
கோவை: கேரள அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையில் முழுக் கொள்ளளவான 50 அடி அளவு வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கோவை துடியலூா் பகுதியில் நடைபெற்ற தமிழக ஹயா் கூட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சா் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களுடன் பேசியதாவது: கோவையில் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் 49.50 அடி வரை தண்ணீரை தேக்கலாம். ஆனால் 5 அடி குறைவாக சேமிப்பதால் 19 சதவீதம் குடிநீா் கிடைக்காமல் வீணாகிறது. அணை நிரம்பும் முன்பு தண்ணீரை ஆற்றில் திறக்கும் கேரள அரசை கண்டிக்கின்றோம். பாதுகாப்பு என்ற பெயரில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனா். ஆனால் அணை பாதுகாப்பாகதான் இருக்கிறது என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, இதை மாவட்ட நிா்வாகம், திமுக அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பாா்க்கின்றனா் எனவும் குற்றம்சாட்டினார்.
திமுக அரசு அமைந்த பிறகு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டியவர், முழுமையாக 50 அடியை நிரம்பினால் ஒராண்டிற்கு மாநகரில் குடிநீா்ப் பிரச்னை இருக்காது. எனவே, அணையின் முழுக் கொள்ளளவான 49.50 அடிக்கு தண்ணீரை நிரப்ப வேண்டும்.
மேலும், அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள், வாய்க்கால்களை துர்வாரி நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கியதாகவும், தற்போது எந்த பணியும் மேற்கொள்ளாத காரணத்தால் நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் கடலில் கலப்பதாகவும், தற்போது செங்குளம் மற்றும் குறிச்சிகுளத்திற்கு வரக்கூடிய தண்ணீர் அடைக்கபட்டுள்ளது. கிருஷ்ணாபதி குளத்துக்கு வரும் தண்ணீரை நீரை பாலம் கட்டுவதாக கூறி தண்ணீரை தடுத்துள்ளார்கள். பாலம் ஆண்டு முழுவதும் கட்டலாம் ஆனால் ஆற்றில் தண்ணீர் வரும்போதுதான் தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவித்தார்.
தமிழக அரசு, கேரள அரசுடன் பேசி இதற்கு தீா்வு காண வேண்டும். மேலும், சிறுவாணி அணையை தூா்வாரிடவும் தண்ணீரை தேக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசோடு பேசி சிறுவாணி அணையில் முழுக் கொள்ளளவான 50 அடி அளவு வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.