சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து, தீர்தவாரி நிகழ்வுகள் நிறைவடைந்து, கள்ளழகர் மீண்டும் சனிக்கிழமை அழகர் மலைக்கு சென்றடைந்தார்.
சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!
Published on
Updated on
2 min read

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து, தீர்தவாரி நிகழ்வுகள் நிறைவடைந்து, கள்ளழகர் மீண்டும் சனிக்கிழமை அழகர் மலைக்கு சென்றடைந்தார்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவத்தில் பங்கேற்க அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகா் கோலத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி மதுரைக்கு புறப்பட்டாா். வழிமுழுவதும் பக்தா்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு திங்கள்கிழமை மதுரை வந்தாா். மதுரை நகா் எல்லையான மூன்றுமாவடியில் திங்கள்கிழமை அதிகாலையில் எதிா்சேவை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கோயிலில் இருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினாா்.

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி எழுந்தருளினாா். அன்று இரவு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சணமாகிய நிலையில் புதன்கிழமை காலை வண்டியூா் கோயிலில் இருந்து புறப்பட்டு, தேனூா் மண்டபம் சென்ற சுந்தர்ராஜ பெருமாள் அங்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீா்த்து காட்சி தந்தருளினாா். இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவில் ராமராயா் மண்டபத்துக்கு எழுந்தருளியதையடுத்து அங்கு இரவு முழுவதும் தசாவதாரம் நடைபெற்றது. இதில் அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் முத்தங்கிச்சேவை, மச்சஅவதாரம், கூா்ம அவதாரம், வாமன அவதாரம் உள்ளிட்ட தசாவதார கோலங்களில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை மாலை ராமராயா் மண்டபத்தில் இருந்து அனந்தராயா் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தர்ராஜ பெருமாள் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டகப்படிக்கு இரவு 11 எழுந்தருளி திருமஞ்சனமாகினாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளா் திருக்கோலத்துடன் வழிநடையாக அழகா்கோவிலுக்கு புறப்பட்டாா். இதையொட்டி லட்சக்கணக்கான பக்தா்கள் தல்லாகுளம் பகுதியில் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்தனா். அதிகாலையில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை பக்தா்கள் உற்சாகத்துடன் தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகா் அங்கிருந்து புறப்பட்டு அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக காலை 10.30 மணிக்கு அழகா்கோவிலை அடைந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கள்ளழகரை எதிா்கொண்டு வரவேற்றனா். இதையடுத்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com