கரோனா பேரிடர்: செல்வ குவிப்பு ஒருபுறம், வறுமை பலி மறுபுறம்

கரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சமத்துவமின்மை குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கரோனா பேரிடர்: செல்வத்தை குவிப்பு ஒருபுறம், வறுமை பலி மறுபுறம்
கரோனா பேரிடர்: செல்வத்தை குவிப்பு ஒருபுறம், வறுமை பலி மறுபுறம்

கரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சமத்துவமின்மை குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று வைரஸானது உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சாதாரண மக்களை பெரும் சிக்கலுக்கு தள்ளின. 

திடீர் ஊரடங்கால் பலரும் வேலையிழந்ததால் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தக் கூட சிரமப்பட்டனர். இது ஒருபுறமிருக்க கரோனா பேரிடர் காலத்தில் உலகின் பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஆக்ஸ்பாம் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆய்வறிக்கையின்படி கரோனா பேரிடர் காலத்தில பல்வேறு நாடுகளின் மக்களும் வறுமையில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் உலகின் முன்னணி 10 பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்புகள் மட்டும் இரு மடங்கு அதிகமாகியுள்ளது. முன்பு ரூ.52 லட்சம் கோடியாக இருந்த பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பானது பேரிடர் காலத்தில் ரூ.111 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பொருளாதார சமத்துவமின்மையால் ஒவ்வொரு 4 விநாடிகளுக்கும் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஆக்ஸ்பான் ஆய்வறிக்கை தங்களுக்கு கிடைக்க வேண்டிய போதிய மருத்துவ வசதியின்மையால் மோசமான முறையில் மக்கள் உயிர்களை இழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 100 கோடி மக்களின் மொத்த சொத்து மதிப்புகளைக் காட்டிலும் வெறும் 252 பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. 

1995ஆம் ஆண்டிலிருந்து உலக மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதத்தினர் உலக மக்களின் மொத்த சொத்து மதிப்பைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளனர். 

முன்னர் தெரிவித்ததுபோல் உலகின் முன்னணி பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ள அதே வேளையில் 16 கோடி மக்கள் கட்டாய வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 1.7 கோடி மக்கள் உலகம் முழுவதும் பலியாகியுள்ளனர். இது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பதிவான அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். 

முன்னணி 10 செல்வந்தர்கள் தங்களது சொத்துக்களில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் என செலவழித்தால் அவர்களின் மொத்த சொத்துக்களும் காலியாக 414 வருடங்கள் ஆகும் எனும் அதிர்ச்சித் தகவலும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் மொத்த சொத்துக்களை வைத்து உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா சூழலை தங்களுக்கு சாதமாக பெரும் பணக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட பொருளாதார சமத்துவமின்மையால் ஒவ்வொருநாளும் 21,300 பேர் பலியாகியுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

இந்தியாவைப் பொருத்தவரை கரோனா பேரிடர் காலத்தில் 102ஆக இருந்த பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது.  நாட்டில் உள்ள 100 பெரும் செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பானது ரூ.57.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் 2020ஆம் ஆண்டில் மட்டும் 4.6 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் நாட்டின் மொத்த செல்வத்தில் 77 சதவிகிதத்தை கொண்டுள்ளனர்.

நாட்டின் பெரும் செல்வந்தர்களுக்கு 1 சதவிகித சொத்துவரி விதித்தால் அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் அனைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட முடியும் எனவும், முன்னணி 98 செல்வந்தர்களுக்கு 4 சதவிகித சொத்துவரி விதிக்கப்பட்டால் கிடைக்கும் வருவாயில் இரண்டு வருடங்களுக்கு சுகாதார நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியும் எனவும், மதிய உணவு திட்டத்தை அடுத்த 17 வருடங்களுக்கு செயல்படுத்த முடியும் எனவும் தெரிய வந்துள்ளது. 

வசதி படைத்தவர்கள் செல்வம் குவிக்க உருவாக்கப்பட்ட கொள்கைகளால் சாதாரண மக்கள் மீது பொருளாதார நீதியிலான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com