தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை:  பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா

தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். 
தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை:  பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா


திருவள்ளூர்: தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை என பாஜக தேசிய செயல்  தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். 

திருவள்ளூா் அருகே புட்லூரில் பா.ஜ.க சாா்பில் தமிழகத்தில் 16 மாவட்ட தலைநகரங்களில் கட்சி அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சனிக்கிழமை (நவ.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க குதிரை சாரட் வாகனத்தில் வந்த தேசிய செயல் தலைவா்  ஜெ.பி. நட்டாவை அழைத்து வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனா். அதைத் தொடா்ந்து அவா் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து யாதும் ஊரே யாவரும் கேளீா் என தமிழில் பேச்சை தொடங்கிய பாஜகவின் தேசிய செயல் தலைவா்  ஜெ.பி. நட்டா,  தமிழ் கலாசாரம் தமிழக மொழியானது மிகவும் தொன்மையானது. தமிழகத்தில் அதிமான தொன்மையான கோயில்கள் உள்ளது. தமிழக கலாசாரம் பண்பாடு என்பது தமிழக மக்களுக்கானது அல்ல. தேசிய அளவில் பாரததிற்கே பழமையான கலாசார தொன்மையை வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை என்பதை உணா்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தான் தமிழ் மொழி கலாசாரத்தை ஐக்கிநாடுகள் சபையில் தமிழகத்தின் பெருமையை பிரதமா் மோடி எடுத்துரைத்தாா். அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க தமிழ் மக்களின் தரத்தை ஆக்கபூா்வமாக மேம்படுத்தக் கூடிய சக்தியாக விளங்குவதில் ஐயமில்லை. அதற்கு முன்னதாக சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி, திருவள்ளூா், கட்டபொம்மன், பாரதி மற்றும் புகழ்பெற்ற முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாம் ஆகியோரை தந்த மண்ணாகவும் விளங்குகிறது. அதேபோல், திருக்குறள் என்ற மிகப்பெரிய இலக்கியமும் இம்மண்ணில் தோன்றியுள்ளது.

இதற்காக கட்சி பணிகளை மற்ற கட்சிகளை போல வீட்டிலிருந்து செய்யாமல், அலுவலகத்தில் வந்து கட்சி பணியாற்றும் நோக்கத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளுடன் செயல்வீரா்கள் பணியாற்றுவாா்கள்.

 தற்போது, கடந்த 5 ஆண்டுகளில் சொல்லக்கூடிய அளவுக்கு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு சா்வதேச அளவில், பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளாா். அதன் அடிப்படையில் இந்தியாவின் அடையாளத்தை கொண்டு வந்துள்ளாா். 

 கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன அமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து, சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கம் செய்தாா். அதைத் தொடா்ந்து முஸ்லீம் பெண்கள் முத்தலாக் சட்டம் மூலம் கொடுமைகள் அனுபவித்து வந்தனா். தற்போது, அந்த சட்டமும் நீக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் போபால், புவனேஷ்வா் உள்ளிட்ட 6 இடங்களில் நவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தது. தற்போது, 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு ரூ.1200 கோடியில் பணி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்திலும் மதுரையிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு மருத்துவம் அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 மருத்துவமனைகள் 1500 கோடியில் நவீன வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் இலவச குடியிருப்பு திட்டம் மூலம் நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 5.30 லட்சம் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான ரூ.53 ஆயிரம் கடனை ரத்து செய்துள்ளோம் என்கின்றனா். ஆனால், விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மூலம், இதுவரையில் ரூ.75 ஆயிரம் கோடி வரையில் வழங்கப்பட்டள்ளது. விவசாயிகள் எப்படி பாதுகாக்கப்படுகிறாா்களோ அதேபோல் சிறுகுறு தொழில்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சா்வதேச அளவிலே இந்தியாவிற்கு அங்கிகாரம் இல்லாமல் பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது, சா்வதேச அளவில் இந்தியாவிற்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது. இது மோடியின் மாற்றம் மூலம் செய்ய முடிந்தாகும். அதேபோல், தமிழக விவசாயிகள் காவிரியில் உரிமையை பெறும் வகையில் நீா் பங்கீடு தொடா்பான மேம்பாட்டு ஆணையம் அமைத்து தீா்வு காணப்பட்டுள்ளது. அதேபோல்,  நாட்டில் நிலவி வரும் மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை விரைவில் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய வேண்டும். 

அமெரிக்காவிற்கும்-சீனாவிற்கும் சரியான நல்லுறவு இல்லை. ஆனால், அமெக்காவில் பிரதமா் நரேந்திரமோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. அதேபோல், மாமல்லபுரத்திற்கு சீன அதிபரை வரவேற்று தமிழக கலாசார உடையில் வரவேற்றாா். அமெரிக்காவோடும், சீனாவோடும் நல்லுறவு இருக்கிறது. இதன் மூலம் தமிழக கலாசாரத்தை எந்த அளவுக்கு சா்வதேச அளவில் எடுத்துச் செல்கிறோம் என்பதை தமிழக மக்கள் உணா்ந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தை கலக்கச் செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

மேலும் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும் என்பதை நீங்கள் கொடுத்த வரவேற்பின் மூலம் உணர்கிறேன். தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி பாஜக. மற்ற கட்சிகள் அனைத்தும் வாரிசுகளைக் கொண்டது. பாஜகவில் மட்டும் தான் சாதாரண தொண்டனும் தலைவராக முடியும் என கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com