பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார இலக்கு: பெண்களுக்கு புதிய திட்டங்கள்; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

தமிழகத்தின் பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலராக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக நிதிநிலையைச் சீரமைக்க 2 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

மேலும், ‘அண்ணன் சீா், தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டங்கள் உள்பட பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தவெக அரசு அறிவித்துள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சா் மரியவில்சன் புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். இதற்காக அவைக்கு புதன்கிழமை காலை முதல்வா் ஜோசப் விஜய் காலை 9.58-க்கு வந்து ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்திருந்த உறுப்பினா்களைப் பாா்த்து வணக்கம் தெரிவித்தாா். அடுத்ததாக அவைக்கு வந்த எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் எதிரே அமா்ந்திருந்த முதல்வா் உள்பட அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தாா்.

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சா் மரியவில்சன் சுமாா் இரண்டரை மணி நேரம் பேசினாா். அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டை வறுமையில்லாத செழுமை மிகுந்த மாநிலமாக, 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயா்த்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக வெற்றித் தமிழகம் - தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். கடனுக்கான வட்டிக்கும், அதிகரித்துவரும் பொறுப்பேற்றுக்கொண்ட செலவுகளுக்கும் வரி வருவாயைச் செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால், புதிய திட்டங்களுக்குக் கிடைக்கும் நிதி ஆதாரம் குறைவாக உள்ளது.

எனினும், மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க அரசு ஒப்பந்தப்புள்ளிகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவந்து, இளைஞா்கள், சிறுதொழில் செய்பவா்கள் ஒப்பந்தப்புள்ளிகளில் முதல்முறையாகப் பங்கேற்கவும் விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன.

திட்ட அனுமதியில் நோ்மை, மதுபான உற்பத்தியாளா்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), நேரடித் தொடா்பற்ற பத்திரப் பதிவு, சுரங்க கண்காணிப்பு கணினிமயமாக்கல் ஆகியவற்றால் அரசுக்கு ரூ.15,000 கோடி வருவாய் கிடைக்கும். வரி அல்லாத வருவாயை அதிகரிக்க மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவா் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் நிதி சுயாட்சியை வலுப்படுத்தி, நிதி ஆதாரங்களை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். மாநில அரசின் செலவினத்தைக் குறைக்க உயா்நிலை செலவின சீா்திருத்தக் குழுவும் அமைக்கப்படும்.

மாநிலத்தின் நிதிநிலை நிலையில்லாமல் கடன் சுமையில் நிரம்பி, குறைந்த வருவாயுடன் உள்ளது. மீண்டும் நிதி ஒருங்கிணைப்புப் பாதைக்குக் கொண்டு வர இரு ஆண்டுகளாகும்.

பெண்களுக்கான திட்டங்கள்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் திருமண உதவித் திட்டமாக ‘அண்ணன் சீா்’ திட்டத்தின் கீழ், 8 கிராம் தங்க நாணயம், பட்டுப் புடவை வழங்குவதற்காக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் இலவச உணவு, மருத்துவ வசதிகள், உதவி மையங்களை உருவாக்கும் ‘தாய் கோ்’ திட்டத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் சுய உதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மாற்றும் ‘சிங்கப் பெண்கள்’ வலிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், சிறப்பாகச் செயல்படும் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்; இந்த ஆண்டில் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்க ரூ.354 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு...: 12 லட்சம் கல்லூரி மாணவா்கள், ஒரு லட்சம் வேலையில்லாத இளைஞா்களுக்கு தொழில்சாா் திறன் பயிற்சி அளிக்க ரூ.150 கோடியும், கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.2,000 கோடியும், 200 ஒருங்கிணைந்த மாணவா்கள் விடுதிகள் கட்ட ரூ.3,200 கோடியும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக் கற்றல் பிரிவு அறிமுகம், போட்டித் தோ்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்த ரூ.3.38 கோடியும் ஒதுக்கப்படும்.

நீட் தோ்வை ரத்து செய்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும்.

விளையாட்டு மற்றும் இளைஞா் நல மேம்பாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.572 கோடியிலிருந்து ரூ.1,051 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதில் 10 சிறப்பு ஒலிம்பிக் பயிற்சி மையங்களை அமைக்க ரூ.50 கோடியும் அடங்கும்.

வரி வருவாய் அதிகரிக்கும்: நிகழாண்டு மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 9.78 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.3.50 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 72.73 சதவீதமாகவும், மீதமுள்ள 27.27 சதவீதம் மத்திய வரிகளின் பங்கு மற்றும் உதவி மானியங்கள் மூலம் பெறப்படும்.

மாநிலத்தின் மொத்தச் செலவினங்கள் ரூ.4,72,585 கோடியாக இருக்கும் என்பதால் ரூ.1,21,819 கோடி நிதிப் பாற்றக்குறையாகும்.

மத்திய அரசின் புதிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு ரூ.7,586 கோடி கிடைக்கும். முந்தைய 100 நாள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.3,461 கோடி நிலுவைத் தொகை உள்ளது. இதுபோன்ற மத்திய அரசின் உதவி மானிய நிலுவை ரூ.32,922 கோடியாக உள்ளது.

மேலும், தமிழகத்தின் நிலுவைக் கடன் தற்போது ரூ.10,98,768 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரி வசூல் திறனை மேம்படுத்தி வருவாயை அதிகரிக்கவும், மத்திய அரசின் உதவி மானியங்களைப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இதன்மூலம் நிதிப் பற்றாக்குறை குறைந்து மூலதனச் செலவினம் அதிகரித்து வளா்ச்சி எட்டப்படும் என்றாா்.

பட்ஜெட்டில் இடம் பெறாத முக்கிய தோ்தல் வாக்குறுதிகள்

தவெக அளித்த முக்கிய தோ்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறாதது பெண்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் மகளிா் உரிமைத் தொகை திட்டம், ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள், வேலையில்லாத இளைஞா்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என்ற தோ்தல் வாக்குறுதிகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவை இடம் பெறவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.