
உலகின் முதல் மரத்தாலான செயற்கைகோளை தயாரித்துள்ள ஜப்பான் அதனை விண்வெளியில் செலுத்தவுள்ளது.
லிக்னோசாட் (LignoSat) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோளை, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகமும், சுமிட்டொ ஃபாரஸ்ட்ரி எனும் நிறுவனமும் இணைந்துத் தயாரித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் லிக்னோசாட் ஏவப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் தயாரிப்பதற்கான வேலைகள் ஏப்ரல் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும். செர்ரி, பிர்ச் மற்றும் மக்னோலியா போன்ற மரங்களை ஆய்வு செய்து, விண்வெளியில் அவற்றின் தாங்கும் திறன்களைக் கணக்கில் கொண்டு அதிக உறுதித்தன்மை மற்றும் தாங்குதிறன் கொண்ட மக்னோலியா மரத்தை தேர்ந்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
10 கன செண்டிமீட்டர் அளவு கொண்ட இந்த செயற்கைக்கோள், பாரம்பரிய ஜப்பானிய தொழில்நுட்பத்தால் ஸ்க்ரூ, பசை எதுவும் பயன்படுத்தப்படாமல் வெளிப்புறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைகள் செய்யப்பட்டு விண்வெளி வீரர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் வராது என்றும், அங்குள்ள நுண்கருவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லிக்னோசாட் திட்டம் சுற்றுசூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. தற்போதைய சர்வதேச விதிகளின் படி, செயற்கைகோள்கள் விண்வெளியில் குப்பைகளாக மாறுவதைத் தடுக்க அவற்றின் பணிக்காலம் முடிந்த பின் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைய வேண்டும். ஆனால், அவ்வாறு நுழையும் செயற்கைக்கோள்கள் உண்டாக்கும் உலோகத் துகள்கள் காற்று மாசு ஏற்படுத்துகின்றன.
ஆனால், மர செயற்கைக்கோள்கள் பூமியில் நுழையும் போது எரிந்து காற்று மாசு அபாயத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
”அடுத்தக்கட்டமாக நிலா மற்றும் செவ்வாயில் மரத்தின் மூலம் செய்யப்பட்ட மனிதர்களுக்கான வாழ்விடங்களை வரும் காலங்களில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று விண்வெளி வீரர் தகோ தொய் கூறினார்.
விண்வெளியில் ஏவப்பட்டு முதல் ஆறு மாதங்களில், மரத்தின் விரிவு, சுருக்கம் தொடர்பான தரவுகள், உள் வெப்பநிலை, புவிகாந்தவியல், மின்னணு சாதனங்களின் செயல்திறன் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டு கியோட்டோ பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப நிலையத்தால் பெறப்பட்டு, அதன் மூலம் லிக்னோசாட் - 2 தயாரிப்பை மேம்படுத்த இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.