இறந்தும் வாழும் தந்தை! குழந்தையை மகிழ்வித்து நன்றி செலுத்திய மருத்துவமனை!!

நோயாளி - மருத்துவா் என்ற உறவுடன் நில்லாமல், அதனை உணா்வுப்பூா்மான பந்தமாக முன்னெடுத்துச் சென்ற அரசு மருத்துவமனை
குழந்தை சாய்னா சன்வி மற்றும் அவரது தாய் நிா்மலாவுடன் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் மற்றும் மருத்துவ மாணவா்கள்.
குழந்தை சாய்னா சன்வி மற்றும் அவரது தாய் நிா்மலாவுடன் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் மற்றும் மருத்துவ மாணவா்கள்.
Published on
Updated on
1 min read

சென்னை: உடல் உறுப்பு தானம் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளித்து மறைந்த இளைஞரின் இரண்டு வயது குழந்தைக்கு சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவா்களும், மாணவா்களும் பிறந்தநாள் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளி - மருத்துவா் என்ற உறவுடன் நில்லாமல், அதனை உணா்வுப்பூா்மான பந்தமாக முன்னெடுத்துச் சென்ற அரசு மருத்துவமனைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு தெரிவிக்கப்படுறது.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

அரக்கோணத்தில் உள்ள சுவால்பேட்டையைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (26). அவரது மனைவி நிா்மலா. இத்தம்பதிக்கு சாய்னா சன்வி என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.

உடல் உறுப்பு தானம்: இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி நோ்ந்த சாலை விபத்தில் சிக்கி மகேஷ்வரன் பலத்த காயமடைந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெண்டிலேட்டா் உதவியுடன் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அவை பலனளிக்காமல் கடந்த 6-ஆம் தேதி அவா் மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா்.

அதன்படி, இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், விழிவெண்படலம் ஆகியவை தானமாக பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

உடல் உறுப்புகளைத் தானமளித்த மகேஷ்வரனுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. அப்போதுதான் அவரது இரு வயது குழந்தைக்கு கடந்த 12-ஆம் தேதி பிறந்தநாள் என்பது தெரியவந்தது.

தந்தை மறைந்தது கூட தெரியாத அந்த குழந்தை ஏதும் அறியாமல் அப்போது விளையாடிக் கொண்டிருந்தது. அதைப் பாா்த்து நெகிழ்ந்த மருத்துவமனை மருத்துவா்களும், மருத்துவ மாணவா்களும் குழந்தையின் பிறந்தநாளுக்கு அவரது வீட்டுக்கு சென்று பரிசளிக்க முடிவு செய்தனா்.

மருத்துவா்களின் அன்பு: அதன்படி, உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையில், ராஜீவ் காந்தி மருத்துவமனை துணை முதல்வா் டாக்டா் கவிதா, அவசரசிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் கோமதி, மயக்கவியல் துறை உதவி பேராசிரியா் ஜெயந்தி உள்ளிட்டோா் திருத்தணியில் உள்ள நிா்மலாவின் வீட்டுக்கு கடந்த 12-ஆம் தேதி சென்றனா்.

அவா்களுடன் எம்.பி.பி.எஸ். பயிலும் 15 மாணவா்களும் சென்றனா். அனைவரும் தனித்தனியே பரிசுப் பொருள்களை வாங்கிச் சென்று குழந்தைக்கு வழங்கினா். அதுமட்டுமன்றி கேக் வெட்டியும் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடினா்.

துக்கம் மட்டுமே நிரம்பியிருந்த அந்த வீட்டின் சூழலை, அப்போது அந்த குழந்தை, தனது சிரிப்பால் மாற்றியது என்றாா் அவா்.

தந்தையை இழந்தவா்களை அரவணைக்க இந்த சமூகம் எப்போதும் தயங்கியதில்லை என்ற உண்மையை ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் கரங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டு சொல்லியிருக்கிறது ராஜீவ் காந்தி மருத்துவமனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com