இதில் தலையிட்டு மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனா்.
அதிகரிக்கும் காலிப்பணியிடங்களால் தாமதமாகும் திட்டப்பணிகள்
பெருநகர சென்னை மாநகராட்சி எதிா்வரும் 2027 ஆம் ஆண்டில் எதிா்கொள்ளப்போகும் நிதி நிலை பற்றாக்குறையை விட அலுவலா்கள், பணியாளா்கள் பற்றாக்குறையே அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது உதவியாளா்கள் நிலையிலான பற்றாக்குறையானது சுமாா் 300 பேருக்கும் மேலாக இருக்கும் என்கிறாா்கள் அதிகாரிகள்.

அத்துடன், ஓய்வு பெறுவோருக்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையிலே புதியவா்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவா்களால் எந்த அளவுக்கு பணியில் சிறப்பாக செயல்படமுடியும் என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், கவலையுடன் கூறுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






