ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வருடன் அமைச்சர்கள் கலந்துகொள்வார்களா? - தங்கம் தென்னரசு
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வருடன் அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு.
சென்னை: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வருடன் அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் எப்போதும் அன்பும், அக்கறையும் கொண்டு நல்ல திட்டங்களை நாள்தோறும் அறிவிக்கக்கூடிய முதல்வர் இன்றைக்கு மிகச் சிறப்பான அறிவிப்புகளை தன்னுடைய சுதந்திர நாள் உரையில் இன்றைக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த உரையில் அவர் அறிவித்திருக்கக்கூடிய மிக முக்கியமான அறிவிப்புக்களில் ஒன்று “முதல்வர் மருந்தகம்” என்கின்ற பெயரில்
தமிழ்நாட்டில் மருந்தாளுநர்கள் பயன்பெறத்தக்க அளவில் கூட்டுறவு அமைப்புகள் பயன்பெறத்தக்க அளவில் 1000 மருந்தகங்கள் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக திறக்கப்படும். குறிப்பாக, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்று இருக்கக்கூடிய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் அவற்றிற்கு உரிய மருந்துகளை பெறுவதில் அதிகளவில் அவர்களுக்கு பணச் செலவு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் சுமையைக் குறைக்கக்கூடிய வகையில், மிகக்குறைந்த விலையில், அந்த
மருந்துகள் பொதுப்பெயர் வகையில் அதாவது ஜென்ரிக் மருந்துகள் என்கின்ற வகையில் பிராண்டடாக இல்லாமல் ஜென்ரிக் மருந்துகள்
என்கின்ற வகையில் அந்த மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதில் உறுதி செய்யக்கூடிய வகையில் இந்த மருந்தகங்கள் அமைப்பதற்கு அறிவிப்பினை செய்திருக்கிறார்கள். இது பொது மக்களுக்குப் பயன்படக்கூடிய அதேவேளையில் பலருக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த அறிவிப்பாக இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.
அதுபோல, “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் அடிப்படையில் தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயது முழுவதும் ராணுவச் சேவையில் கழித்து நம்முடைய நாட்டை காக்கக் கூடிய பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய முன்னாள் படைவீரர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யக்கூடிய வகையில், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்கின்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்குவதற்காக ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலமாக கடனுதவி பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இந்தக் கடன் தொகையில் 30% அதற்கு மூலதன மானியமாக அதற்கு வழங்கப்படும். 3 சதவீத வட்டி மானியமாக வழங்கப்படும் என்கின்ற சிறப்பான அறிவிப்பையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தத் தொழிலை தொடங்குவதற்கு நம்முடைய முன்னாள் படைவீரர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்குவதற்கும், அவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும், உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 400 முன்னாள் ராணுவ படைவீரர்கள் பயன்பெறத்தக்க வகையில்,ரூ. 400 கோடி மதிப்பில், ஏறத்தாழ ரூ.120 கோடி மூலதன மானியம்; அதைப்போல, மூன்று விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து இதற்கு வழங்கப்படும்.
அதுபோல, தியாகிகளின் ஓய்வூதியம் வழங்குவதில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரமாக வழங்கக்கூடிய சிறப்பான அறிவிப்பு.
விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக வழங்கப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்ற மிகப்பெரிய விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றலுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்து 500 ஆக வழங்கப்படும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
அண்மையில் நடந்த கேரள மாநில பேரழிவு நாமெல்லாம் அறிந்ததே. அதையொட்டி தமிழ்நாட்டினுடைய மலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ஆகிய மலை நிலப்பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஒரு முழுமையான ஆய்வுகளை செய்வதற்கு முதல்வர் மிக முக்கியமான அறிவிப்பினை வழங்கியிருக்கிறார்கள்.
ஆகவே, மிகச் சிறப்பான அறிவிப்புகளை நம்முடைய முதல்வர் தன்னுடைய இன்றைய சுதந்திர நாள் உரையில் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆளுநர் தேநீர் விருந்தை பொறுத்த அளவில், திராவிடர் கழகம் புறக்கணிப்பதாக தெரிவித்தது. அரசினுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசின் சார்பில் நம்முடைய ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் எல்லோருக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அரசின் சார்பில், ஆளுநர் அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்த விருந்தில் நாங்கள் கலந்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம். அந்த விருந்தில் பங்கேற்கிறோம்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஆளுநர் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தொடர்ந்து அவர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார். அது பற்றி….
ஆளுநரின் இத்தகைய நிலைப்பாடுகளை குறித்து அதற்கான விளக்கங்கள் அவ்வப்போது அமைச்சர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கருத்துக்கள் என்பது வேறு; அரசினுடைய நிலைப்பாடு என்பது வேறு.
ஆளுநர் இத்தகைய கருத்தியல் சார்ந்திருக்கக்கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திமுக இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கின்ற அந்த பதவியின் மீது, அந்தப் பொறுப்பின் மீது முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசினுடைய நிலைப்பாடு என்னவென்றால், அவருடைய பதவிக்கு, பொறுப்பிற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் கொடுத்திருக்கின்ற இந்த அழைப்பினை ஏற்று இந்த விடுதலைத் திருநாள் விழாவில் அவர் அழைத்திருக்கக்கூடிய தேநீர் விருந்தில் நம்முடைய அமைச்சர்கள் அதில் பங்கேற்கிறார்கள்.
ஆளுநர் பதவிக் காலம் முடிந்தும், ஆளுநர் நீட்டிக்கிறார் என்பதைத்தான் கூட்டணிக்கட்சினர் சொல்கிறார்கள். அதையெல்லாம் கடந்துதானே தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நான் ஏற்கனவே சொன்னதுபோல, அரசியல் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாடுகள் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய கருத்தியலில் மாறுபாடுகள் இருக்கலாம், மாச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் ஆளுநர் பொறுப்பு என்கின்ற வகையில், ஆளுநர் பதவி என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு உரிய மரியாதையை நம்முடைய முதல்வர் எப்போதும் அளிக்கிறார். அவர் ஒருபோதும் அளிக்க தவறியதில்லை. எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய அழைப்பினை நாங்கள் ஏற்று அதில் கலந்து கொள்கிறோம் என்று தங்கம் தென்னரசு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


