நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கரடி இறைச்சியை சாப்பிட்டதால் புழு தொற்று!

பதப்படுத்தப்பட்டக் கரடி இறைச்சியை சாப்பிட்ட 6 நபர்களுக்கு அரிய வகை ஒட்டுண்ணி புழு தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 மே 2024, 5:01 pm

அமெரிக்காவின் அரிசோனா, மின்னசோட்டா, தெற்கு டகோடா பகுதிகளைச் சேர்ந்த 6 குடும்ப உறுப்பினர்கள் கருப்புக் கரடியின் இறைச்சியை உண்டதால் அரிய வகை ஒட்டுண்ணி புழு தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அந்த இறைச்சி ஒரு மாதத்திற்கும் மேலாக குளிரவைத்து பதப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த மே 23 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரைசினெல்லோசிஸ் (trichinellosis) எனப்படும் இந்த வகைப் புழு தொற்று அமெரிக்காவில் மிக அரிதாகவே பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் 2022 வரை 35 முறை இந்தத் தொற்று குறித்து உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் பெரும்பாலான பாதிப்புகள் கரடி இறைச்சி உண்டதால் ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரைசினெல்லா புழுக்கள் பெரும்பாலும் கரடிகள், காட்டுப்பூனைகள், நரிகள், ஓநாய்கள், வால்ரஸ்கள் போன்றவற்றைத் தாக்குகின்றன. அந்த விலங்குகளைப் பச்சையாகவோ, வேகவைத்தோ உண்பவர்கள் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு 2022-ல் பதிவானதாகும். அதில், மின்னசோட்டா மாகாணத்தில் 29 வயதான ஆண் ஒருவர், காய்ச்சல், கடுமையான உடல் வலி, கண்களின் கீழ் வீக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, அவரது உடலில் எசினோஃபிலியா (eosinophilia) எனப்படும் நோய் எதிர்ப்பு செல்கள் வழக்கத்தை விட அதிகளவில் இருந்துள்ளன. இது நோய்க்கான அறிகுறியாகும்.

15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டாவது முறை அனுமதிக்கப்பட்டபோது கரடி இறைச்சி உண்டதைக் கூறியுள்ளார். பின்னர், மருத்துவக் குழுவினர் ஒட்டுண்ணி புழுத் தொற்றுக்கான மருந்துகளை அவருக்குக் கொடுத்துள்ளனர். டிரைசினெல்லா புழுக்களுக்கு எதிரான மருந்துகளை அவர் எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், இதுபோன்று மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

கருப்புக் கரடி இறைச்சி

கருப்புக் கரடி இறைச்சி

இதுகுறித்த விசாரணையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நோய்வாய்ப்படுவதற்கு ஒரு வாரம் முன்னர் தெற்கு டகோடாவில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள் 9 பேரை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் கருப்புக் கரடியின் இறைச்சியில் செய்யப்பட்ட உணவைச் சமைத்து அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

கனடாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த இறைச்சி, 45 நாள்கள் உறைந்த நிலையில் பதப்படுத்தப்பட்டதாகவும், அதனை காய்கறிகளுடன் சமைத்து அனைவரும் உண்டதாகக் கூறப்படுகிறது.

இறைச்சியில் ஒட்டுண்ணிகள் வராமல் இருக்க அவற்றை பதப்படுத்த வேண்டும் என்று அதனைக் கொடுத்த வேட்டைக்காரர் கூறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில வகை ஒட்டுண்ணிகள் பதப்படுத்தப்படும் உறைநிலையிலும் உயிர் வாழக்கூடியவை. இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள டிரைசினெல்லா புழுக்களும் அந்த வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு சாப்பிட்ட நபர்களில் 6 பேருக்கு இந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அனைவரும் குணமடைந்துள்ளனர்.

டிரிசினெல்லோசிஸ் தொற்று அதிகமாகும்போது ​​புழுக்கள் குடலில் இருந்து எலும்பு தசைகள், இதய தசைகள் மற்றும் மூளை உள்பட நரம்பு மண்டலத்திற்கு இடம்பெயரும். கடுமையான நோய்த்தொற்றுகள் இதய பிரச்னைகள் மற்றும் சுவாசச் சிக்கலை ஏற்படுத்தலாம், சில நேரங்களில் இது மரணத்திற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.