அதிபர் தேர்தலில் பைடன் - டிரம்ப் மீண்டும் மோதல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பற்றி...
பைடன் - டிரம்ப்!
பைடன் - டிரம்ப்!/ ஏ.பி.

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மீண்டும் மோதுவது உறுதியாகியுள்ளது.

அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் 4 மாகாணங்களில் புதிதாக நடத்திய வாக்கெடுப்புகளில் இரு தலைவர்களும்

வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த முடிவு ஏற்பட்டுள்ளது.

81 வயதாகும் ஜோ பைடன், ஜார்ஜியா, ஹவாய், மிசிஸிப்பி, வாஷிங்டன் ஆகிய மாகாணங்களிலும், வெளிநாடுவாழ் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களிடமும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட உள்கட்சி வாக்கெடுப்பில் 254 வாக்குகளைப் பெற்றார். அதையடுத்து, அவருக்கு மொத்தம் 2,107 கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

மொத்தமுள்ள 3,933 கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குகளில் 1,968 வாக்குகள் பெற்றாலே வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட முடியும் என்ற நிலையில், அந்த எண்ணிக்கையை ஜோ பைடன் கடந்துவிட்டதால் அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அதையடுத்து, இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கட்சி வேட்பாளராக பைடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார்.

இதற்கிடையே, ஜார்ஜியா, ஹவாய், மிசிஸிப்பி, வாஷிங்டன் ஆகிய 4 மாகாணங்களிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் டொனால்ட் டிரம்ப் (77) வெற்றி பெற்றார். அந்த 4 பகுதிகளிலும் இருந்து டிரம்ப்புக்கு 161 கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குகள் கிடைத்தன.

இத்துடன், அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவதற்கு 1,241 கட்சிப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மார்ச் 5 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு 1,215 வாக்குகளே போதும் என்ற நிலையில், அந்த எண்ணிக்கையை டிரம்ப் கடந்துள்ளார்.

அதையடுத்து, தேர்தலில் அதிபர் ஜோ பைடனை எதிர்த்து டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக விஸ்கான்ஸின் மாகாணம், மில்வாகி நகரில் வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுக் கட்சி மாநாட்டில் டிரம்ப் அறிவிக்கப்படுவார்.

எப்படி இருக்கும் பிரசாரம்?

கடந்த 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நடைபெற்றதைப் போலவே, இந்தத் தேர்தலிலும் டிரம்ப்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையிலான பிரசாரம் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், அது அமெரிக்க மற்றும் உலக ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று பைடன் கூறிவருகிறார். அதனை மையப்படுத்தியே அவர் தேர்தல் பிரசார உத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது.

அரசியல் பழிவாங்கல், சுயநலன்கள் மீதான அக்கறை ஆகியவற்றின் அடிப்படையிலே டிரம்ப் தேர்தலை சந்திப்பதாகவும், ஜனநாயகக் கட்சி மட்டுமே அமெரிக்க மக்களுக்காக செயல்படும் என்றும் தனது பிரசாரத்தில் பைடன் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கடந்த தேர்தலில் தனது வெற்றியை பைடன் தட்டிப்பறித்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டும் டிரம்ப், அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் என்று பைடனை விமர்சித்துவருகிறார்.

அதிபர் தேர்தல் வேட்பாளராவது உறுதியானவுடன் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜோ பைடனைத் தோற்கடிப்பது மிகவும் முக்கியமானது. அதனால் எப்போதையும்விட மிகத் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபடவேண்டியது அவசியம்' என்று வலியுறுத்தினார்.

எனவே, இந்தத் தேர்தலில் பிரசாரம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1956-க்கு பிறகு முதல்முறையாக...

அமெரிக்காவில் ஒரு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் மோதுவது 1956-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறை.

இதற்கு முன்னர் அந்த ஆண்டில்தான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்வைட் டி. ஐசன்ஹோவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அட்லாய் ஸ்டீவென்சனை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் அதிபர் ஐசன்ஹோவரே மீண்டும் வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியில் நடைபெற்றுவரும் போட்டியில் அதிக எதிர்ப்பில்லாமல் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் மிக வயதான அதிபரான ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், இந்த வயதில் அதிபர் பொறுப்பை வகிக்கும் அவரது உடல்நல தகுதி குறித்தும் விமர்சனங்கள் எழுந்தாலும், கட்சி அவரது பின்னால் அணிதிரண்டுள்ளதை இது காட்டுகிறது.

ஆனால், குடியரசுக் கட்சியில் நடைபெறும் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி உள்ளிட்டோரின் கடுமையான போட்டியை எதிர்கொண்டபிறகுதான் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், கட்சியில் அவருக்கு தொடர்ந்து அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com