கீழை மார்க்சியத்தை முன்வைத்த அறிஞர் எஸ்.என். நாகராசன்

சத்தியமங்கலம் நாகராசனுக்குத் தமிழக மார்க்சிய வட்டத்தில் காத்திரமானதோர் இடம் உண்டு.
கீழை மார்க்சியத்தை முன்வைத்த அறிஞர் எஸ்.என். நாகராசன்
Published on
Updated on
3 min read

சத்தியமங்கலம் நாகராசனுக்குத் தமிழக மார்க்சிய வட்டத்தில் காத்திரமானதோர் இடம் உண்டு. தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சி என்ற அமைப்பின் சார்பாக அவர் வெளியிட்ட சிறு வெளியீடு (15/03/1969) தமிழகத்தில் அக்காலகட்டத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. தமிழ்நாடு விடுதலை குறித்து மார்க்சிய- லெனினிய வழியில் தமிழில் முன்னோடியாக வந்த ஆவணம் இதுதான்.

முதன்முதலில் மார்க்சிய வட்டத்தில் தேசிய இனச்சிக்கல் குறித்த முக்கியத்துவத்தை அந்த வெளியீடு வலியுறுத்தியது. பல்வேறு மொழிகள், வரலாறுகள், மரபுகள், பண்பாடுகள் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒற்றை மையத்தில் அதிகாரத்தைக் குவிப்பது சனநாயகத்திற்கு எதிரானது என்பதை நாகராசன் இறுதி வரை எதிர்த்து வந்தார். கோவை ஞானி, எஸ்விஆர் போன்றோர் இவரோடு இணைந்து தொடக்கத்தில் செயலாற்றி வந்தனர். அப்பொழுது இவர்கள் வெளியிட்ட "புதிய தலைமுறை" பத்திரிகை முற்போக்குச் சிந்தனை வட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் ரமணன் என்ற பெயரில் நாகராசனின் கருத்துகள் வெளியிடப்பட்டன. "1844 பொருளாதார மற்றும் தத்துவக் குறிப்புகள்" எனும் நூலில் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட "அந்நியமாதல்" எனும் கருத்தைத் தமிழகத்தில் முதன்முதலில் நாகராசன்தான் முன்னெடுத்தார். முதலாளித்துவ சமுதாயம், எப்படி அனைவரையும் அந்நியமாக்குகிறது என்பதை நடைமுறை எடுத்துக்காட்டுகள் மூலம் நாகராசன் தெளிவாக்கினார்.

மார்க்சியக் கோட்பாடுகளை மண்ணின் மரபோடு இணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது கருத்து. இயங்கியல் கோட்பாடுகளைக் கூட எளிய மொழியில் தமிழ்ப்பழமொழிகள் மூலம் அவர் வெளிப்படுத்தினார். ஒரு சமூகத்தின் சாரம், பழமொழிகளில் உறைந்திருக்கிறது எனவும், இந்தியாவிலேயே தமிழில்தான் அதிகப் பழமொழிகள் உள்ளன எனவும் அடிக்கடி கூறி வந்தார். மேலை மார்க்சியம், கீழை மார்க்சியம் என வேறுபடுத்தி அவர் கருத்துக்களை முன்வைத்தார். இக்கருத்தாக்கம் கடும் எதிர்வினைகளை உருவாக்கியது. இருப்பினும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். கீழை மார்க்சியம் (Eastern Marxism) எனும் அவரது ஆங்கில நூலில் தனது வாதத்தை அவர் முன்வைத்தார். மார்க்சியம் கிழக்கும் மேற்கும், கம்யூனிசம், விடுதலையின் இலக்கணம், வாழும் மார்க்ஸ், அழிவின் தத்துவம், கிழக்கு வெல்லும் போன்ற நூல்களில் அவரது பரந்துபட்ட கண்ணோட்டத்தைக் காண முடியும். அறிவியல் தொழில்நுட்பம் குறித்துக் கறாரான கருத்தாக்கத்தைக் கொண்டிருந்தார். 

அறிவியல் தொழில்நுட்பம், இன்று வல்லரசு நாடுகளுக்குச் சேவை செய்வதாக மாறிவிட்டது எனச் சுட்டிக் காட்டியதோடு, அறிவியல், எப்பொழுதும் அறம் சார்ந்து இருக்கவேண்டும் என்பதும், அது மக்கள் சார்பாகப் பயன் படுத்தப்பட வேண்டும் என்பதும் அவரது தீர்க்கமான முடிவுகளாக இருந்தன. அந்த அடிப்படையில் அவர் போர்களுக்கு எதிரான கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். உலக சமாதான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதும் அவரது கனவாக இருந்தது. மாவோவின் கொள்கைகளை அவர் விடாப்பிடியாக வலியுறுத்தி வந்தார். சீன வரலாறு, அதன் தொன்மை மரபு, இலக்கியச் செழுமை ஆகியவற்றின் அடிப்படையில் மாவோ எவ்வாறு சீனப்புரட்சியை முன்னெடுத்தார் என்பதைப் பல்வேறு தரவுகள் மூலம் விளக்குவார். உழவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தேசிய இனத்தினர் மற்றும் மகளிர் ஆகியவர்களின் ஒருங்கிணைவுதான் தமிழ்நாட்டிற்கு - இந்தியாவிற்கு - விடியலைத் தேடித்தரும் என்பதில் உறுதியாக இருந்தார்.

எந்தவொரு நூலாக இருந்தாலும், கோட்பாடாக இருந்தாலும், அது சமுதாயத்தில் விளக்கப்படாத ஒன்றை விளக்கக்கூடியதாகவும், அடுத்த செயல் திட்டத்திற்கு வழிவகுப்பதாகவும் இருக்க வேண்டும் என அவர் வரையறை செய்தார். அப்படி இல்லாத எந்த நூலும், கோட்பாடும்  ஏற்கத்தக்கதல்ல என்பது அவரது முடிவு. சூழலியம் குறித்த விழிப்புணர்வைத் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுத்ததில் அவருக்கு முக்கியப் பண்பு உண்டு. குறிப்பாகச் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து, வீரிய விதை போன்றவை நமது சூழலை எவ்வாறு பாழாக்குகின்றன என்பதை அவர் அனுபவ வாயிலாக விளக்கினார். இதற்கான போராட்டங்களிலும் அவர் இயன்ற அளவு பங்கேற்றார். வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் அவர்களோடு இணைந்து இயற்கை விவசாயம் குறித்த பரப்புரையை மேற்கொண்டார். மரபுவழி வேளாண்மை குறித்து அறிவியலாளர் ஆர்.எச். ரிச்சாரியா போன்றோரது கருத்துகளைத் தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

தவிர, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அறிவுப்புலத்தில் செயல்பட்டவர்களுடன் தொடர் உறவில் இருந்தார். அஸ்கர் அலி எஞ்சினியர், இரஜினி கோத்தாரி, அஷீஷ் நந்தி போன்றவர்களோடு அவருக்கு இருந்த நட்பு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகழ்பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கியுடன் இறுதி வரை கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். பிராமணராகப் பிறந்திருந்தாலும், படிக்கும் காலத்திலேயே பூணூலை நீக்கிவிட்டார். பொதுவாழ்வில் செயல்படக்கூடியவர்கள், தம்மைச் சாதி நீக்கம், வர்க்க நீக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுவார். அறிவுச் செருக்கு, செல்வச் செருக்கு, சாதிச்செருக்கு ஆகியவற்றை நீக்கியவனே மனிதன் என்பது அவரது முடிவு. தனிப்பட்ட வாழ்விலும் அவர் இயன்ற வரை அதைக் கடைப்பிடித்தார். அவரது தேவைகள் மிக மிகக் குறைவு. எளிமையே அவரது வாழ்முறையாக இருந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் குறித்து அடிக்கடி குறிப்பிடுவார். குறிப்பாக வைணவ மரபை மிகவும் உயர்த்திப் பிடிப்பார். அவரது இறுதிக் காலத்தில் தன்னை "இராமனுசதாசன்" என அடையாளப்படுத்திக்கொண்டார்.

வைணவமே சமூக விடுதலைக்கு வழி என்ற அளவுக்கு அவர் நிலைப்பாடு எடுத்தது விவாதத்துக்குரியது. ஓர் இயக்கத்தைக் கட்டி அமைக்க முடியவில்லை என்ற ஏக்கம், வாழ்நாள் முழுவதும் அவரிடம் நீடித்திருந்தது. சிக்கலான தருணங்களில் எந்த முடிவை எடுப்பது என்று வந்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி அவர் ஒருமுறை எழுதினார். "நமக்குத் திட்டமில்லை என்று பெரியாரிடம் கேட்டார்களாம். என்ன பெரிய திட்டம்? இராஜாஜி என்ன சொல்கிறாரோ, அதற்கு எதிராகச் சொல்லு. அவர் வேண்டும் என்றால் நீ வேண்டாம் என்று சொல் என்று மிக எளிமையான சூத்திரம் ஒன்றைப் பெரியார் நமக்கு தந்தார். இதையே மாவோ எதிரிக்கு எது நியாயமோ, அது நமக்கு அநியாயம். எதிரிக்கு எது கெடுதலோ, அது நமக்கு நல்லது" என நாகராசன் எழுதினார். "குறைகள், நிறைகள் குறித்து முடிவெடுக்கும்  தருணத்தில், குறை - நிறை ஆகியவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ, அதைக் கொண்டு ஒரு விஷயத்தை மதிப்பிட வேண்டும்" என மாவோ குறிப்பிட்டதை நாகராசன் அடிக்கடி குறிப்பிடுவார். அந்த அளவுகோல் நாகராஜனுக்கும் பொருந்தும்.

[கரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னையில் திங்கள்கிழமை சத்தியமங்கலம் எஸ்.என். நாகராசன் மறைந்தார்].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com