ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிஃபிக் தீவில் வசிப்பவர்களின் பாரம்பரிய மாதம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் மே மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில், திங்கள்கிழமை (மே 13) நடந்த கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மரைன் இசைக்குழுவினர் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்பு இந்தியாவின் தேசப்பற்று பாடலான ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை வாசித்து அங்கு கூடியிருந்த ஏராளமான ஆசிய அமெரிக்கர்களை வரவேற்றனர்.
வெள்ளை மாளிகையில் இந்தியாவின் தேசப்பற்றுப் பாடல் இசைக்கப்படுவது ஓராண்டு காலத்திற்குள் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு ஜூன் 23 அன்று அமெரிக்க சென்றபோது இந்த பாடல் இசைக்கப்பட்டுள்ளது.
”இது மிகவும் சிறந்த தருணம். வெள்ளை மாளிகையில் இந்தப் பாடல் இசைக்கப்பட்டது பெருமையாக உள்ளது. இசைக்குழுவினரிடம் பாடலை திரும்ப இசைக்கும்படி கேட்டபோது அவர்கள் திரும்பவும் இசைத்துக் காட்டினர். கடந்த முறை பிரதமர் மோடி இங்கு வந்தபோது இதனை வாசித்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மற்றும் பசிஃபிக் தீவில் வசிப்பவர்களின் பாரம்பரிய மாதத்தில் இந்தப் பாடல் இசைக்கப்பட்டிருப்பது இந்திய - அமெரிக்க உறவின் மீதும், அந்த மக்கள் மீதும் ஜோ பைடன் மற்றும் அவரது குழுவினர் எந்தளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது” என்று கலிஃபோர்னியாவில் வசிக்கும் இந்திய அமெரிக்கத் தொழிலதிபரான பூட்டோரியா கூறினார்.
மேலும், “இந்திய அமெரிக்க உறவு மிகவும் வலுவான ஒன்றாகும். இந்தியாவை குறிப்பிடத்தக்க பலன்களைக் கொடுக்கும் கூட்டணி நாடாக அதிபர் ஜோ பைடன் பார்க்கிறார். இந்தியாவின் வர்த்தகத்தை சீனாவுடன் சமன்படுத்தவும், மேலும் பல கூட்டணி நாடுகளை இணைத்து இதனை செயல்படுத்த விரும்புவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் தாய் என்னிடம் கூறினார்.
இந்திய அமெரிக்க உறவு, மக்களுடன் அனைத்து வகைமைகளிலும் வளர்ந்து வருகிறது. 44 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் அதற்கு முதுகெலும்பாக உள்ளனர். தொழில்கள் மற்றும் அரசுகளுக்கிடையேயான உறவுகளும் நன்றாக வளர்ந்து வருகின்றன. இந்தியப் பிரதமர் மோடி இங்கு வந்து புதிய பாதுகாப்புக் கொள்கைகளில் கையெழுத்திட்டுள்ளார். இனி இரு நாடுகளின் வர்த்தகம் மேலும் வளரும்” என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.