கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

கிருஷ்ணகிரி தொகுதியில் மும்முனை அரசியல் போட்டி தீவிரம்!
கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

கர்நாடக, ஆந்திர மாநிலங்களை ஒட்டிய தமிழக எல்லையில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி. இது ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூர், தளி என 6 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்டது.

2008 தொகுதி மறுசீரமைப்பின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டன. அதன் பிறகு இந்தத் தொகுதி இதுவரை 3 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.

தேசிய கட்சிகளின் கோட்டை

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி கடந்த 1951 முதல் இதுவரை, மொத்தம் 17 தேர்தல்களையும், ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ளது. இதில் 9 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும், ஒரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

1951, 57 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.ஆர். நரசிம்மன் வெற்றி பெற்றார். 1962இல் க.ராசாராம் (திமுக), 1967இல் கமலநாதன் (திமுக), 1971இல் தீர்த்தகிரி கவுண்டர் (காங்கிரஸ்), 1977இல் பி.வி.பெரியசாமி (அதிமுக), 1980, 1984, 1989 தேர்தல்களில் வாழப்பாடி ராமூர்த்தி (காங்கிரஸ்), 1996இல் சி.நரசிம்மன் (தமாகா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1998இல் கே.பி.முனுசாமி (அதிமுக), 1999இல் வெற்றிச் செல்வன் (திமுக), 2004, 2009 தேர்தல்களில் இ.ஜி.சுகவனம் (திமுக), 2014இல் கே.அசோக்குமார் (அதிமுக), 2019இல் இந்திய அ.செல்லக்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மக்களின் பின்புலம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் உள்ளனர். வன்னியர், கொங்கு வேளாளர், ஆதி திராவிடர், செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர்.

ஒசூர், தேன்கனிக்கோட்டை தொகுதிகளில் ரெட்டி, கவுடா, நாயுடு சமுதாயத்தினர் அதிக அளவில் உள்ளனர். கிருஷ்ணகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். கிறிஸ்தவர்களும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் உள்ளனர்.

குறிப்பாக வெளி மாநிலம், மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சம் வாக்காளர்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர். தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் பரவலாகக் காணப்படுகின்றனர். உருது, ஹிந்தி பேசுவோரும் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்தாலும், ஒசூர் தொழில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகள் உள்ளன. காவேரிப்பட்டணம், பர்கூரைச் சுற்றிலும் பல தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், கிருஷ்ணகிரி தொகுதி வளர்ச்சி அடைந்த தொகுதியாக உள்ளது.

கடும் போட்டி

கடந்த பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பர்கூர், ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுகவும், தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஊத்தங்கரை (தனி), கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சட்டப் பேரவை தொகுதி வாரியாக சமமான பலத்துடன் உள்ள திமுக கூட்டணியில் இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் களம் காண்கிறார். அதிமுக சார்பில் ஒசூர் மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் முன்னாள் எம்.பி. சி.நரசிம்மன் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். இவர்கள் அல்லாது 23 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். என்றாலும் பிரதானப்போட்டி காங்கிரஸ், பாஜக, அதிமுக வேட்பாளர்களிடையே தான் மும்முனைப்போட்டி காணப்படுகிறது.

நிறைவேறாத கோரிக்கைகள்

இந்தியாவில் வளர்ச்சி அடைந்த பகுதியாக கிருஷ்ணகிரி தொகுதி காணப்பட்டாலும், தொகுதி மக்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளும் கோரிக்கைகளும் இன்னும் உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 75 ஆண்டுகளைக் கடந்த போதிலும் இன்னும் கிருஷ்ணகிரி மற்ற பகுதிகளுடன் ரயில்பாதையில் இணைக்கப்படாமல் உள்ளது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் எல்லையாக உள்ள திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஒசூரை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.

கிருஷ்ணகிரி அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் எல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் உள்ள பகுதியின் அருகில் சுங்க வசூல் மையம் உள்ளது. இந்த சுங்க வசூல் மையத்தை நீக்க வேண்டும் என்பது கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் பலர், இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வருகின்றனர். மேலும், பலர், மத்திய அரசுப் பணியில் உள்ளனர். இவர்களின் குழந்தைகளின் தரமான கல்விக்காக கிருஷ்ணகிரியில் கேந்திரீய வித்யாலயா பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது.

2019 தேர்தல் நிலவரம்

டாக்டர் செல்லகுமார் (காங்கிரஸ்) 6,11,298

கே.பி.முனுசாமி (அதிமுக) 4,54,533

மதுசூதனன் (நாதக) 28,000

ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (மநீம) 16,995

வாக்காளர்கள் விவரம்

மொத்த வாக்காளர்கள் : 16,23,179

ஆண்கள் : 8,14,076

பெண்கள் : 8,08,798

மூன்றாம் பாலினத்தவர் : 305

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com