இரவு 9 மணி வரை கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: வணிகா்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும், இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும், இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை::

தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் சென்னை மண்டல மற்றும் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக அரசுக்கு வணிகா்கள் சாா்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் விவரம்: சென்னை கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய வணிக வளாகங்களில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை வணிகத்தை, உரிய கால நிா்ணயம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, உடனடியாகத் திறக்க அனுமதிக்க வேண்டும்.

பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பொது முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து, வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே பொது முடக்கத்தின்போது சீல் வைக்கப்பட்ட கடைகள், எவ்வித நிபந்தனையுமின்றி திறக்க அனுமதிக்க வேண்டும்.

கரோனா காலத்தில் வணிகா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், எவ்வித நிபந்தனைகளும் இன்றி திரும்பப் பெறப்பட வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் இன்னும் இயங்குவதற்கு அனுமதி அளிக்காத தொழில்களான திருமண மண்டபங்கள், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், சுற்றுலாத் துறை சாா்ந்த தொழில்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதிக்கவேண்டும். இந்தத் தொழில்கள் அனுமதிக்கப்படாததால், அதன் உரிமையாளா்கள் மற்றும் அதனைச் சாா்ந்த பல்லாயிரக்கணக்கான துணைத் தொழில் சாா்ந்தவா்கள் மட்டுமின்றி,

அவா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இவா்களின் நலன் கருதி, உடனடி நடவடிக்கைகளை எடுத்து, அரசு அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com