
மக்களவைத் தேர்தலின் 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்து, மேலும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் வரும் நாள்களில் நடக்கவுள்ளன. தேர்தல் முடிவுகள் வருகிற ஜூன் 4 அன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ’பாஜக, காங்கிரஸ் கட்சியினர் சாதி, மதம், இனம், மொழி குறித்து அவதூறு பிரசாரங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தேர்தலுக்காக இந்தியாவின் சமூக - கலாச்சாரச் சூழலைப் பலியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என இரு தேசியக் கட்சிகளுக்கும் இன்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பனஸ்வரா தொகுதியில் பிரதமர் மோடி பிளவுவாதத்தை ஏற்படுத்தும்படி பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்ததால் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், அது நடந்து ஒரு மாதத்திற்குப் பின் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், பாஜகவின் பிரசாரகர்கள், நட்சத்திர பேச்சாளர்களை மத, இன வெறுப்புப் பேச்சுக்களையும், சமூகங்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தும் பிரசாரங்களையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
அதே போன்று, காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி மீது பாஜகவினர் தாக்கல் செய்துள்ளப் புகார்களுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படை குறித்து பேசுகையில் அவற்றை அரசியல் படுத்தக்கூடாது என்றும், ஆயுதப்படைகளின் சமூகப் பொருளாதார அமைப்பு குறித்து பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், அரசியல் அமைப்பு அழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என்பது போன்றத் தவறான பிரசாரங்களைக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
அது மட்டுமின்றி, கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள், தங்களது பேச்சுக்களைத் திருத்திக் கொள்ளவும், பொறுப்புடன் செயல்படவும், தேர்தல் மாண்பைப் பாதுகாக்கவும் அறிவுறுத்தி அறிக்கை வெளியிடுமாறு இரு தேசியக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.