

சென்னையில் வடமாநில இளைஞரின் குடும்பத்தையே கொலைசெய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய பிரேமலதா விஜயகாந்த், குழந்தையையும் சுவரில் அடித்துக் கொலை செய்ததைக் கேட்கும்போது, நாமெல்லாம் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்தானா? என்று கேட்கத் தோன்றுகிறது.
பிகாரில் இருந்து பிழைப்பைத் தேடிவந்த ஒரு குடும்பம். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. ஆனால், இன்றைய நிலைமையைப் பார்க்கும்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்தத் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உச்சபட்சமாக மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராயம் என அனைத்தும் உள்ளது. ஆனால், இந்தச் சம்பவம் மனித இனத்துக்கே அவமானம் மற்றும் தலைகுனிவை ஏற்படுத்துவதாய் உள்ளது. அவர்களை உறுதியாகத் தூக்கிலிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
சென்னை தரமணியில் பிகாரை சேர்ந்த இளைஞர் கௌரவ் குமார் என்பவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களின் குழந்தை உள்பட மூவரையும் கொலைசெய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.