மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடிகை ஹன்சிகா மோத்வானி சாமி தரிசனம் செய்தாா்.
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 3000 முதல் 5000-க்கும் மேற்பட்ட மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து விமான மூலம் சனிக்கிழமை மாலை தனது தாயாருடன் மதுரை வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, இரவு தனியார் விடுதி ஒன்றில் தங்கி ஓய்வு எடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்வதற்காக தனது தாயாருடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, அம்மன் சன்னதிக்கு சென்றவர் அங்குள்ள சித்தி விநாயகரை வழிபட்டாா். பின்னா் மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டு சாற்றப்பட்டு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை பூஜைகளில் மனமுருக வழிபாடு நடத்தினாா்.
இதையும் படிக்க | அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களுக்கு மழை!
அதைத் தொடா்ந்து சொக்கநாதர் மற்றும் முக்குறுணி விநாயகரையும், சுவாமி சன்னதியிலும் தரிசனம் செய்த அவா், தங்க கொடிமரத்தை வலம் வந்து வழிபட்டாா். பின்னர் கோயில் பிரகாரங்களையும் வலம் வந்து வழிபட்டாா்.
ஹன்சிகா மோத்வானி வருகையையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் நடிகை ஹன்சிகா மோத்வானி பேசுகையில், மதுரைக்கு வந்திருந்து மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
கோயிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர், பிற்பகல் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.