ஊரடங்கு: கோவையில் தெருக்களில் திரண்ட மக்கள், அலுவலர்கள் அதிர்ச்சி

கோவையில் இன்று தெருக்களில்  பொருள்கள் வாங்க நெருக்கமாக கூடிய மக்களால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஊரடங்கு:  கோவையில் தெருக்களில் திரண்ட மக்கள், அலுவலர்கள் அதிர்ச்சி

கோவை:  தமிழகம் முழுவதும் 3 மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், கோவையில் இன்று தெருக்களில்  பொருள்கள் வாங்க நெருக்கமாக கூடிய மக்களால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ள போதும், கோவை ஆர்.எஸ். புரம், உழவர்சந்தை, தடாகம் சாலையிலுள்ள அம்மா பசுமைப் பண்ணை நுகர்வோர் கடை , காந்தி மாநகர், கணுவாய் உள்ளிட்ட பெரும் பகுதிகளில் மக்கள் நெருக்கமாக அத்தியாவசிய பொருள்களை வாங்க கூட்டமாக கூடினர்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் , கரொனா பரவும் சூழலை உருவாக்கும் விதத்திலும் மக்கள் கூடுவதைத் தடுக்கவே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தும் இவ்வளவு கூட்டம் கூடியது மக்களிடமே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. 

இவ்வாறு கணக்கிலடங்காமல் கூட்டம் திரண்டதால் மக்கள் கூட்டத்தை பார்த்து சில வியாபாரிகள், காய்கறிகள் மற்றும் மளிகை பொருள்களை மிகவும் அதிக விலைக்கு விற்றனர். குறிப்பாக காலை 8 மணி அளவில் ரூ.50 முதல் 80-க்கும் விற்கப்பட்ட காய்கறிகள் 10 மணி அளவில் ரூ.150 முதல் 200-க்கு விற்கப்பட்டன.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மட்டுமே முழு ஊடரங்கு என அறிவிக்கப்பட்ட போதிலும் ஊரக பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டமாக கூடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அத்தியவசிய பொருள்களை வாங்கி சென்றனர். குறிப்பாக இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மேலும் முழு ஊடரங்கு நேரத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை  யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசின் புதிய அறிவிப்பால் மக்கள் மேலும் பயந்து இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். வீடுகளுக்கே பால் விநியோகம், நடமாடும் காய்கறி வாகனங்கள் வரும் என அறிவித்தபோதிலும் மக்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கின்றனர். மக்களுக்கு அதிகாரிகள் வீடு வீடாக தண்டோரா போடுவது போல் மைக்குகளில் இது தொடர்பாக தெளிவுபடுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com