மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கனமழை: தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆகஸ்ட் 5 வரை கனழை பெய்யக்கூடும் - ஐஎம்டி எச்சரிக்கை

கனமழையைக் கருத்தில் கொண்டு தலைநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(ஆகஸ்ட் 1) விடுமுறை அறிவித்து தில்லி கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டார்.

News image
தலைநகரில் பெய்த கனமழையால் நனைந்த தில்லியின் காட்சிகள், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் முழங்கால் மழைநீரில் வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள்.
Updated On :1 ஆகஸ்ட் 2024, 4:47 am

DIN

புது தில்லி: கனமழையைக் கருத்தில் கொண்டு தலைநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(ஆகஸ்ட் 1) விடுமுறை அறிவித்து தில்லி கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டார். இதனிடையே, தலைநகரில் ஆகஸ்ட் 5 வரை கனழை பெய்யக்கூடும் என ஐஎம்டி கணித்துள்ளது.

இதுதொடர்பாக அதிஷி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"புதன்கிழமை மாலை மிக அதிக மழைப்பொழிவு மற்றும் வியாழக்கிழமை(ஆகஸ்ட் 1) அதிக மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பினை அடுத்து, தில்லியில் உள்ல அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதேபோன்று தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தலைநகரில் இடைவிடாத மழைப்பொழிவு மற்றும் மோசமான வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு தில்லி மாநகராட்சியின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக, தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா எக்ஸ் வலைதள பக்க பதிவு ஒன்றில், கனமழை காரணமாக மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறும், அவர்களை பாதுகாப்பாதற்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். ‘பொதுவாக மக்களுக்கு குறைந்தபட்ச சிரமத்தை உறுதி செய்வதைத் தவிர, பயிற்சி மையங்கள் உள்பட, தண்ணீா் தேங்கக்கூடிய தளங்களில் உள்ள பிரச்னைகளை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என்று அவா் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தலைநகா் தில்லியில் புதன்கிழமை மாலை தில்லி மற்றும் அதன் அருகிலுள்ள பல பகுதிகளில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் நூறு மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால், தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகல் போக்குவரத்து நெரிசலை எதிா்கொள்ள நேரிட்டது.

இதற்கிடையே, கனமழை காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பாதுகாக்கவும் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தில்லிக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

கனமழையைத் தொடா்ந்து லுட்யென்ஸ் தில்லி, கஷ்மீரி கேட் மற்றும் ராஜிந்தா் நகா்உள்பட நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.

தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுத்தது. மழை நீா் அதிகம் தேங்கிய சில பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

மத்திய தில்லியில் உள்ள பிரகதி மைதான் வானிலை ஆய்வகத்தில் ஒரு மணி நேரத்தில் 112.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது ஐஎம்டியால் ‘மேக வெடிப்பு’ என வரையறுக்கப்படுகிறது.

தேசியத் தலைநகருக்கான வெள்ள வழிகாட்டுதல் அறிக்கையில் ‘கவலைக்குரிய பகுதிகள்’ பட்டியலில் தில்லியும் சோ்க்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தலைநகரில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கிழக்கு தில்லியின் காஜிபூர் பகுதியில் புதன்கிழமை தண்ணீர் தேங்கிய வாய்க்காலில் விழுந்து ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் காஜியாபாத் பிரகாஷ் நகர் கோடா காலனியில் வசிக்கும் தனுஜா (22) மற்றும் அவரது குழந்தை பிரியான்ஷ் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

"அவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கிழக்கு தில்லியின் காஜிபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக" போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கனமழைக்கு மத்தியில், தில்லி சப்ஜி மண்டி பகுதியில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக தீயணைப்புத் துறையினர் அங்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை இரவு 8.57 மணியளவில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக, தில்லியில் இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகரில் இடைவிடாத மழை பெய்ததையடுத்து எய்ம்ஸ் அருகே உள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நீர்நிலைகள் போன்று காட்சியளித்தன.

இதனிடையே, தில்லியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

மேலும் தில்லியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரையிலும் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.