
மக்களவையில் நேற்றைய ராகுல் காந்தியின் பேச்சில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.
அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம், மக்களவையில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரத்தில் உடனடியாக விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் விவாதம் தொடங்கப்படவில்லை.
இந்தச் சூழலில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை தொடங்கியது.
பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் தொடங்கி வைத்த இந்த விவாதத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாஜகவை கடுமையாக விமா்சித்தாா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக அவா் நிகழ்த்திய முதல் உரை இதுவாகும்.
அவையில் கடவுள் சிவபெருமான், இயேசு கிறிஸ்து, குருநானக் ஆகியோரின் படங்களைக் காண்பித்து பேசிய ராகுல், ‘ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், சமணம் என அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் அஞ்சாமையின் முக்கியத்துவத்தைப் போதிக்கின்றன. சிவபெருமானின் அபய முத்திரை, அஹிம்சையை உணா்த்துகிறது.
ஆனால், தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்கள் குறித்தே பேசுகின்றனா். அவா்கள் ஹிந்துக்கள் அல்லா்’ என்றார்
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று(ஜூலை 1) பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய சில பகுதிகளும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களும் மற்றும் அக்னிவீர் குறித்து பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.