வங்கி ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்து, நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு இந்த சம்பவம் பெருமைமிக்கதாக அமைந்துள்ளது என்றார் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்.
கடந்த வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்து, தமிழகம் நோக்கி வந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் வெப்படை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்தச் சம்பவத்தில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முகமது ஹஸ்ரு என்ற மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஐந்து பேர் பிடிபட்டனர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி, உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரையும் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் புதன்கிழமை நண்பகல் ஒரு மணி அளவில் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், நலம் விசாரித்து அவர்களுக்கான வெகுமதியை வழங்கி பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் மற்றும் மூன்று துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பிடிபட்ட சம்பவம், நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது, கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் டி. செந்தில்குமார், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் இ.எஸ்.உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் உடனிருந்தனர்.