
குஜராத்தின் கோண்டல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ கீதாபா ஜடேஜாவின் மகனான கணேஷ் ஜடேஜா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ,நேற்று (மே. 31) இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் நகரத் தலைவரான தலித் இளைஞரைக் கடத்தித் தாக்கியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் நகரத் தலைவரான சஞ்சய் சோலங்கி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பட்டியலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் படி, ‘கடந்த வியாழக்கிழமை இரவு கல்வா சௌக் பகுதியில் 26 வயதான சஞ்சய் சோலங்கியின் இரு சக்கர வாகனம் மீது காரில் சென்ற கணேஷ் ஜடேஜா உரசுவது போலச் சென்றதால் கவனமாச் செல்லுமாறு அவரிடம் கூறியுள்ளார்.
இதனால், கோபமடைந்த ஜடேஜா தன் நண்பர்களுடன் சஞ்சயை தாதர் சாலை பகுதியிலுள்ள அவர் வீடு வரை காரில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு சஞ்சயின் தந்தை இருந்ததால், அவருக்கு தன்னை முன்பே தெரியும் என்ற காரணத்தால் ஜடேஜா அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர், விடியற்காலை 3 மணியளவில் தன் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்த சஞ்சயை ஜடேஜாவின் காரில் பின்தொடர்ந்த அவரது நண்பர்கள் வேகமாக இடித்துக் கீழே தள்ளியுள்ளனர். இதில் கீழே விழுந்தவரை ஐந்து நபர்கள் கட்டைகளால் தாக்கி காரின் உள்ளே ஏற்றியுள்ளனர்.
சஞ்சயை கோண்டல் பகுதியிலுள்ள ஜடேஜாவின் வீட்டிற்குக் கொண்டு சென்றனர். அங்கு கணேஷ் ஜடேஜா மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் அவரைத் தாக்கியுள்ளனர். அவரை இந்திய தேசிய மாணவர் சங்கத்திலிருந்து விலகச் சொல்லி மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் சஞ்சயை பேஷன் ரோடு பகுதியில் காலை இறக்கிவிட்டுள்ளனர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரென் பேங்கர், ”இந்திய அரசின் புள்ளிவிவரத்தின் படி குஜராத்திலுள்ள 11 மாவட்டங்கள் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதில், தற்போது தாக்குதல் நடந்த ஜுனாகத் மாவட்டமும் அடங்கும்.
பாஜக ஆட்சியில் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. குஜராத்தின் மோசமடைந்து வரும் சட்ட ஒழுங்கை இந்தத் தாக்குதல்கள் வெளிக்காட்டுகின்றன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.