திருப்பூர்: மும்முனைப் போட்டியில் முந்துவது யார்?

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
திருப்பூர்: மும்முனைப் போட்டியில் முந்துவது யார்?

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பின்னலாடை உற்பத்தி, விசைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிகளைப் பொறுத்தவரையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.

வெற்றி விவரம்:

கடந்த 2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் திருப்பூர் தெற்கு, அந்தியூர் ஆகியவை திமுக வசமும், மற்ற நான்கும் அதிமுக வசமும் உள்ளன.

2009 முதலான 3 மக்களவைத் தேர்தல்களில் இருமுறை அதிமுகவும், ஒருமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 2009இல் அதிமுகவைச் சேர்ந்த செ.சிவசாமியும், 2014இல் அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.

கடந்த தேர்தலில்...

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 5,08,725 (45.44%) வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 (37.1%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்திரகுமார் 64,657 (5.78%) வாக்குகளையும், அமமுக வேட்பாளர் செல்வம் 43,816 (3.91%) வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகந்நாதன் 42,819 (3.77%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

வேட்பாளர்கள்:

இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய சமாஜ் பக்ஷ, தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி, சுயேச்சைகள் 6 பேர் என 13 பேர் போட்டியிடுகின்றனர்.

கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்): திமுக கூட்டணியில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கே.சுப்பராயன் மீண்டும் களமிறங்கியுள்ளார். தேர்தலில் நீண்ட அனுபவம் பெற்ற இவர் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர், ஏஐடியூசி சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்து வருகிறார். இந்தத் தொகுதியின் எம்.பி. என்ற முறையில் மக்களிடம் அறிமுகம், திமுக கூட்டணிக் கட்சிகள், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோரின் தீவிர பிரசாரம் ஆகியவை பலம். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் குறிப்பிடும்படியான எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி பலவீனம் ஆகும்.

ப.அருணாசலம் (அதிமுக): ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளராக உள்ள ப.அருணாசலம் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் தொகுதிகளில் அறிமுகமானவர். பெருந்துறை, கோபி, பவானி தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவு இவருக்கு பலம். உள்ளாட்சித் தேர்தல்களில் வென்றிருந்தாலும், சட்டப் பேரவை, மக்களவைத் தேர்தல்களை சந்தித்த அனுபவம் இல்லாதது, தேர்தல் பணிகளில் நிர்வாகிகளிடம் முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது இவருக்கு பலவீனம்.

ஏ.பி.முருகானந்தம் (பாஜக): பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாலையின் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் நிறைவடைந்தபோது அதில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியது அக்கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை எப்படியும் திருப்பூர் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பாஜகவினர் களப்பணியாற்றி வருகின்றனர்.

பாமக கூட்டணியில் உள்ள நிலையில் சுமார் 2 லட்சம் வன்னியர் வாக்கு வங்கி உள்ள அந்தியூர், பவானி தொகுதிகள் திருப்பூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளது இவருக்கு பலம். தொகுதிக்குப் புதியவர் என்பதும், பாஜகவுக்கு கிராமப் பகுதிகளில் கட்சி கட்டமைப்பு போதிய அளவு இல்லாததும் பலவீனம்.

மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி): நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2016, 2021 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், 2019-இல் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தேர்தல் அனுபவம் உள்ளது.

சீமான் பிரசாரம் தவிர, களப்பணியில் வலிமை இல்லாதது இவரது பலவீனம்.

முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களில் பெண் வேட்பாளர் இவர் ஒருவர் மட்டுமே என்பதாலும், தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்குகளை சேகரித்து வருவதாலும் கணிசமான அளவு வாக்குகளைப் பிரித்து மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

திருப்பூர்: மும்முனைப் போட்டியில் முந்துவது யார்?
விழுப்புரம்: வெற்றிக்கு வித்திடுமா கூட்டணி பலம்?

வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண்கள்: 7,91,027

பெண்கள்: 8,17,239

மூன்றாம் பாலினத்தவர்: 255

மொத்த வாக்காளர்கள் 16,08,521

2019 தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்குகள்: 15,28,836

பதிவான வாக்குகள்: 11,15,610

கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்): 5,08,725

எம்.எஸ்.எம்.ஆனந்தன்(அதிமுக): 4,15,357

சந்திரகுமார் (ம.நீ.மய்யம்): 64,657

செல்வம் (அமமுக): 43,816

ஜெகந்நாதன் (நாம் தமிழர் கட்சி): 42,819

தொகுதியின் முக்கியப் பிரச்னைகள்:

பின்னலாடைத் தொழிலில் 85 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு, நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் இந்த நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் பாலங்கள் அமைக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் பனியன் சந்தை அமைக்க வேண்டும்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூர் வரையில் நீட்டிக்க வேண்டும். பின்னலாடைகளை எடுத்துச் செல்லும் வகையில் கோவை விமான நிலையத்தில் சரக்கு முனையம் ஏற்படுத்த வேண்டும் என்பன தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பெருந்துறையில் சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலை சுற்றுலாத் தலமாக விரிவாக்கம் செய்ய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோபிசெட்டிபாளையம், பெருந்துறை தொகுதிகளில் விடுபட்ட குளம், குட்டைகளை அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com