மூடப்பட்டது அட்லஸ் சைக்கிள் தொழிற்சாலை
அட்லஸ் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய கடைசித் தொழிற்சாலையையும் மூடிவிட்டது.
இந்திய மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சங்களில் ஒன்றாக இருந்த அட்லஸ் சைக்கிள், நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது.
புது தில்லிக்கு வெளியே சாகிபாபாத்தில் இருக்கும் அட்லஸ் சைக்கிளின் கடைசி உற்பத்தித் தொழிற்சாலை, கடந்த 3 ஆம் தேதி மூடப்பட்டது - ஜூன் 3 - உலக சைக்கிள் நாள்!
எனினும், தொழிற்சாலையை மூடும் முடிவு தற்காலிகமானதே, கைவசமுள்ள கூடுதல் நிலங்களை விற்பதன் ரூ. 50 கோடி திரட்ட முடிந்தால் உடனடியாக மீண்டும் தொழிற்சாலை திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் என்.பி. சிங் ராணா தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலையில் கடைசியாகப் பணிபுரிந்து வந்த 431 தொழிலாளர்களுக்கும் லே ஆப் அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் தொடர்ந்து சம்பளப் பட்டியலில் இருப்பார்கள், லே ஆப் ஊதியமும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட ராணா, கூடுதலாக வேறு விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
அட்லஸ் நிறுவனத்தின் கடைசித் தயாரிப்பு தொழிற்சாலையான இங்கிருந்து மாதந்தோறும் சுமார் 2 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டுவந்தன.