
புதுதில்லி: அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை பத்திர புதிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (மார்ச் 17) பதிவேற்றம் செய்துள்ளது. இதில் திமுக பெற்ற ரூ.656.5 கோடியில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் வழங்கியுள்ளது.
எஸ்பிஐ 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையிலான தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது. இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டிருந்த ஒருநாள் முன்னதாகவே தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.
ஆனால், தேர்தல் பத்திரங்களின் முழுமையான விவரங்களை ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கவில்லை. அதில் தேர்தல் பத்திர வரிசை எண்கள்?, வாங்கியது யார்?, எந்த தேதியில் வாங்கப்பட்டது?, யார் எவ்வளவு கொடுத்து வாங்கினார்கள்?, எந்த தேதியில் எந்த கட்சி பத்திரங்களை பணம் மாற்றியது? போன்ற விவரங்களை எஸ்பிஐ வழங்க வேண்டும் என மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், எஸ்பிஐ 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரை எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
எஸ்பிஐ வழங்கிய புதிய தகவல்களில் எந்தெந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளன என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.656.5 கோடி பெற்றுள்ளது. இதில், அதிகயளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதேபோன்று அதிமுக ரூ.6 கோடி பெற்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.4 கோடியும், கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் ரூ.1 கோடியும், சென்னையை சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் ரூ.5 லட்சமும் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியுள்ளனர். அப்போது அதிமுக பொருளாராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பாஜக ரூ.6,986.5 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் ரூ.1,334.35 கோடி, பிஜு ஜனதா தளம் ரூ.944.5 கோடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442.8 கோடி, தெலுங்கு தேசம் ரூ.181.35 கோடி, திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, பிஆர்எஸ் ரூ.1,322 கோடி, சமாஜ்வாதி ரூ.14.5 கோடி, அகாலிதளம் ரூ.7.26 கோடி, அதிமுக ரூ.6.5 கோடி, தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.