திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் தீட்டாகிவிடுமா? முதல்வர் கேள்வி.
stalin
மேடையில் பேசும் முதல்வர் ஸ்டாலின்.படம்: டிஐபிஆர்
Published on
Updated on
2 min read

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வனத்துறை அமைச்சர் க. பொன்முடியின் “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது:

சட்டமன்றத்தில் திராவிட மாடல் - என்று எழுதி கொடுத்தால் பேச மாட்டார்! இந்தி மாத விழா நடத்தக் கூடாது-என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க! ஏன், “திராவிடநல் திருநாடு”-என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படி பாடினால் சிலருக்கு, வாயும் வயிறும் மூளையும் – நெஞ்சும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம்! ‘திராவிடம்’ என்பது ஒருகாலத்தில் இடப்பெயராக – இனப்பெயராக – மொழிப்பெயராக இருந்தது.

ஆனால், இன்றைக்கு, அது, அரசியல் பெயராக – ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிப் பெயராக உருவெடுத்திருக்கிறது! ’திராவிடம்’ என்பது ஆரியத்திற்கு ’எதிர்ப்பதம்’ மட்டுமல்ல; ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்! அவர்களுக்கு கலைஞரின் முழக்கத்தை நான் நினைவுபடுத்துகிறேன், “கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக – இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் – சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!” இந்த முழக்கத்தை நிலைநாட்ட தான், திராவிட மாடல் இருக்கிறது!

திராவிட மாடல் ஆட்சி என்பது, மனு நீதியை மாற்றி, மக்களுக்கு சமநீதி – சமூகநீதி – சமவாய்ப்பை உறுதி செய்யும். இதைத்தான், இந்த புத்தகத்தின் 182-ஆவது பக்கத்தில் நம்முடைய பொன்முடி குறிப்பிடுகிறார். ”திராவிட இயக்கம் சாதியற்ற, சமத்துவ சமுதாயத்தைக் கனவு கண்டது. அதனால் திராவிட இயக்கத்தின் பெரும்பாலான இலக்குகள், அரசியல் அல்லது பொருளாதார நோக்கை விடவும் சமூகநோக்கில் இருந்தன”-என்று மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். அதனால்தான் நம்முடைய முழக்கம் என்பது, 'எல்லார்க்கும் எல்லாம்'-என்று எளிமையாக சொல்கிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதோடு, அனைத்து சமூகங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். இதை எளிமையாகவோ – சீக்கிரமாகவோ – நிறைவேற்றிட முடியாது.

ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை – ஒடுக்குமுறையை – பழமைவாத மனோபாவத்தை – 100 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது! ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் என்பதை மட்டும், என்னால் உறுதியாக சொல்ல முடியும்!

எனவே, இன்றைய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் கடந்து வந்த வரலாற்றை, அறிந்து கொள்ளுங்கள்! பொன்முடி அவர்களைப் போல், நம்முடைய இளைஞர்களும் திராவிட இயக்கம், இந்த மண்ணில் நிகழ்த்தி காட்டிய புரட்சி – அதனால் விளைந்திருக்கும் நன்மைகள் திராவிட இயக்கத்தின் தாக்கம் அதனால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவேண்டும்! அவற்றை புத்தகங்களாக வெளியிடவேண்டும்! அப்படி செய்தால்தான், நம்முடைய இயக்கம் என்ன சாதித்திருக்கிறது என்பது, உலகம் முழுவதும் சென்றடைய முடியும்! அந்தக் கடமை உங்கள் கைகளில் இருக்கிறது.

கொள்கைகள் தான் நம்முடைய வேர்! கொள்கைகளை வென்றெடுக்கத்தான், கட்சியும் ஆட்சியும்! கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது! அதற்கு, ”திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” போன்ற இன்னும் பல வரலாற்று நூல்கள் உருவாகவேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com