ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஆந்திரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் வருகின்ற மே 13 அன்று நடக்கவுள்ளது.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் அனைவரும் கடந்த சில நாள்களாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை குறைத்து இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தந்துவிடும் என்று வெறுப்புப் பிரசாரங்களை செய்து வரும் வேளையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு
பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

இதுகுறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, “ஆரம்பம் முதலே நாங்கள் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவே இருந்துள்ளோம். அந்த ஆதரவு எப்போதும் தொடரும். மேலும், ஹஜ் யாத்திரை செல்லும் ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கு நிதியுதவியாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். கங்கிரஸுக்கு எதிரான அலை ஒன்று உருவாகியுள்ளது. அதனால், நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 160 இடங்களிலும், மக்களவைத் தேர்தலில் 24 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றிபெறும்” என்றும் கூறினார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com