கோப்புப் படம்
கோப்புப் படம்

யூத மதகுருவைக் கொன்ற 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர யூத அமைப்பான சாபாத் ஹஸிதிக் இயக்கத்தின் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2024 நவம்பர் 21 அன்று மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகாரளித்த நிலையில் நவ.24 அன்று அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரது கொலையில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் அமீரகத்திலிருந்து துருக்கி நாட்டிற்கு தப்பி சென்றனர். பின்னர், அமீரக அதிகாரிகளின் கோரிக்கையின் படி அவர்கள் 4 பேரையும் கைது செய்த துருக்கி அதிகாரிகள் மீண்டும் அமீரகத்துக்கு நாடு கடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கானது கடந்த ஜனவரி மாதம் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டினர் கோகனை பின் தொடர்ந்து அவரை கடத்தி கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து, சேகரிக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்கள், கொலையாளிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் அபுதாபி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தீவிரவாத நோக்கங்களுடன் இந்தக் கொலை அரங்கேறியுள்ளதாகக் கூறிய அபுதாபி நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் கடந்த மார்ச் 31 அன்று மரண தண்டனையும் அவர்களுக்கு உதவிய 4-வது நபருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும், ஐக்கிய அமீரகத்தின் சட்டத்தின் கீழ், ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அந்த வழக்கானது தானாகவே மேல்முறையீடு செய்யப்பட்டு மறுஆய்வுக்காக கூட்டாட்சி உச்ச நீதிமன்றத்தின் குற்றவியல் பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே, இந்த வழக்கும் மேல் முறையீடு செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிக்க: பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com