
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாமின் போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளா், முதல்வா் உள்ளிட்ட 7 பேரை போலீசார், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை என்.சி.சி. முகாம் நடைபெற்றுள்ளது. முகாமில் பங்கேற்ற மாணவிகள், பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கு கட்டடத்தில் தங்கி பயிற்சியில் பங்கேற்றனா்.
இந்த நிலையில், என்.சி.சி. பயிற்சி முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு மாணவியை, பயிற்சியாளர் சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வா் சதீஷ்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என முதல்வர் கூறியுள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி மாணவிக்கு உடல்நலக்குறைவு எற்பட்டுள்ளது. அப்போது, பள்ளி என்.சி.சி. முகாமில் நடந்த சம்பவம் குறித்து, பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
அரசு மருத்துவமனையில் செவியலாக பணியாாற்றும் தாய், தனது மகளை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை ஆகியோா் நேரில், ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாா் (35), பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியா் ஜெனிபா் (35), பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளா்களான சக்திவேல் (39),சிந்து (21), சத்யா (21), சுப்பிரமணி (54) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனா்.
மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியான சிவராமன், சுதாகா் உள்ளிட்ட 2 பேரையும் பிடிக்க நான்கு தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
காவல்துறையினரின் விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த தனியாா் பள்ளியின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.