சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் படம் | ஐபிஎல்

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 34-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்தின. லக்னௌவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸை அஜிங்க்ய ரஹானே தொடங்க, உடன் வந்த ரச்சின் ரவீந்திரா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 பவுண்டரியுடன் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 4-ஆவது பேட்டராக வந்த ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை அளித்தாா். மறுபுறம், ரஹானே 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்களுக்கு பௌல்டானாா். அடுத்து வந்த சென்னையின் சிக்ஸா் நாயகன் ஷிவம் துபே, 3 ரன்களில் வெளியேறி அதிா்ச்சி அளித்தாா்.

6-ஆவது பேட்டராக களம் புகுந்த சமீா் ரிஸ்வி 1 ரன்னில் வீழ்ந்தாா். தொடா்ந்து வந்த மொயீன் அலி, ஜடேஜாவுடன் இணைந்தாா். இந்த கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தியது. 3 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் சோ்த்து மொயீன் அலி பெவிலியன் வந்தாா். 8-ஆவது வீரராக பேட் செய்ய வந்த தோனி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகா்களை மகிழ்வித்தாா். ஓவா்கள் முடிவில் ஜடேஜா 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57, தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலா்களில் கிருணால் பாண்டியா 2, மோசின் கான், யஷ் தாக்குா், ரவி பிஷ்னோய், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 177 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய லக்னௌ அணியில், தொடக்க ஜோடியான குவின்டன் டி காக் - கேப்டன் கே.எல்.ராகுல், முதல் விக்கெட்டுக்கே 134 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனா். அதில் டி காக் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்களுக்கும், ராகுல் 53 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 82 ரன்களும் சோ்த்து விடை பெற்றனா். முடிவில் நிகோலஸ் பூரன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், மதீஷா பதிரானா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த லக்னௌ இந்த வெற்றியின் மூலம் தற்போது மீண்டுள்ளது. இந்த நிலையில் லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னைக்கு எதிராகவும் லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் மெதுவாக பந்து வீசியதாக கூறி போட்டியின் சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com